திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வருவதற்கான சூழல் இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி நடத்திய ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று இரவு நடைபெற்றது. அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
திருவண்ணாமலை மாநகரில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1 முதல் 17 ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திருத்தேர் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா, வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைக்கு மட்டும் சுமார் 40 லிருந்து 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் கூடுகின்ற இடங்களில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் கள ஆய்வு செய்தோம். அதைத்தொடர்ந்து, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினோம்.
கழக அரசு அமைந்தது முதல் திருவண்ணாமலை மாநகரில் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகமல் இருக்க, குடிநீர் வசதி, நடைபாதை வசதி, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. மேலும், மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதற்காக முதலுதவி மையங்கள் (FIRST AID CENTRES) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடமாடும் கழிப்பறை வசதிகள் (MOBLIE TOILET) உட்பட 400-க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் 37 கோடி ரூபாய் மதிப்பில், திருவண்ணாமலை திருக்கோயிலுக்கான மாஸ்டர் பிளானை அறிவித்துள்ளார். நிறைய திட்டங்களை அறிவித்திருக்கிறார். கோயிலுக்குள் காத்திருப்பு மண்டபங்கள், வளைவுகள், அன்னதானக் கூடங்கள் சமூக நலக்கூடங்கள் கோயில், குளத்தை தூர்வாரும் பணிகள் என ஏராளமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சில பணிகள் தொடங்கிவிட்டன. வரும் 6 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். கூடுதலாக 5 கோடி ரூபாய் மதிப்பில் கோபுரங்கள் மற்றும் கோவில் விமானங்களில் நிரந்தர மின்னொளி வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சார்பாக ஒரு குழுவை இரண்டு நாட்களுக்கு முன் அனுப்பி, பொதுமக்கள், பக்தர்கள், சமூக ஆர்வலர்களிடம் திருவண்ணாமலையில் தீபத்திருநாளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
அந்த கருத்துக்களின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது பல ஆலோசனைகள் மேற்கொண்டோம். இந்தக்கூட்டத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. கார்த்திகை தீபத்திருநாளில் பக்தர்கள் பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.
குடிநீருக்காக ஏற்கனவே 8 ஆர்.ஓ பிளாண்ட்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது புதிதாக 6 ஆர்.ஓ பிளாண்டுகள் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. விரைவில் அவை செயல்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவண்ணாமலை கோயிலுக்கு யானை வாங்கப்படுமா? கட்டளைதாரர்களுக்கும், உபயோதாரர்களுக்கும் பாஸ் வழங்கப்படுமா? என்று செய்தியாளர்கள், உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
அவர் கூறியதாவது,
வனத்துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தனியார் யாராவது அவர்கள் வளர்க்கின்ற யானையை, திருக்கோவிலுக்கு தருவதற்கு ஒப்புதல் அளித்தால் அப்படி வளர்க்கப்படுகிற யானையும் ஏற்கனவே அனுமதி பெற்று இருந்தால் தான் கொண்டு வர முடியும். ஆகவே தற்போது வனத்துறை சட்டத்தின் படி யானையை கொண்டு வரக்கூடிய சூழல் இல்லை.
920 கோடி ரூபாய் அளவுக்கு உபயதாரர்கள் வந்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் கட்டளைதாரர்களுக்கும், உபயோதாரர்களுக்கும் நிச்சயமாக முன்னுரிமை வழங்கப்படும். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அவர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்படும்.
மதுரை, பழனி போன்று அண்ணாமலையார் கோயில் கருவறை விமானத்தில் தங்க தகடு அமைப்பதற்கு முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கு உண்டான வழி வகைகளை காண்போம்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கூட்டத்தில் சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர்.தாரேஸ் அகமது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர் எம்.பிரதாப், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர்.இரா.சுகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.