முதல் நாள் கட்சி ஆரம்பிக்கிறார்கள், மறுநாள் பொதுக்கூட்டம் போடுகிறார்கள், நாற்காலி போடுகிறார்கள், கேட்டால் முதலமைச்சர் சேர் என்கிறார்கள் என நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திருவண்ணாமலை கல் நகர், சமுத்திரம் காலனி பகுதியில், திமுக பவள விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்அண்ணாதுரை.எம்.பி. தலைமை தாங்கினார். நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எஸ்.கண்ணதாசன், கோ.ராஜசேகர், எம்.ரமேஷ், எஸ்.சதிஷ்குமார், டி.திலீப்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் பானுகருணாமூர்த்தி, ஜெயமணிமூர்த்தி, வட்ட செயலாளர்கள் க.முரளி, மூ.காமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினருமான எ.வ.வேலு, 1200 பொதுமக்களுக்கு இட்லி பாத்திரம், காதுகேட்கும் கருவி, மூன்று சக்கர வண்டி, சமையலறை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டிலே பல இயக்கங்கள் தோன்றிருக்கிறது, மறைந்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில் மாநில கட்சி உருவாகும், கட்சியை துவக்குவார்கள். கொஞ்ச நாளில் அந்தக் கட்சி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்.
தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் உருவாயிற்று. அந்த கட்சிகள் மக்களுக்கு தொண்டாற்றியதா என்றால் இல்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல் இல்லாமல் போய்விட்டது. நான் யாருடைய கட்சி என்று சொல்லி அவர்களுடைய மனதை புண்படுத்த விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பல நடிகர்கள் கட்சியை உருவாக்கினார்கள். எல்லாம் போர்டோடு உள்ளது. கட்சிகள் பிறக்கும் போதே சில பேர் முதல் நாள் கட்சி ஆரம்பிக்கிறார்கள், மறுநாள் பொதுக்கூட்டம் போடுகிறார்கள், நாற்காலி போடுகிறார்கள். என்ன இது என கேட்டால் முதலமைச்சர் சேர் என்கிறார்கள். கட்சி ஆரம்பித்த ஐந்து நாளிலா முதலமைச்சராக முடியும்? இப்படி பல கட்சிகள். நான் ஒரு குறிப்பிட்ட ஒரு கட்சியை சொல்ல விரும்பவில்லை. கட்சி ஆரம்பித்த உடனே நாற்காலியை போட்டு அடுத்த முதல்வர் இவர் தான் என்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் அப்படி அல்ல. யாரோ ஒரு பத்து பேர் அமைச்சராவதற்கும், மூன்று பேர் எம்எல்ஏ ஆவதற்கும் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. வேலு மந்திரியாக வரவேண்டும் என்பதற்காகவோ, பிச்சாண்டி துணை சபாநாயகர் ஆக வேண்டும் என்பதற்காகவோ உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கழக மருத்துவர் அணிதுணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அவைத் தலைவர் கோ.கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொன்.முத்து, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர துணை துணை செயலாளர் மு.கருணாமூர்த்தி நன்றி கூறினார்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டில் விஜய் நேரடியாக திமுகவை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பதிலடி கொடுத்திருந்தனர். கட்சி ஆரம்பித்ததுமே சிலர் முதல்வர் கனவு காண்கிறார்கள் என திருமாவளவன், விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.
இந்நிலையில்தான் அமைச்சர் எ.வ.வேலுவும், முதல்நாள் கட்சி ஆரம்பித்து மறுநாள் முதலமைச்சர் என்கிறார்கள் என்று நடிகர் விஜய்யை, திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார்.