கார்த்திகை தீபவிழாவில் கோயிலுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என 3 துறை அலுவலர்கள் முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் எடுத்து கூறினர்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
கார்த்திகை தீபத் திருவிழா பாஸ் விஷயம் ஆண்டு தோறும் பிரச்சனையாக இருந்து வருகிறது. சென்ற ஆண்டு மாநில முதலமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது என்று பாராட்டிக் கொண்டிருக்கும் போது காலையில் பத்திரிகை எடுத்து பார்த்தால் போக்குவரத்து மாற்றம் பாதிப்பு, அதிக பஸ் கட்டணம் வசூலிப்பு, திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு, திருவண்ணாமலை மலையேறுவதற்கு அனுமதி சீட்டு பெற பக்தர்கள் தள்ளுமுள்ளு, சுவர் இடிந்து மூன்று பேர் படுகாயம், போலி பாஸ் நடமாட்டம், போலீஸ் குடும்பம் அத்துமீறல். அருணாசலேஸ்வரர் கோவிலில் பல மணி நேரம் தரிசனத்துக்கு பக்தர்கள் காத்திருப்பு, மூச்சு ஏற்பட்டு மயக்கம் என்று செய்தி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் குறை சொல்லாத அளவுக்கு விழாவை நடத்திட வேண்டும்.
கோயில் நுழைவு வாயிலை காவல்துறை கையில் எடுத்துக் கொண்டு யாரை உள்ளே விடுவது? யாரை வெளியே அனுப்புவது? என்று முடிவெடுக்கின்ற போது அறநிலைத்துறை சார்ந்த அதிகாரிகளே உள்ள போக முடியாத நிலை உள்ளது என்ற கருத்து அலுவலர்களிடையே உள்ளது.
எங்கள் சார்பாக மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கீழ்தான் அரசு நடைபெறுகிறது ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருப்பவர்கள் கூட உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது என்று என்னிடம் எடுத்து சொன்னதன் அடிப்படையில் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒரு வருவாய் துறை அலுவலர், காவல் துறை சார்பாக ஒரு அலுவலர், இந்து சமய அறநிலை துறை சார்ந்த ஒரு அலுவலர் என 3 அலுவலர் கொண்ட குழு தான் நுழைவு வாயில்களில் யாரையெல்லாம் அனுமதிக்க வேண்டுமோ அவர்களை அனுமதிப்பார்கள்.
பரணி தீபம் என்பது காலையில் நடைபெறுகின்ற சிறப்பு நிகழ்ச்சி. அந்த பரணி தீபத்துக்கு பாஸ் வழங்கப்படுகிறது. தீபத்தை உள்ளே சென்று பார்க்கிற ஒரு கூட்டமும், தீபம் வெளியே எடுத்து வருகிற போது பார்க்கின்ற ஒரு கூட்டமும் என இரண்டு பகுதியாக பிரித்து இரண்டு கலர் கொண்ட பாஸ் வழங்கினால் பிரச்சனைகள் வராது.
பாஸ் வரும்போது அதை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். க்யூஆர் கோடை பல்வேறு கவுன்டர்களை அமைத்து பரிசோதித்து உள்ளே அனுப்புகிறபோது சிறு தவறு கூட நடைபெறாது. அதை செய்வதாக ஐஜி, எஸ்.பியும் என்னிடத்தில் கூறியிருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் பாசை மிகச் சாதாரண ஒரு ஆள் மாட்டிக் கொண்டு தீபத்திருவிழாவிற்கு சென்றதை இவர் சட்டமன்ற உறுப்பினரா? என சுட்டிக்காட்டி பத்திரிக்கையில் செய்தி வருகிறது. சட்டமன்ற உறுப்பினரை கவுரப்படுத்துவதற்குதான் பாஸ் வழங்கப்படுகிறது
இனிமேல் அதை சட்டமன்ற உறுப்பினர்கள்தான் பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு டிரைவரைக் கூப்பிட்டு இதை நீ மாட்டிக் கொண்டு போ என்று சொன்னால் அந்த பாஸ்க்கு தான் என்ன மரியாதை? அதை கொடுத்த மந்திரிக்கு என்ன மரியாதை?
விஐபி பாஸ் யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவர்கள் மாட்டிக்கொண்டு கோயிலுக்கு வருவதுதான் முறை. அப்படி வராவிட்டால் அந்த பாஸ்சை தவிர்த்து விட வேண்டும். கட்டளைதாரர்கள், உபயதார்கள் உள்ளே போக முடியாத நிலை உள்ளது. அவர்கள் தான் திருவிழாவை நடத்துகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து உள்ளே அனுப்புவது அரசாங்கத்தின் கடமை அல்லவா?
ஆன்லைனில் டிக்கெட் வாங்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட்டை விற்று விட்டு கோயிலுக்குள் கூட்டம் நிறைந்து விட்டது என்று சொல்லி அவர்களை உள்ளே விடாமல் வெளியே நிறுத்தி விட்டால் உள்ளே இருப்பது யார்? இந்து சமய அறநிலைத்துறையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் பாஸ் அச்சடிக்கப்படுகிறது. அப்படி என்றால் தவறான பாஸ் உள்ளே சென்று இருக்கிறது. என்று அர்த்தம். தவறான பாஸ் எப்படி வந்தது? இந்த முறை தவறான பாஸ் இருக்குமேயானால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமி தூக்குறவர்கள் யார் என்று முடிவு செய்து அவர்களுக்கு முன்கூட்டியே அடையாள அட்டைகளை கொடுத்து விட்டால் பிரச்சனையே வராது. நூறு பேர் சாமி தூக்குவார்கள் என்று சொன்னால் ஆயிரம் பேர் உள்ளே நுழைந்தால் எப்படி இடம் இருக்கும்?
இவ்வாறு அவர் பேசினார்.