திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி, மகாதீபத்தன்று எத்தனை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற கேள்விக்கு கலெக்டர் பதிலளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி டிசம்பர் 13 அன்று நடைபெறும் மகா தீபத்தன்று இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், மகளிர் ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து ஆலோசனைகளை துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு வழங்கினார்.
கூட்டம் முடிந்ததும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற டிசம்பர் 1 முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி அன்று கொடியேற்றம், டிசம்பர் 7ஆம் தேதி அன்று வெள்ளி காமதேனு கர்ப்பக விருட்ச வாகனம், டிசம்பர் 8 ஆம் தேதி அன்று வெள்ளி ரிஷப வாகனம், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெள்ளி ரதம், டிசம்பர் 10 ஆம் தேதி அன்று பஞ்சமூர்த்திகள் மகா ரதம், டிசம்பர் 13 ஆம் தேதி அன்று காலை பரணி தீபம் மற்றும் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஆகியவை நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவிற்கு சுமார் 35 இலட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, உணவு, குடிநீர், கழிவறை வசதிகள் குறித்தும், கிரிவலப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், அரசு துறைகளின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
தீபத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு பல்வேறு களப்பணிகள் மற்றும் கள ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் போது பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை களையும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பரணி தீபத்திற்கு 7050 நபர்களும், மகா தீபத்திற்கு 11500 நபர்களும் திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏறுவதற்கு மருத்துவக்குழு மூலமாக உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் 2000 நபர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.
அண்ணாமலையார் தேர் வெள்ளோட்டம் மற்றும் மகா தேரோட்டத்தின் போது மாட வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். ஆன்லைன் மூலம் பரணி தீபத்திற்கு 500 டிக்கெட்டுகளும், மகா தீபத்துக்கு ஆயிரத்து 100 டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரணி, மகாதீபத்தன்று கோயிலுக்குள் அதிக அளவு போலீசார் அனுமதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு கோயில் வளாகத்தில் தேவைக்கேற்ப போதுமான அளவிலான காவலர்களை பணியமர்த்துவதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பரணி, மகாதீப டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்க முயற்சிக்கும் போது கோயில் இணையதளம் வேலை செய்யாதது குறித்த கேள்விக்கு சர்வர் டவுன் ஆகவில்லை, ஒரே நேரத்தில் பலர் முயற்சிக்கும் போது இப்படி நடப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
அண்ணாமலையார் கோயில் இணையதளத்திற்கு சென்றால் திருப்பதி போன்று எத்தனை டிக்கெட் விற்பனைக்கு உள்ளது, எத்தனை டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது என்று வெளிப்படையாக தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.