திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த புதுமண தம்பதிகளை அடித்து பணம் கேட்டதாக 3 திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தருபவர்களின் கார்கள், அம்மணி அம்மன் கோபுர சுற்றுச்சுவர் அருகிலும், பேகோபுர சுற்றுச்சுவர் அருகிலும் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த பகுதிகளில் நடமாடும் திருநங்கைகள், பக்தர்களை மடக்கி அவர்களது விருப்பத்திற்கு மாறாக சுத்தி போட்டு பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கிரிவலம் வரும் பக்தர்களையும் இதே பாணியில் மடக்கி பணம் வசூலிப்பது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அவர்கள் பக்தர்களை குச்சியால் அடித்து பணம் வசூலித்த வீடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் நேற்று இரவு அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே கூடியிருந்த திருநங்கைகள் சிலர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் ஏற வந்த பக்தர்களை மடக்கி பணம் கேட்டு வசூலித்தனர்.
அப்போது புதுமணத் தம்பதியினர் காரில் ஏற வந்தனர். அவர்களுக்கு திருநங்கைகள் சுத்தி போட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த தம்பதியினர் 200 ரூபாயை கொடுத்தார்களாம். ஆனால் திருநங்கைகள் 500 ரூபாய் கேட்டதால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுமணத் தம்பதியினர் காரில் ஏறி செல்ல முயன்றனர். ஆனால் கார் செல்ல முடியாதபடி சூழ்ந்து நின்றதையும், கார் கதவை வலுக்கட்டயாமாக திறந்து பணம் கேட்டதையும் அங்கிருந்த பக்தர் ஒருவர் செல்போனில் பதிவு செய்தார்.
அதன்பிறகு திருநங்கைகளின் தொல்லையை பொறுக்க முடியாமல் மணப்பெண் காரில் இருந்து இறங்கி செல்வதும், அவருடன் வந்தவரை திருநங்கை ஒருவர் அடிப்பதும், மணப்பெண்ணுடன் வந்த மூதாட்டி ஒருவர் அடிக்க வேண்டாம் என கெஞ்சுவதும், போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரின் செல்போனை பிடுங்க முயற்சிப்பதும், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதும் வீடியோவில் பதிவாகியிருந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தம்பதியர்களை அச்சுறுத்தி கன்னத்தில் அடித்ததாக கூறி மாயஸ்ரீ, தனுஷ்கா, ரீனா என்ற 3 திருநங்கைகள் மீது திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.