திருவண்ணாமலை அருகே நிலத்தை அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள செ.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 29). தந்தை பெயர் சாம்பசிவம். அஜித்குமார், சென்னை காவல்துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
செ.அகரம் கிராமத்தில் உள்ள இடம் மற்றும் பெரும்பாக்கம் கிராமத்தில் தனது தாயார் சாந்தியின் பெயரில் உள்ள 1 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக கடந்த 18-ஆம் தேதி அஜித்குமார் மனு அளித்திருந்தார்.
அதன் பேரில் சர்வேயர் பயிற்சி பெற்ற தனியார் சர்வேயர் ரஞ்சித்குமார், பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் அரிகிருஷ்ணன் என்பவரும் இடத்தையும், நிலத்தையும் அளக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அஜித்குமார் ரூ.7 ஆயிரத்து 500-யை தந்தார். பிறகு கூகுள் பே மூலம் ரூ.3 ஆயிரத்தை அனுப்பினார்.
மேலும் பணத்தை தரக்கேட்டு சர்வேயரும்,விஏஓ உதவியாளரும் கட்டாயப்படுத்தினார்களாம்.
இதையடுத்து அஜித்குமார், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை அஜித்குமாரிடம் கொடுத்து அனுப்பினர்.
பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சர்வேயர் ரஞ்சித்குமார், விஏஓ உதவியாளர் அரிகிருஷ்ணன் இருந்த போது அஜித்குமார் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்மோகன், கோபிநாத் ஆகியோர் 2 பேரையும் கைது செய்தனர்.
பெரும்பாக்கம் கிராமத்தில் விசாரணை நடத்த போதிய இட வசதி இல்லாததால் கைது செய்தவர்களை திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாக்கம் விஏஓவிடமும் விசாரணை நடைபெற்றது.
தமிழக நில அளவை துறையில் சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால் நிலங்களை உட்பிரிவு செய்தல், பட்டா மாறுதல் போன்ற பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதை தடுக்க சிவில் பொறியியல் டிப்ளமோ படித்தவர்களுக்கு லைசன்ஸ் வழங்கி ரூ.20 ஆயிரம் ஊதிய அடிப்படையில் தமிழக நில அளவை துறையில் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. அப்படி தேர்வானவர்தான் ரஞ்சித்குமார் என சொல்லப்படுகிறது.