சாலை விரிவாக்கத்திற்காக திருவண்ணாமலை தேனிமலையில் 100 வருட மரங்கள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரிய இயந்திரங்கள் உதவியுடன் அகற்றப்பட்டன.
மாநகராட்சியான திருவண்ணாமலையிலிருந்து திருக்கோயிலூர் செல்லும் சாலையும், கள்ளக்குறிச்சி செல்லும் சாலையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. மணலூர்பேட்டை செல்லும் சாலை இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
திருக்கோயிலூர் செல்லும் சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி செல்லும் சாலை நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தண்டராம்பட்டு சாலை, தேனிமலை, நல்லவன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வாழவச்சனூரில் 3 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
திருவண்ணாமலை தேனிமலையில் கெங்கையம்மன் கோயில், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் பின்புறம் 100 வருடம் பழமையான அரச மரங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எல்லையில் இருந்தன.
இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த மரங்களை அகற்றும் பணியில் இறங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அதிகாரிகள் மரங்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததை பொதுமக்களுக்கு அளந்து காட்டினர். கோயிலின் மதில்சுவரும் ஆக்கிரமிப்பில் வருகிறது. இருந்தாலும் மரங்களை மட்டும் அகற்றுகிறோம் என அதிகாரிகள் சொன்னதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு எக்ஸ்கவேட்டர், கேரி டெக் கிரேன் ஆகிய பெரிய இயந்திரங்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரத்தின் உதவியோடும் 100 வருட மரங்கள் கோயில்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சிறிது, சிறிதாக வெட்டி எடுக்கப்பட்டன. காலை தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.
பிரச்சனைகள் ஏதும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் அதிரடி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி, கோட்ட பொறியாளர் பி.ஞானவேலு, உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர் செல்வகணேஷ் ஆகியோரது மேற்பார்வையில் ஏராளமான நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போக்குவரத்து மிகுந்த சென்னை செல்லும் சாலையில் எஸ்.கே.பி கல்லூரி முன்னதாக சாலை குறுகலாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் வேலூர் சாலையும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக வேங்கிக்காலில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இக்குறைகளை போக்க அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நான்கு வழிச்சாலையில் அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை வைக்க வேண்டும் எனவும், நிழற்குடைகளை அமைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.