சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கு மேலான பழங்குடி மக்கள் சரியான வாழ்க்கை முறை இல்லாமல் இருப்பதை கேட்டு நாம் தலை குனிய வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள விளாங்குப்பம் கிராமத்தில் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பழங்குடியினருடன் உணவு
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, செல்வ மகள் சேமிப்பு கணக்குப் புத்தகங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த பழங்குடியின மகளிர், மலைப்பகுதியில் விளைகின்ற சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களையும், கொய்யா, சப்போட்டா போன்ற பழ வகைகளையும் பரிசளித்தனர். பழங்குடியின மக்களுடன் கவர்னர் உணவருந்தினார். மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
விழாவின் ஒருபகுதியாக, மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மத்திய மக்கள் தொடர்பகத்தின் கண்காட்சி, இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் கண்காட்சி, ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் போஷன் அபியான் கண்காட்சி, அஞ்சல் துறையின் ஆதார் பதிவு முகாம் ஆகியவை நடைபெற்றன.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் மாவட்ட மேலாளர் கவுரி, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் விஜயலட்சுமி, ஊரக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் டாக்டர் அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது,
ஜவ்வாது மலைக்கு நான் மூன்றாவது முறையாக வருகிறேன். இதற்கு காரணம் உங்களுடைய நல்ல எண்ணங்கள், நல்ல குணங்கள் என்னை திரும்பத் திரும்ப இழுத்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கு மேலான பழங்குடி மக்கள் சரியான வாழ்க்கை முறை இல்லாமல் இருப்பதை கேட்டு நாம் தலை குனிய வேண்டும்.
இந்த மாதிரி நிலைமை இருப்பதை ஒரு காலமும் பொறுத்துக் கொள்ள முடியாது. நமது நாட்டின் பிரதமர் மோடி ஜி எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்த பழங்குடி மக்களின் வாழ்வை உயர்த்த உறுதி பூண்டிருக்கிறார். சற்று முன் கலெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பழங்குடியின மக்களுக்கு ஆதார் கார்டு, கிசான் கார்டு இந்த மாதிரி உள்ள கார்டுகள் எல்லாம் இருக்கிறதா? என்று கேட்டேன். ஏன் என்றால் இந்த மாதிரி கார்டுகள் இருந்தால்தான் நீங்கள் எல்லாம் அரசின் திட்டங்களை பெற முடியும்.
வருத்தமான விஷயம்
பொருளாதாரத்தை பொருத்தவரை இந்தியா உலகத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மிகவும் வேகமாக வளரக்கூடிய பொருளாதாரம் இந்தியாவில் தான் இருக்கிறது. இந்தியா விண்வெளிக்கு ராக்கெட் மேல் ராக்கெட் அனுப்பி கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் இந்த மாதிரி பழங்குடி மக்களுடைய நிலைமை மேலுக்கு வராதது வருத்தமான விஷயம் தான்.
இங்கு இருக்கிற குழந்தைகள் நகரத்தில் உள்ள குழந்தைகள் மாதிரி டாக்டராகவும், இன்ஜினியராகவும் வர வேண்டும். பழங்குடியினர் வாழும் இடங்களுக்கு சென்று இருக்கிறேன். அங்கு அவர்கள் அணிந்திருக்கிற ஆடைகளை பார்த்திருக்கிறேன். பழங்குடியினர் என்றால் பின்தங்கியவர்கள் என்பது அர்த்தமல்ல. அது ஒரு கலாச்சாரத்தை குறிக்கிறது. பழங்குடி மக்களும் எல்லா மக்களும் போல சமமாக எல்லா வகையான வசதிகளையும் பெற்று மேலும் மேலும் வளர வேண்டும்.
தமிழகத்தில் முத்ரா வங்கி கடன் திட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பேர் மூலம் பயனடைந்திருக்கிறார்கள். நீங்கள் பெரிய அளவில் கடன் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிறிய அளவில் கடன் வாங்கி தொழில் செய்யலாம். இவையெல்லாம் எளிதில் கிடைக்கக்கூடிய கடன்கள் ஆகும்.
பழங்குடியின சான்று தேவை
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கு தரப்படுகிறது. நீங்கள் எல்லாம் பழங்குடியினர் சான்று வைத்திருந்தால்தான திட்டங்கள் எல்லாம் பெற்று பயனடைய முடியும். எல்லோரும் கண்டிப்பாக அந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக வங்கியிலும் கணக்கிருக்க வேண்டும். அப்போதுதான் கிசான் திட்டத்தில் அரசின் உதவி கிடைக்கும்.
உங்கள் குழந்தைகள் எல்லோரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் வேண்டுமென்றால் அவர்களுக்கு கல்வி தேவை. இதற்கு பள்ளிக்குச் செல்ல வேண்டும். நான் சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை கண்டறிந்து இருக்கிறேன். சில நேரம் வருமானம் காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பாரம்பரிய தொழிலுக்கும், மற்ற வேலைகளுக்கும் அனுப்புகிறார்கள். இது மிகவும் தவறு.
நான் கண்டிப்பாக ஜவ்வாது மலைக்கு திரும்பத் திரும்ப வரப்போகிறேன். 10,15 வருடங்கள் ஆனாலும் கண்டிப்பாக ஜவ்வாதுமலைக்கு வருவேன். நான் வரும்போது நீங்கள் எல்லாம் நல்ல உயர்தர வாழ்க்கை நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
இவ்வாறு அவர் பேசினார்.
1 நிமிடம் தமிழில் பேச்சு
முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி, “இங்கு கூடியிருக்கும் சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். சில வாக்கியங்களை தமிழில் பேசுவேன். தமிழ் ஒரு மிக முக்கியமான மொழி. தமிழ் மக்களைப் போல தமிழ் பேச வேண்டும் எனது விருப்பமாகும். ஒருநாள் உங்களைப் போல தமிழ் பேசுவேன். நண்பர்களே இன்று வருவதற்கு காரணம் உங்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கு” என 1 நிமிடம் தமிழில் பேசினார்.
அவர் தமிழில் பேசியதை மலைவாழ் மக்கள் கைதட்டி வரவேற்றனர்.