திருவண்ணாமலையில் பத்து கை விநாயகர், உடுக்கை, சூலத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகர் என 80 சிலைகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தும்பிக்கை ஆழ்வார், யானைமுகன், பிள்ளையார், கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் விநாயகரை வணங்கிச் சென்றால் செயல் வெற்றி பெற்று, அந்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
விநாயகப் பெருமானின் பிறந்தநாள் என்றும் அழைக்கப்படும் விநாயக சதுர்த்தியை இந்துக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், பக்தியுடனும் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்தி பிரமாண்ட ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.
வருகிற 7ந் தேதி விநாயகர் சதுர்த்தி நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 11:03 முதல் மதியம் 01:34 வரை விநாயகர் பூஜைக்கு உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த சன்னதி மட்டுமன்றி கோயிலுக்குள் உபசன்னதிகளாக அருள்மிகு சிவகெங்க தீர்த்த விநாயகர் சன்னதி, அருள்மிகு வன்னிமரத்து விநாயகர் சன்னதி, அருள்மிகு சண்முக விநாயகர் சன்னதி, அருள்மிகு வீனை தீர்த்த விநாயகர் சன்னதி, அருள்மிகு ஆனைதிறை கொண்ட விநாயகர் சன்னதி அருள்மிகு விசயராகவ விநாயகர் சன்னதி, அருள்மிகு ஆலமரத்து விநாயகர் சன்னதி போன்ற சன்னதிகள் உள்ளன.
திருவண்ணாமலை நகரில் இந்து முன்னணி சார்பில் 110 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 1000 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வேங்கிக்கால் அறிவியல் பூங்கா எதிரில் குறிஞ்சி நகரில் ஸ்ரீகாயத்திரி நிறுவனத்தில் நாலரை அடி முதல் 10 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் காகித கூழ், கிழங்கு மாவு, போன்ற தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பத்து கை விநாயகர், பின்னால் பெரிய சூலத்துடனும், உடுக்கை மீது உட்கார்ந்து கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகர், நந்தி மற்றும் ஆஞ்சநேயர் சுமந்து வருவது போன்ற விநாயகர், யானை, சிங்கம், நந்தி மீது உட்கார்ந்திருக்கும் விநாயகர் என 35 வகை கொண்ட 80 விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிலைகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இது குறித்து ஸ்ரீகாயத்திரி காகித விநாயகர் சிலை தயாரிப்பு உரிமையாளர் சேகர் செய்தியாளரிடம் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள காகித சிலைகள், நீர் நிலைகளில் கரைப்பதற்கு உகந்தது ஆகும், இதனால் மீன்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. ரூ.3 ஆயிரத்து 500லிருந்து ரூ.35 ஆயிரம் வரையில் எங்களிடத்தில் சிலைகள் விறபனைக்கு உள்ளது என்றார்.
மற்ற ஊர்களில்…
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய குடைவரை கோயிலாகும். விநாயகர் சதுர்த்தியை யொட்டி நடைபெறும் தேர் திருவிழா, சந்தனகாப்பு அலங்காரம், தீர்த்தவாரி உற்சவம், இரவு வெள்ளி மற்றும் தங்க வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெறும்.
மலையை வலம் வரும் பக்தர்கள்
கணபதிபுலே என்பது மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் கடற்கரையில் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். தமிழகத்தில் திருச்செந்தூரில் கடற்கரையில் முருகப்பெருமான் வீற்றிருப்பது போல் இந்நகரில் விநாயக பெருமான் வீற்றிருக்கிறார். கணபதிபுலேவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கணபதி சிலை மண்ணில் இருந்து சுயம்புவாக வெளிவந்ததாகவும், அதனை கொண்டு கோயில் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.
தீபாவளி முதல்நாள், விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் பவுர்ணமி அன்று இரவு விளக்குகள் திருவிழா என்று கோயில் மின்விளக்குகளால் ஜொலிப்பது கண்கொள்ளாகாட்சியாகும். மலை அடிவாரத்தில் உள்ள கணபதிபுலே கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலையை சுற்றி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்
படங்கள்- பார்த்திபன்