கலசப்பாக்கம் அருகே நடந்த விபத்தில் 2 பேர் இறந்தனர். காரை உடைத்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மோதிய அரசு பஸ் கடையை உடைத்து கொண்டு மரத்தில் மோதி நின்றது
திருக்கோயிலூரை அடுத்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். தேவிகாபுரம் அடுத்த உள்ள ஊத்தூரான் கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஞானசேகரன், தனது மனைவி வளர்மதி. மற்றும் மருமகள் ஜெயந்தி, ஜெயந்தியின் குழந்தை ரிதன்யா ஆகியோருடன் சென்றிருந்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஞானசேகரன் குடும்பத்தார் மகேந்திரா வெரிட்டோ வாகனத்தில் இன்று சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
கலசப்பாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு என்ற இடத்தில் கார் வந்த போது திருவண்ணாமலையிலிருந்து போளூர் நோக்கிச் சென்ற அரசு பஸ் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி அருகிலுள்ள கடையை உடைத்துக் கொண்டு மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் கார் டிரைவர் மற்றும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஞானசேகரனின் மனைவி வளர்மதி (வயது 55) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரின் பின்பகுதியில் பயணம் செய்த ஞானசேகர், ஜெயந்தி மற்றும் அவரது குழந்தை ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இரு சக்கரத்தில் வந்து விபத்தில் சிக்கிய வேலு என்பவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த டிரைவர் மற்றும் வளர்மதியின் உடல்களை அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி காரை உடைத்து மீட்டனர். இந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் லோகநாதனை (50) கைது செய்தனர்.