தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக நடக்கும் என்கவுன்டர் குறித்த கதை அம்சத்துடன் கலன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என அந்த படத்தின் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்து நடித்துள்ள ராணுவ வீரர் குருமூர்த்தி தெரிவித்தார்.
ராமலட்சுமி புரடெக்ஷன் மற்றும் அனுசுயா பிலிம் புரடெக்ஷன் இணைந்து தயாரித்துள்ள படம் கலன். இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் வீரமுருகன். இவர் ஏற்கனவே கிடுகு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். துணை ராணுவப்படை வீரர் குருமூர்த்தி கலன் படத்தின் இணை தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். மேலும் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த ரமணமகேஷ் உதவி இயக்குநராகவும், தேசூரைச் சேர்ந்த திலகராஜன் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்துள்ளனர். இசை-ஜெர்சன். எடிட்டிங்-விக்னேஷ்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நிகழ்ச்சி திருவண்ணாமலை இமாலயா ஓட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இணை தயாரிப்பாளர் குருமூர்த்தி போஸ்டரை வெளியிட அதை வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் பெற்றுக் கொண்டார்.
பிறகு இணை தயாரிப்பாளரும், ராணுவ வீரருமான குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சினிமாவில் நடித்துள்ளேன்.
கலன் என்றால் படைகலன், அணிகலன் என எல்லாவற்றையும் குறிக்கும். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சிவகங்கை மாவட்டத்தை யொட்டி உள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட படம். தென் மாவட்டங்களில் ஜாதியை மறந்து ஒற்றுமையாக இருக்கும் போது இப்போது தமிழ் படங்கள் மூலம் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் மோதலை உருவாக்கி உள்ளனர்.
எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். கர்ணன் படத்தில் வால் தூக்கி நின்னான் பாரு, வந்து சண்டை போட யாரும் இல்லை என்ற பாடலை வைத்தார்கள். தனுஷ் காசு வாங்கிக் கொண்டு நடித்து விட்டு சென்று விட்டார். வெட்டுப்பட்டு, சாவது யார் என்றால் இரண்டு சமுதாய மக்கள் தான். அந்த பாட்டை வைத்து ரீல்ஸ் போடுகிறார்கள். நிஜத்தில் நின்றால் யாராவது விடுவார்களா?
தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக என்கவுன்டர் பண்ற மாதிரி நிறைய விஷயங்கள் நடந்து இருக்கிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, போதை பழக்கத்திற்கு எதிரானதாக, அனைத்து சமுதாய மக்களும் பார்க்கிற படமாக கலன் அமையும். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும்.
படத்தை திருவண்ணாமலையில்தான் பூஜை போட்டு துவக்கினோம். ஒரு மாதத்தில் படத்தை எடுத்து முடித்துள்ளோம். படத்தை எடுக்க பல்வேறு தடைகள் இருந்தது. இதற்கு முன்னால் வீரமுருகன் கிடுகு என்று ஒரு படத்தை எடுத்தார். அந்த படத்தை வெளியிட தியேட்டர் கிடைக்காமல் யூ டியூப்பில் வெளியிட்டார். இந்த படம் முழுக்க முழுக்க கமர்ஷியலாக, அனைத்து சமுதாய மக்களும் பார்க்கக்கூடிய படமாக, நல்ல விதமாக நல்வழிப்படுத்துகிற படமாக எடுத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலன் படத்தில் வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களில் நடித்துள்ள அப்புகுட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தீபா, காயத்திரி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
வீடியோ…