Homeசெய்திகள்பக்தர்கள் பாதிப்பு-யானை ராஜேந்திரன் மனுவும்,போலீஸ் அறிவிப்பும்

பக்தர்கள் பாதிப்பு-யானை ராஜேந்திரன் மனுவும்,போலீஸ் அறிவிப்பும்

பணம் பறிக்கும் கும்பலால் கிரிவல பக்தர்கள் பாதிக்கப்படுவதை தடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக யானை ராஜேந்திரன் மனு அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும் என ஐஜி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மலையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பவர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன். இதை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன் பேரில் இக்குழு சமீபத்தில் திருவண்ணாமலையில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன், 2வது கட்ட  ஆய்வு கூட்டத்தை நடத்தியது.

அப்போது யானை ராஜேந்திரன், கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை கிரிவலம் காலக்கட்டத்தில் தவறான செயல்கள் நிறைய நடக்கின்றன. இந்த கிரிவலக் காலக்கட்டத்தில் திருநங்கைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்திருநங்கைகள் பக்தர்களை பிடித்துக் கொண்டு கட்டாயப்படுத்தி பணம் பறிக்கின்றனர். மேலும், குழந்தைகளுடன் வரும் பக்தர்களை தடுத்து ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கின்றனர். கொடுக்க மறுத்தால் குழந்தைகளுக்கு கொடிய நோய் வரும் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சாபம் இட்டு பணம் பறிக்கின்றனர்.

See also  16 வயது சிறுமியை கடத்தியவர்களுக்கு தர்ம அடி

சில திருநங்கைகள் ஆண்களின் சட்டைப் பைகளில் கைவிட்டு பணம் பறிக்கின்றனர். இந்த கொடூர கலாச்சாரம் தொடர்ந்து நடந்து வருகின்றது. இவர்களால் பாதிக்கப்படும் பக்தர்கள் வேதனையோடு யாரிடமும் சொல்ல முடியாமல் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்கள் மீது காவல் துறையினர் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. இவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். காவலர்கள் போன பின்பு இதே கொடூரச் செயல்களை செய்கின்றனர்.

எனவே, இந்த திருநங்கைகளை பிடித்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி Remand செய்ய வேண்டும். இப்படி செய்தால்தான் இவர்களிடம் இருந்து பக்தர்களை காப்பாற்ற முடியும். கிரிவலம் வருபவர்களும் நிம்மதியாக இறைவனை வணங்கி செல்ல முடியும்.

பக்தர்கள் பாதிப்பு-யானை ராஜேந்திரன் மனுவும்,போலீஸ் அறிவிப்பும்

கிரிவலம் நடைபெறும் நாட்களில் சுமார் ஐம்பது இடங்களில் கண் தெரியாத சிலரை நிறுத்தி வைத்துக் கொண்டு இவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர்களுக்கு பண உதவி செய்தால் குடும்பம் நன்றாக இருக்கும் என்று கூறி பணம் பறிக்கின்றனர்.

கடந்த கிரிவல காலக்கட்டத்தில் நான் சற்று தூரத்தில் இருந்து இந்த கொடூரச் செயலை பார்த்தேன். சுமார் 5 நிமிடங்களில் ரூ.1000க்கு மேல் வசூல் வேட்டை செய்தனர். இப்படி சுமார் 50 இடங்களில் பணம் பறிக்கின்றனர். இதனால் பக்தர்கள் நிம்மதியாக கிரிவலம் போகமுடியவில்லை. ஏனென்றால் கிரிவலப்பாதையில் நடுவில் நின்றுகொண்டு பிச்சை எடுப்பதால் நிறைய இடையூறுகளை பக்தர்கள் அனுபவிக்கின்றனர். அவ்வாறு பணம் பறிக்கும் கும்பலை பிடித்து, வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி Remand செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

See also  பழங்குடியின பள்ளிக்கு கவர்னர் ரூ.50 லட்சம் நிதி

பக்தர்கள் பாதிப்பு-யானை ராஜேந்திரன் மனுவும்,போலீஸ் அறிவிப்பும்

காவல்துறையில் அடிக்கடி இவர்களை எச்சரித்து அனுப்பி விடுவதால், இந்தப் பணம் பறிக்கும் கும்பல் தொடர்ந்து இந்த குற்ற செயல்களை செய்து வருகின்றனர். எனவே, இந்த நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தால்தான் இந்த குற்ற செயல்களை தடுக்க முடியும். இனிவரும் காலக்கட்டத்தில் இவ்வாறு நடக்காமல் உரிய நடவடிக்கை எடுத்து, இந்த வழிப்பறி குற்றசெயலை தடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளினை ஏற்று ஒரு வாரத்திற்குள் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் நீதிமன்றத்தை அணுக நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவின் நகல்களை டிஜிபிக்கும், திருவண்ணாமலை எஸ்.பிக்கும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தீபத் திருவிழாவுக்கு இந்த முறை அதிக அளவில் பைக் ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு கிலோ மீட்டர் இருக்கும் ஒரு பறக்கும் படை அமைக்கப்படும். மாட வீதியில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் இடம் பெற்றிருப்பார்கள்.

See also  திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல் விழா

தீபத் திருவிழாவுக்கு முன்பாக பக்தர்களுக்கு தீபம் கட்டுப்பாட்டு அறை எண் வழங்கப்படும். அதில் தகவல் கூறினால் பறக்கும் படை குழுவினருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் 700 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிரச்சனை ஏற்படும் இடத்துக்கு உடனடியாக போலீசாரை அனுப்பி வைத்து சரி செய்ய முடியும்.

இவ்வாறு ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

கார்த்திகை தீபத்தன்று மட்டுமன்றி பவுர்ணமி நாட்களிலும் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என போலீசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!