Homeஅரசியல்திருவண்ணாமலை மாநகராட்சி-அதிமுக எதிர்ப்பு

திருவண்ணாமலை மாநகராட்சி-அதிமுக எதிர்ப்பு

எந்த வசதியும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சியாக மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை செட்டித் தெரு உண்ணாமலை திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள்-வீராங்கனைகள் கூட்டம் இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன், அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி. பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

முன்னாள் அமைச்சர் ராமச்சந்தரன் பேசியதாவது,

இதுவரை தேர்தல் என்றால் ஒரு மாதம், ஒன்றை மாதத்துக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வரும். அதற்கு பின்னால் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். பிறகு 15, 20 நாட்களுக்கு ஓட்டு கேட்பது போன்றவை முடிந்தால் தேர்தல் முடிந்து விடும். இப்போது அப்படி இல்லை. திமுக ஆட்சியில் இருக்கிற இந்த நேரத்தில் ஆட்சியைப் பயன்படுத்தி பல்வேறு சலுகைகளை மக்களுக்கு கொடுத்து, வருகிற தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள், இளைஞர்களை, பெண்களை மாற்ற வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை கொண்டு வந்து அரசாங்க பணத்தில் அரசியல் செய்து தேர்தல் பணியை தொடங்கி இருக்கிறார்கள்.

தேர்தல் பணியை தொடங்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நேரத்தில் அவர்கள் செய்கிற பணிக்கு நாமும் ஈடு கொடுத்து நம்மை தயார் படுத்திக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது கட்டாயத் தேவையாக உள்ளது.

திருவண்ணாமலை 52 ஆண்டு காலம் கட்சி தொடங்கி நிறைவுற்றிருந்தாலும் 53வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிற இந்த சூழலிலும் இதுவரை இரட்டை இலை சின்னத்தில் யாரும் வெற்றி பெறவில்லை என்பது மிகவும் முக்கியத்துவமான தகவலாக உள்ளது. எனவே தேர்தல் பணியில் நாம் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.

இதற்கு முன்பாக நாம் தேர்தல் பணிகளை நேரடியாக கழக நிர்வாகிகள் மூலமாக செய்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து இந்த இயக்கத்தில் அதுதான் நடைமுறையாக உள்ளது. ஆனால் திமுகவில் தேர்தல் பணி என்பது கட்சிக்காரர்களுக்கு ஒரு பணியும் வாக்காளர்களை சந்திப்பது வாக்காளர்களுக்கான மற்ற விஷயங்களை கொண்டு சேர்ப்பதற்கு தனிப்பட்ட முறையில் ஒரு டீமை பயன்படுத்துகிறார்கள். அதை நாம் இதுவரை செய்யவில்லை. இந்த தேர்தலில் அதையும் நாம் செய்யப் போகிறோம். அதற்கான எல்லா முயற்சிகளும், ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறோம்.

இந்த முறை நீங்கள் தேர்தல் பணியில் பூத்தில் பொதுவான ஒருவர் உங்களுடன் இணைந்து பணியாற்ற வரும்போது உங்களுடைய ஒத்துழைப்பை நல்கி அவர்களை நீங்கள் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டு பணி செய்வதற்கு துணை நிற்க வேண்டும்.

திருவண்ணாமலை மக்களின் மனநிலை என்ன என்பதை நாம் ஆய்வு செய்யும் போது திமுக பணம் வைத்திருக்கிறது, வேலு பணத்தால் எதையும் சாதித்து விடுவார், விலைக்கு வாங்கி விடுவார் என்பது ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் பேசுகிற தகவலாக உள்ளது. ஆனால் கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு யார் பணம் வைத்திருந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை, அவருடைய தேவையை எதிர்காலத்தில் அவருடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு வாய்ப்பை அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள் யார் முன்னெடுத்து செல்வார்களோ, அவர்களோடு பயணிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். நாம் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை மக்களுக்கு பல்வேறு எதிர்வினைகள் உள்ளது. 6000 பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. அந்த தகவல்களை திரட்டி வருகிறோம். மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு நிர்வாகத்திற்கும் அந்த கோரிக்கையை முன்வைத்து பெற்றுத் தருவதற்கான முயற்சி அதிமுக சார்பில் செய்யப்படும்.

அதே போல் நமது நகரம் மாநகரமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் மக்களிடம் உள்ளது. திருவண்ணாமலை நகரத்தில் அத்தனை வசதிகளும் வந்து விடவில்லை. 18 பஞ்சாயத்துகளை இத்துடன் இணைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த மாநகரத்தில் இணைத்துக் கொள்வதற்கு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளது. திமுகவிற்கும், வேலுக்கும், திமுக ஆட்சிக்கும் எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திமுக பணத்திற்காக திட்டங்களை போடுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே மக்களிடம் உள்ள எதிர்ப்பு மனநிலையை நம் பக்கம் திருப்பக் கூடிய வாக்குகளாக ஒருங்கிணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருவண்ணாமலை மாநகராட்சி–அதிமுக எதிர்ப்பு

மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் பேசியதாவது,

திமுகவுக்கு இருப்பது இரண்டு ஆயுதம். ஒன்று தேர்தல் வந்தால் பணம். இன்னொன்று பொய்.

திருவண்ணாமலையை மாநகராட்சியாக உயர்த்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய அசிங்கம் இது. பொதுமக்களிடம் கேட்கும் போது ரோடு இல்லை, சாக்கடை போவதற்கு வழி இல்லை, குப்பை அள்ளுவதற்கு வழி இல்லை என்கின்றனர்.

வெட்கமில்லாமல் மாநகராட்சியாக அறிவிக்கிறார்கள் என்று நடுநிலையாளர்கள் திட்டுகிறார்கள். 18 பஞ்சாயத்தை இதில் இணைத்திருக்கிறார்கள். அந்த பஞ்சாயத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் 100 நாள் வேலை கிடைக்காது. வீட்டு வரி அதிகரிக்க போகிறது. அவர்களெல்லாம் அதிமுக பக்கம் திரும்ப தயாராக இருக்கிறார்கள்.

திமுகவிற்கு வரி போட வேண்டும், அதில் வரும் பணத்தில் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவர்கள் வி.பவன்குமார், என்.பாலசந்தர், முன்னாள் நகர செயலாளர் வி.கனகராஜ் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலையை நிறுவி அவற்றை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து திறப்பது, அதிமுக சாதனைகளை பொதுமக்களிடத்தில் எடுத்துச் செல்லவும், தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் தெருமுனை பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எ.வ.வேலு பாணி

சட்டமன்ற தேர்தலில் போது எ.வ.வேலு, வாக்காளர் சரிபார்ப்பு பணி, மக்கள் மனநிலையை கண்டறிந்து சரி செய்வது, பணம் பட்டுவாடா போன்றவற்றிற்கு கட்சி சார்பற்றவர்களை ஈடுபடுத்துவது வழக்கம். முக்கியமாக சில பூத்களில் அதிமுக ஏஜெண்டு இல்லாமல் இருப்பார்கள். கவனிப்பும் பலமாக இருக்கும். எனவே இதை தடுக்க தனி டீமை அதிமுக களம் இறக்க உள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சி–அதிமுக எதிர்ப்பு

காலேஜில் தயாராகும் பிரியாணி

தேர்தல் காலத்தில் எ.வ.வேலு குடும்ப கல்லூரியில் பிரியாணி தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதே பாணியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரனும் தனது காலேஜில் பிரியாணியை சொந்த செலவில் தயாரித்து வழங்கி வருகிறார்.

சிலை அமைக்கப்படுமா?

திருவண்ணாமலை நகரில் கருணாநிதி உள்பட தலைவர்களின் சிலை இருக்கும் நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை இல்லாமல் உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் பாலசந்தர், மாவட்ட செயலாளராக இருந்த போது, எம்ஜிஆர் சிலை வைக்க முயற்சிகளை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் பதவி போனதால் சிலை வைப்பது நடக்காமல் போனது.

அதன் பிறகு பெருமாள் நகர் ராஜன், மாவட்ட செயலாளராக இருந்த போது ரவுண்டானா அருகில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை வைத்தார். பொது இடத்தில் சிலை வைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் மூலம் அந்த சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு சிலை வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த முறை சிலை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!