திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு வரும் குடிமகன்கள் பக்தர்கள், பொதுமக்களுக்கு தொல்லை தருவதாகவும். இந்த கடையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை ராஜகோபுரத்திலிருந்து தொடங்கும் கிரிவலம் தேரடித் தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சனகோபுரத் தெரு, செங்கம் ரோடு வழியாக 14 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் அண்ணாமலையார் கோயிலை வந்தடையும். இதில் திருவூடல் தெருவில் அசைவ ஓட்டல் ஒன்றும், திருமஞ்சன கோபுரத் தெரு, காமராஜர் சிலை எதிரில் டாஸ்மாக் கடையும் உள்ளது. இந்த கடைகளை கிரிவலப்பாதையிலிருந்து அகற்ற வேண்டும் என பக்தர்களும், இந்து அமைப்பினரும் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு காமராஜர் சிலை எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து ஒருவர் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது,
வியாசர் எழுதிய ஸ்காந்த புராணத்தில் முதன்மையானதும், பஞ்ச பூத ஸ்தலங்களில் நடுநாயகமாக உள்ளதும், நினைக்க முக்தி அளிக்கும் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய கிரிவலம் உலகப்புகழ் பெற்றது ஆகும்.
முதலில் பௌர்ணமி அன்று மட்டும் கிரிவலம் வந்த காலம் போய், இன்று தினசரி ஆயிரம் கணக்கான மக்கள் கிரிவலம் வருகின்றார்கள் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பௌர்ணமி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றார்கள்,
இந்த கிரிவலப் பாதையில் நகருக்குள் சிலையின் எதிரில் அரசு டாஸ்மாக் கடையும், பாரும் (BAR) உள்ளது. இந்த பாரில் குடித்துவிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், காமராசர் சிலையருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற காத்திருக்கும் பயணிகளையும் தொந்தரவு செய்கின்றனர்.
இது பக்தர்களையும், பயணிகளையும், பெண்களையும்,குழந்தைகளையும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. எனவே கிரிவலப் பாதையில் உள்ள காமராசர் சிலைக்கு அருகில் உள்ள அரசு டாஸ்மார்க் கடையையும் பாரையும் (BAR) உடனடியாக அகற்ற வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துக்கின்றேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.
அப்போது திருவண்ணாமலை நகரத் தலைவர் மூவேந்தன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ள நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற பாஜக மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.