1000 பேர் உட்கார கூடிய அரங்குடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு முக்கிய அதிகாரிகளின் அறைகள் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
30-91989 அன்று திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் உருவானது. 6188 சதுர கிலோ மீட்டர் பரப்பும், 24 லட்சத்து 64 ஆயிரத்து 875 மக்கள் தொகையும் கொண்ட தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்ந்து வருகிறது.
இம்மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள், 12 வட்டங்கள் உள்ளன. தற்போதுள்ள கலெக்டர் அலுவலகத்தில் கீழ்தளத்தை சேர்த்து 3 தளங்களிலும் 23-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இயங்கி வருகிறது. முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கு போதுமானதாக இல்லாததால் மீட்டிங்கிற்கு வருபவர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே உட்கார வைக்கப்படும் நிலை இருந்து வருகிறது.
இதையடுத்து ரூ.12 கோடியே 18 லட்சத்தில் புதியதாக கூட்ட அரங்கு ஒன்று ஸ்டேடியம் செல்லும் வழியில் ஊனமுற்றோர் அலுவலகத்திற்கு முன்பு உள்ள இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணியை அமைச்சர் எ.வவேலு இன்று பகல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
திருவண்ணாமலை சமுத்திரம் காலனியில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த சமுதாயக் கூடத்தில் 500 பேர் அமரலாம். 250 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். நவீன உபகரணங்களை கொண்டு சமையல் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் 8 தொகுதிகளையும், 860 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது. அரசு அலுவலர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே இதை கருத்தில் கொண்டு தனியாக ஒரு கூட்ட அரங்கம் தேவை என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ.12 கோடியே 18 லட்சத்தில் கூட்ட அரங்கம் கட்டிட அனுமதி அளிக்கப்பட்டது.
3 தளங்களுடன் 37,831 சதுர அடியில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கீழ்தளத்தில் திங்கள்கிழமை பொதுமக்களை சந்தித்து மனு வாங்குகிற பகுதி செயல்படும். இதில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கலாம்.
மேல் தளத்தில் காணொளி காட்சி அரங்கம் அமைக்கப்படும். அதற்கும் மேலே உள்ள தளத்தில், பழைய கலெக்டர் அலுவலகத்தில் சில அறைகள் நெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் முக்கிய அதிகாரிகளின் அலுவலங்கள் மாற்றப்படும்.
இந்த கட்டிடம் தரமாக கட்டப்படுகிறதா? அழகாக கட்டப்படுகிறதா? என ஆய்வு செய்தேன். சில மாற்றங்களை செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறேன். இந்தக் கட்டிடம் தமிழ்நாடு முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராமபிரதீபன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எம்.பருதி செயற்பொறியாளர் க.கவுதமன் உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
புதிய கட்டிடத்தில் லிப்ட் வசதியும், தற்போது உள்ள கலெக்டர் அலுவலகத்திலிருந்து வருவதற்கு நடை மேம்பால வசதியும் (ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இருப்பது போன்று) செய்யப்பட உள்ளது. மேலும் கலெக்டர் அறையும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்திற்கு பின்புறம் புதியதாக கட்டி திறக்கப்பட்ட சுற்றுலா மாளிகை உள்ளது. விஐபிக்கள் இங்கு தங்கி விட்டு புதிய கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கிற்கு வருவதற்கான இணைப்பு வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கு என பெயர் இருந்தாலும் இது ஒரு கூடுதல் கலெக்டர் அலுவலகமாகவே பார்க்கப்படுகிறது.