Homeசெய்திகள்பாலத்தை இடித்த வனத்துறையினர் சிறைபிடிப்பு

பாலத்தை இடித்த வனத்துறையினர் சிறைபிடிப்பு

- Advertisement -

ஜமுனாமரத்தூரில் 10 கிராமங்களை இணைக்கும் வகையில் போடப்பட்ட தரைபாலத்தை வனத்துறையினர் இடித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை சிறைபிடித்து பேராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலையில் ஓர் அங்கமான ஜவ்வாதுமலை அமைந்திருக்கிறது. ஜவ்வாதுமலையின் மொத்த பரப்பளவு 260 சதுர கிலோ மீட்டர் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 2315 அடி முதல் 3300 அடி வரை உயரத்தில் உள்ளது.

பாலத்தை இடித்த வனத்துறையினர் சிறைபிடிப்பு
ஜமுனாமரத்தூரின் அழகிய தோற்றம்

ஜவ்வாதுமலைக்கு போளூர், செங்கம், ஆலங்காயம், கண்ணமங்கலம் ஆகிய நான்கு வழித்தடங்களில் போக்குவரத்து சாலைகள் அமைந்துள்ளன. இங்கு அமைந்துள்ள பல்வேறு மலை கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் திண்டாடி வருகின்றன. இதனால் மலைவாழ் மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதி கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். அவரது உடலை சொந்த ஊரான எலந்தம்பட்டு மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி எடுத்துச் சென்ற அவலமும் நடந்தது.

See also  அரசு ஏற்பாட்டில் 384 பேருக்கு வேலை கிடைத்தது

இதே போல் வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதி அத்திமரக்கொல்லையைச் சேர்ந்த பிறந்து 18 மாதங்களே ஆன குழந்தை தனுஷ்காவும் மருத்துவசதி இன்றி இறந்தது. மோசமான சாலையில் ஆம்புலன்ஸ் வரமுடியாததால் கர்ப்பிணி மற்றும் நோயாளிகளை மருத்துவமனைக்கு டோலி கட்டித் தான் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் சாலைகள் நடந்து செல்ல முடியாத படி குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. சாலை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஜமுனாமரத்தூருக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியிடமும் மனு அளிக்கப்பட்டது.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஜமுனாமரத்தூரில் ஒன்றியம் குட்டக்கரை ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரிலிருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் பக்கத்தில் உள்ள ஆற்றிலிருந்து தண்ணீர் வந்து சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இந்த சாலையை சிமெண்ட் சாலையாக அமைத்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

See also  திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

இந்நிலையில் குட்டக்கரையிலிருந்து பாதிரி கிராமம் வரை தரைப்பாலம் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரார் ஈடுபட்டார். சில லட்சங்கள் செலவு செய்து 10 மீட்டர் அளவு பாலம் அமைக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டு அங்கு ஜே.சி.பியுடன் வந்த வனத்துறையினர் அந்த தரைபாலத்தை இடிக்க ஆரம்பித்தனர். தங்கள் கண் முன்னே அழகான சிமெண்ட் பாலம் சுக்குநூறானதை பார்த்து கிராம மக்கள் வேதனை அடைந்தனர்.

பாலம் இடிக்கப்படுவதை கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான பேர் அங்கு திரண்டு வந்து வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஜே.சி.பியையும், வனத்துறையினரையும் சிறைபிடித்தனர். 2 மணி நேரமாக போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி 25 நாட்களுக்குள் சாலையை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட வனத்துறையினரை கிராம மக்கள் விடுவித்தனர்.

இது தொடர்பாக குட்டக்கரை மக்கள் கூறுகையில், அனுமதி இல்லாமல் பாலம் அமைத்ததாக கூறி அதை வனத்துறையினர் இடித்து விட்டனர். 10 கிராமங்களை இணைக்கும் சாலை அமைந்தால் கல்வி பயிலவும், மருத்துவ வசதிக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இந்த சாலை இல்லாவிட்டால் அடர்ந்த காட்டு பகுதி வழியாகத்தான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். இரவு நேரங்களில் செல்ல முடியாது. மற்ற பகுதிகளில் சாலை அமைக்கும் போது அமைதியாக இருந்த வனத்துறையினர் இந்த பாலத்தை மட்டும் குறி வைத்து இடித்தது ஏன் என தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

See also  விபத்து-காரை உடைத்து உடல்கள் மீட்பு

இது பற்றி வனத்துறையினரிடம் கேட்ட போது வனத்துறை பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும். குட்டக்கரை-பாதிரி வரை சாலைதான் அமைக்கப்பட்டது. பாலம் அல்ல. சாலை அமைக்க உரிய அனுமதி பெறப்படவில்லை. இதனால் இடித்தோம். ஊரக வளர்ச்சி துறையினர், முறையாக அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் பார்த்து டெண்டர் விட்டால் இந்த மாதிரியான பிரச்சனைகள் வராது என்றனர்.

- Advertisement -
email
contact@agnimurasu.com -ல் செய்தி, கட்டுரைகளை அனுப்பலாம்.

Must Read

error: Content is protected !!