Homeசெய்திகள்திருப்பதி லட்டு-திருவண்ணாமலையில் சூரை தேங்காய் உடைப்பு

திருப்பதி லட்டு-திருவண்ணாமலையில் சூரை தேங்காய் உடைப்பு

திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பை கலந்தவர்கள் மீது தக்க தண்டனை வழங்க வேண்டி திருவண்ணாமலையில் இந்து முன்னணியினர் சூரை தேங்காய் உடைத்தனர்.

திருப்பதி பிரசாதத்தின் புனிதத்தை கெடுத்தவர்களை தண்டிக்க வேண்டி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை ஏகாதசி நாளான இன்று ஆஞ்சநேயர் கோயில்களில் சூரை தேங்காய் உடைத்து வழிபட இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

திருப்பதி லட்டு-திருவண்ணாமலையில் சூரை தேங்காய் உடைப்பு

அதன்படி திருவண்ணாமலை சின்னகடைத் தெரு பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். ஆஞ்சநேயரிடம் வழிபாடு முடிந்ததும் கோயிலுக்கு வெளியே சூரை தேங்காய் உடைக்கப்பட்டது.

அதன்பிறகு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் திருப்பதி லட்டுவில் மாமிச கொழுப்பை கலப்பதை கண்டித்து கடவுளிடத்தில் முறையிட்டு சூரை தேங்காய் உடைப்பது நடந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் பெரிய ஆஞ்சநேயர் கோயில் முன்னாடி சூரை தேங்காய் உடைக்கப்பட்டது. லட்டில் மாமிச கொழுப்பு கலந்த விவகாரத்தில் யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க கேட்டு கடவுளிடத்தில் முறையிட்டிருக்கிறோம்.

See also  அக்னி குளத்திற்கு சீல்-சாமியார் வெளியேற்றம்

திருப்பதி லட்டுவில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதில் பல்வேறு வெளிநாடுகளின் சதி இருக்கிறது என நினைக்கிறோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், இந்து என சொல்லக்கூடாது, கடவுள் நம்பிக்கை இருக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு வகைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனுடைய ஒரு கட்டமாக இந்த திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பை கலந்திருக்கிறார்கள். உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டை வாங்கி கொண்டு வீடுகளில் பூஜை அறைகளில் வைத்து சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் கொடுப்பது வழக்கமாக உள்ள நிலையில் இதை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை விளக்கி ஒரு பட்டியல் வெளியிட்டு இருந்தார்கள். சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று வாக்குமூலம் கொடுக்கிற மாதிரி ஒத்துக் கொண்டார்கள்.

பஞ்சாமிர்தத்தில் ஏதோ கலப்படம் என்று சொன்ன பிஜேபியைச் சார்ந்த பொறுப்பாளரை காவல்துறை கைது செய்திருக்கிறது. உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்து கலப்படம் இருக்கிறதா? இல்லையா? என்பதை சொல்வதை விட்டு விட்டு சொன்னவர்கள் மீது இந்த அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

See also  எடை குறைவு-பிரியாணி கடை மீது போலீசில் புகார்

திருப்பதி லட்டு-திருவண்ணாமலையில் சூரை தேங்காய் உடைப்பு

நிறைய கோயில்களில் ஆய்வு செய்ய வேண்டும். அறநிலையத் துறை லாபத்தை எதிர்பார்க்கிறார்களே ஒழிய வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதத்தை நல்லதாக கொடுக்க வேண்டும் என எண்ணவில்லை. கோயில்கள் கொடுக்கக்கூடிய பிரசாதம் தரமாக இருக்க வேண்டும், அதை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

அறநிலைத்துறை சரியில்லை. அதற்கு உதாரணம் குன்றக்குடியில் பாதுகாப்பு இல்லாமல் யானை இறந்திருக்கிறது. எங்கேயாவது விநாயகர் சிலை வைத்தால் அதற்கு தகரம் போட வேண்டும் என்று சொல்லும் அரசாங்கம் யானைக்கு ஏன் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கக்கூடிய கோயில்கள் பராமரிப்பு இன்றி மரங்கள் முளைத்து காட்சியளிக்கின்றன. லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் வருகிற நிலையில் அது பராமரிப்பின்றி உள்ள கோயில்களுக்கு பயன்பட வேண்டும். வருகிற பக்தர்களுக்கு பயன்பட வேண்டும். திருவண்ணாமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு வசதிகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ந.முருகானந்தம், தென்பாரத அமைப்பாளர் தா.பக்தன், மாநில அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ், திருவண்ணாமலை மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார், வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ், கோட்ட அமைப்பாளர் டி.வி.எஸ்.ராஜேஷ், கோட்ட பொருளாளர் எஸ்.டி.ஆர்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

See also  கோயிலில் 7 ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு

சீமானுக்கு தண்டனை கொடுக்க சொல்லி தேங்காய் உடைப்பு 

பால், நெய் சாப்பிடும் நீ மாட்டிலிருந்து வரும் கொழுப்பை சாப்பிட்டால் செத்து விடுவாயா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே அவருக்கு ஆஞ்சநேயர் தண்டனை கொடுக்க கோரி இந்து முன்னணியினர் சூரை தேங்காய் உடைத்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!