துண்டு போட்டு, வரவேற்க வேண்டியது, உபசரிக்க வேண்டியது இதையெல்லாம் செய்து விட்டு ஓட்டு போடும் போது மட்டும் மாற்றி போடலமா? என யோசிக்கிறார்கள் என அமைச்சர் எ.வ.வேலு ஆதங்கத்துடன் கூறினார்.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வண்ணம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எ.வ.வேலு இன்று திறந்து வைத்தார்.
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக ஆண்டு தோறும் 90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். அப்போது அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அகரம்பள்ளிப்பட்டு தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் மாத கணக்கில் இந்த பகுதியை கடந்து செல்ல முடியாது. மாற்று வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி கொண்டுதான் மற்ற ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அகரம் பள்ளிப்பட்டு, தொண்டமானூர், தென்முடியனூர், மூங்கில்துறைப்பட்டு, தண்டராம்பட்டு, ராயண்டபுரம், அல்லப்பனூர், பிகுயிலம், எடத்தனூர், திருவடத்தனூர், புத்தூர்செக்கடி, கிருஷ்ணாபுரம், சதாகுப்பம், வாழவச்சனூர், இளையாங்கன்னி, பெருந்துறைப்பட்டு ஆகிய 16 கிராமங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலைக்கு இனி கரும்பை சுற்றிக் கொண்டு எடுத்துச் செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்தை திறந்து வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானுரை மறந்து விட முடியாது. வாழ்க்கையில் எனக்கு மறக்காத விஷயம் இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக 4 முறை இருந்து பணியாற்றி இருக்கிறேன். 84-ஆம் ஆண்டு அகரம் பள்ளிப்பட்டில் இருந்து தொண்டமானுருக்கு வாக்கு சேகரிக்க நான் தென்பெண்ணை ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் தான் சென்றேன். ஒரு நாள் ஓட்டு கேட்பதற்கு நான் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றேன். நான் ஒருவன் கஷ்டப்பட்டேன் என்றால் இந்தப் பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்?
கட்சிக்கு அப்பாற்பட்டு கூட இங்கு வந்திருக்கிறீர்கள், பொதுவானவர்கள், நான் சார்ந்திருக்கிற கட்சியை சேர்ந்தவர்கள், விவசாய சங்கத்தினர் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் தேர்தல் நேரத்தில் என்ன நினைக்க வேண்டும்? தேர்தல் வந்தால் இந்த பாலத்தை கட்டியது யார்? திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தான் கட்டினார் என்று அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்க வேண்டாமா?
எனக்கு துண்டு போட வேண்டியது, வரவேற்க வேண்டியது, கைதட்ட வேண்டியது, நல்லா இருக்கியா? என பார்த்து உபசரிக்க வேண்டியது. இவ்வளவையும் செய்து விட்டு தேர்தல் வரும் நேரத்தில் போன முறை அதற்கு ஓட்டு போட்டோம், இந்த முறை இதற்கு போட்டால் என்ன என கூறுபவர்களும் உண்டு. இந்த முறை மாற்றி போட்டால் என்ன? என யோசிக்கிறார்கள்.
அப்படி இருக்கக் கூடாது. தமிழருக்கு நன்றி உணர்வு உண்டு. அந்த நன்றி உணர்வுவை எப்போது காட்டுவோம்? மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை தருகிற தமிழக அரசுக்கு கடனை எப்படி தர போகிறோம்? தேர்தல் நேரத்தில் அந்த நன்றி உணர்வை நீங்கள் எல்லாம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலம் அமைந்துள்ள அகரம்பள்ளிப்பட்டில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவரையும், அருகே உள்ள தொண்டமானூர், சதகுப்பம் ஆகிய கிராமங்களில் அதிமுகவைச் சேர்ந்தவரையும் ஊராட்சி மன்றத் தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.(தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்) இதன் காரணமாகவே அமைச்சர் எ.வ.வேலு, அரசு விழாவில் தேர்தலில் ஓட்டு போடுவது குறித்து ஆதங்கப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது.