Homeசெய்திகள்கலெக்டர் காலை பிடித்து பெண்கள் கதறல்

கலெக்டர் காலை பிடித்து பெண்கள் கதறல்

சாலை விரிவாக்கத்திற்காக 120 வீடுகள் இடிக்கப்படுவதால் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் காலில் விழுந்து பெண்கள் கதறி அழுதனர்.

ஆற்காடு-திண்டிவனம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.139 கோடியில் செய்யாறு-வந்தவாசி-திண்டிவனம் இடையே 21.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. மேலும் 3 உயர்மட்ட பாலங்களும் அமைக்கபட உள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்த பணிகள் தொடங்கின. இந்த சாலை அமைக்கப்படுவதனால் திருப்பதி, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், சென்னை, பாண்டிச்சேரிக்கு விரைவாக செல்ல முடியும்.

இந்நிலையில் இந்த சாலை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்க உள்ளது. ஒரே பகுதியில் இருக்கும் 120 வீடுகள் அகற்றப்படுகிறது. வீடுகளை காலி செய்யக் கோரி கடந்த ஆகஸ்டு மாதம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து குடியிருப்பாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் சென்று மாற்று இடம் கேட்டு முறையிட்டனர். மேலும் ஆர்ஜிதம் செய்யப்படும் இடத்தை தாண்டி உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தில் மனைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்படி தந்தால் எதிர்காலத்தில் இந்த நான்கு வழிச்சாலை, ஆறு வழி, எட்டு வழி என மாற்றப்படும் போது மீண்டும் வீடுகள் அகற்றப்படும் சூழ்நிலை ஏற்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

See also  அடடே இப்படி ஒரு பள்ளியா? பிரமித்த சட்டமன்ற கணக்கு குழு

கலெக்டர் காலை பிடித்து பெண்கள் கதறல்

இந்த நிலையில் 1 வார காலத்திற்குள் வீடுகளை காலி செய்யவில்லை என்றால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தில் இருக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிட்டு 2வது நோட்டீசை நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கினர்.

அந்த நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது,

ஆற்காடு- திண்டிவனம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பாலம் கட்டுதல், சிறுபாலங்கள் திரும்ப கட்டுதல் மற்றும் அகலப்படுத்துதல், வடிகால் கட்டுதல், தடுப்பு சுவர் கட்டுதல், பேருந்து ஒதுங்கு தளம் அமைத்தல் மற்றும் பாவு தளம் அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு 27.08.2024 அன்று காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, ஏழு தினங்களுக்குள் ஏதாவது ஆட்சேபனை இருப்பின் அதன் விவரத்தை இவ்வலுவலகத்திற்கு நேரிலோ அல்லது கடிதத்தின் மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், தாங்களாகவே முன்வந்து, வருகிற 17.09.2024 முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தர கோரப்படுகிறது. தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை சட்டம் தமிழ்நாடு Highways Act 2001 பிரிவு 28(2)ii.இன் படி நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, வருவாய்துறை மற்றும் மின்வாரிய ஊழியர்களுடன் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்.

See also  கஞ்சா போதையில் பணம் பறிப்பு- பொதுமக்கள் தர்ம அடி

இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு இத்துறை பொறுப்பேற்காது. மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள பொருட்கள் இத்துறையின் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் காலை பிடித்து பெண்கள் கதறல்

இந்த முறை வீடுகள் இடிக்கப்படும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட பெண்களும் மற்றும் ஆண்களும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்று இடம் கேட்டு மனு கொடுக்க வந்தனர். அப்போது பால் உற்பத்தியாளர்களுடான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொள்ள வருகை தந்ததால் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சிறிது நேரத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அலுவலகத்திற்கு வருகை தந்தார். காரில் இருந்து அவர் இறங்கியதும் அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள் தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதாகவும், மாற்று இடம் தங்களுக்கு வழங்க வேண்டும் என 100-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். அப்போது ஒரு பெண் கலெக்டரின் காலை பிடித்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் இன்னொரு பெண்ணும் காலில் விழுந்து கதறினார். மாற்று இடம் தர ஆலோசிக்கப்படும் என கலெக்டர் சொன்னதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

See also  மாநகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை கிடைக்குமா? கலெக்டர் பதில்

செய்யாறு தாலுகா பூண்டி கீழ்மட்டை, வந்தவாசி சாலை அனக்காவூர் பிடிஓ ஆபீஸ் அருகில் மற்றும் வந்தவாசி-செய்யாறு சாலையோரம் வசிப்பவர்கள் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் பூர்வகுடிகளாக மின் இணைப்பு பெற்று, மின்சார கட்டணம், வீட்டு வரி, குடிநீர் குழாய் வரி முறைப்படி செலுத்தி அரசு கொடுக்கும் 100 நாள் கூலி வேலை செய்து குடியிருந்து வருகிறோம்.

கலெக்டர் காலை பிடித்து பெண்கள் கதறல்

எங்கள் இடத்தை விட்டு காலி செய்தால் எங்களுக்கு இருக்க வேறு குடிமனை கிடையாது. நாங்கள் கூலி வேலை செய்து வறுமையில் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு மாற்று இடம் கொடுத்து நிரந்தர குடிமனை பட்டா வழங்குமாறும், அதில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் வந்த நேரம் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!