கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி திருவண்ணாமலையில் போலீசார் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது வெளிநாடு, வெளிமாநில நபர்களின் படங்கள் சேகரிப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும்.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுவாமி திருவீதியுலா வாகனங்கள் சீரமைப்பு, தேர் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
திருவண்ணாமலையில் வழக்கமாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். ஆனால் சில வாரங்களாக மற்ற நாட்களிலும் கோயிலுக்கும், கிரிவலத்திற்கும் அதிகமாக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் தங்குவதற்காக திருவண்ணாமலையில் மூலை, முடுக்கெல்லாம் தங்கும் விடுதிகள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. திருமண மண்டபங்கள், வாடகை குடியிருப்பு வீடுகள் ஆகியவை தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு விட்டன. மேலும் ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் திருவண்ணாமலையில் வீட்டு மனைகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.
இந்த வருட கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே திருவண்ணாமலை மற்றும் கிரிவலப்பாதை, சுற்றுப்புற பகுதிகளில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எத்தனை வருடமாக வீட்டில் குடியிருக்கிறார்கள்?, எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள்?, குடும்பத் தலைவரின் பெயர், செல் போன் எண் போன்றவற்றை சேகரித்தனர் இது மட்டுமன்றி வீடு கட்டும் வேலைக்கும் மற்றும் ஓட்டல் கடைக்கும் வேலைக்கு வந்து வீடு எடுத்து தங்கியிருக்கும் வெளி மாநில ஆட்களை செல்போனில் படம் எடுத்து அவர்களின் பெயர், விவரங்களை சேகரித்தனர்.
இதே போல் கிரிவலப்பாதை, பெரும்பாக்கம் ரோடு, ஆசிரம பகுதிகளில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிரிவலப்பாதையில் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. நடைபாதையில் பக்தர்களுக்கு இடைஞ்சலாக உள்ள பங்க் கடை, தள்ளு வண்டி, கரும்பு பிழியும் இயந்திரம் ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைத்து எடுத்துச் சென்றனர்.
கிரிவலப்பாதையில் ஏராளமான புறம்போக்கு இடங்கள், அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் கடைகளை ஒதுக்கித் தர சொல்லி கிரிவலப்பாதையில் ஆய்வுக்கு வந்த அமைச்சரிடம் நேரில் முறையிட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களின் வாழ்வாதாரத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே கோயில் இடத்தில் தரை வாடகைக்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என கிரிவலப்பாதை வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.