Homeஆன்மீகம்அண்ணாமலையார் கோயில் வருமானம் உயர்வு ஏன்?

அண்ணாமலையார் கோயில் வருமானம் உயர்வு ஏன்?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வருமானம் முதன்முறையாக ரூ.4 கோடியை தாண்டியதற்கு உண்டியல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை ஆகியவையே காரணமாக சொல்லப்படுகிறது.

புகழ் மிக்க அண்ணாமலையார் கோயிலுக்கு தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்களும் கிரிவலம் வருவர். தற்போது தினமும் கார், வேன், பஸ்களில் அதிக அளவு பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகின்றனர். நூற்றுக்கணக்கில் கிரிவலமும் செல்கின்றனர்.

தரிசனத்திற்கு சிரமம்

தற்போது கோயிலில் தர்ம தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனமும் நடைமுறையில் உள்ளது. இந்த இரண்டு வரிசையிலும் நிற்பவர்கள், தரிசனத்திற்கு நீண்ட நேரம் ஆவதாலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். விஐபிக்கள் மட்டும் எந்தவித இடர்பாடும் இன்றி சுலபமாக சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.

நீண்ட நேரம் வரிசையில் நிற்கிறோம், சாமி தரிசனம் செய்யமுடியவில்லை என பக்தர்களிடமிருந்து தனக்கு போன் கால்கள் வருவதாக அமைச்சர் சேகர்பாபுவே கடந்த வருடம் திருவண்ணாமலைக்கு வந்திருந்த போது வெளிப்படையாக தெரிவித்தார். அதன்பிறகு பல முறை திருவண்ணாமலைக்கு வந்த சேகர்பாபு இந்த குறை போக்கப்பட்டு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது பற்றி ஏதும் சொல்லவில்லை.

அண்ணாமலையார் கோயில் வருமானம் உயர்வு ஏன்?

பிரமாண்டமான உண்டியல்

அண்ணாமலையார் கோயில் நிர்வாகம், கோயிலுக்கும், கிரிவலத்திற்கும் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு அவர்களிடம் காணிக்கை பெற உண்டியல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தது. கோயிலில் மூலை முடுக்கெல்லாம் உண்டியல்களை வைக்கப்பட்டது. அண்ணாமலையார் சன்னதியில் ஒரு ஆள் உயரத்திற்கும், 2 ஆள் அகலத்திற்கும் பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டது. இது போதாது என்று சமீபத்தில் புதியதாக 30-க்கும் மேற்பட்ட உண்டியல்களை வாங்கி கோயிலிலும், கிரிவலப்பாதை அஷ்டலிங்கங்களிலும் வைத்தனர்.

See also  நடராஜ பெருமானை தலையில் சுமந்து கிரிவலம்

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளை செய்யாமல் வருமானத்தில் மட்டுமே கவனம் கொள்ளக் கூடாது என இந்து அமைப்புகளும், ஆன்மீக அமைப்பினரும் உண்டியல் எண்ணிக்கையை அதிகரித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தாங்கள் தரிசனம் செய்யும் இடத்தில் உண்டியல் இல்லாதது குறித்து பக்தர்கள் தெரிவித்ததால் பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டதாக அறங்காவலர் குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அண்ணாமலையார் கோயில் வருமானம் உயர்வு ஏன்?

பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். 2021 செப்டம்பருக்கு பிறகு ரூ.1 கோடியாக இருந்த உண்டியல் காணிக்கை தெலுங்கானா, ஆந்திரா பக்தர்களின் வருகை காரணமாக படிப்படியாக உயர்ந்து ரூ.2 கோடியை தாண்டி வந்தது. முதன்முறையாக சென்ற ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா காணிக்கை பணம் ரூ.3 கோடியை தாண்டியது.

இந்த வருடம் ஆவணியிலும், புரட்டாசியிலும் ரூ.3 கோடியை தாண்டியது. இந்நிலையில் ஐப்பசி மாத பவுர்ணமி உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நேற்று(28-11-2024) நடைபெற்றது. நுற்றுக்கும் மேற்பட்ட உண்டியல்களை திறந்து எண்ண வேண்டியது இருந்தால் நேற்று இப்பணி முடிவடையவில்லை. இன்றும் தொடர்ந்தது.

முடிவில் 4 கோடியே 41 லட்சத்து 3 ஆயிரத்து 539 ரூபாய் வருமானமாக கிடைத்ததாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் இந்த முறைதான் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியை தாண்டியிருக்கிறது. அதிக அளவு வருமானம் வருவதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய காத்திருப்பு அறைகளை கட்ட வேண்டும் என்பது ஆன்மீகவாதிகளின் கருத்தாக உள்ளது. மேலும் பார்க்கிங் வசதி இல்லாததும் பெருங்குறையாக இருந்து வருகிறது.

See also  திருவண்ணாமலை கோயிலில் துர்கா ஸ்டாலின்

அண்ணாமலையார் கோயில் வருமானம் உயர்வு ஏன்?

இந்நிலையில் ‘எங்களை கேட்க யாரும் இல்லை, தத்தளிக்கும் திருவண்ணாமலை’  என்ற தலைப்பிலான உள்ளூர்வாசி ஒருவரின் பதிவு சமூக வலைத்தளங்கில் உலா வந்து கொண்டிருக்கிறது.

பகல் நேரத்தைவிட மாலை, இரவு நேரங்களில் கிரிவலப்பாதை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது, நகரம் தத்தளிக்கிறது. வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் மாடவீதியை சுற்றியே வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. திருவண்ணாமலை நகரத்தில் மட்டும் தான் பிரதான சாலைகளில் சாலையையே ஆக்ரமித்து ஆட்டோ ஸ்டாண்ட்களாக மாற்றி வைத்துள்ளார்கள்.

கார், வேன் போன்ற வாகனங்கள் சாலையோரம், கடைகள், வியாபார நிறுவனங்கள், வீடுகள் முன்பு நிறுத்திவிட்டு போய்விடுகிறார்கள்.

தினம், தினம் சண்டை

காலையில் கடை திறக்க வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கடைக்காரர்களும், வாகன உரிமையாளர்கள் தினம் தினம் மாடவீதியில் சண்டையிட்டுக்கொள்வதை உள்ளுர் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காவல்துறையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டிய வர்த்தக வியாபார சங்கங்கள் என்கிற பெயரில் இயங்குபவர்கள் அதிகாரவர்க்கத்துக்கு அடிபணிந்து, தங்கள் சங்க உறுப்பினர்களின் பிரச்சனைகளுக்கே வலிமையாக குரல் கொடுக்காமல் நமக்கேன் வம்பு என இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபத்திருவிழாவுக்கு மட்டும் நகரத்தின் ஒவ்வொரு தெருவையும் சீல் வைத்த காவல்துறை இப்போது வாரத்தில் நான்கு நாட்கள் சீல் வைத்துவிடுகிறார்கள். இதனால் உள்ளுர் மக்கள் எங்கும் செல்லமுடிவதில்லை, படுசிரமத்துக்கு ஆளாகின்றனர். வயதானவர்கள், நோயாளிகள் நிலையை அதிகார வர்க்கம் நினைத்து பார்ப்பதில்லை.

மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் இல்லை

இன்னும் சிலதினங்களில் தீபத்திருவிழா வருகிறது. 12 நாள் திருவிழா, அதன்பின் தீபம் எரியும் நாட்கள் என மொத்தமாக 20 நாட்கள் திருவண்ணாமலை நகரை மொத்தமாக சீல் வைப்பதற்கான வாய்ப்பு இந்தாண்டு உண்டு. அதன்பின் சபரிமலை பக்தர்கள் தை மாதம் வரை வருவார்கள், தொடர்ந்து மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள் என வரிசைக்கட்டி வருவார்கள். மே மாதம் இறுதிவரை இந்த நகரம் படப்போகும் பாடு அதிகம்.

See also  மகா தீப நெய் காணிக்கை செலுத்தும் வசதி துவக்கம்

தங்களின் பிரச்சனைகளுக்காக தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசிடம், அதிகாரிகளிடம், ஆட்சியாளர்களிடம் பேசுவார்கள், குரல் கொடுப்பார்கள் என நினைக்கிறார்கள், அவர்கள் சம்பாதிப்பதிலும், மிரட்டி சொத்து சேர்ப்பதிலும் தான் கவனமாக இருக்கிறார்கள். பணம் தந்தால் ஓட்டு போட்டுவிடுவான்கள், பிச்சைக்கார மக்கள் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் இங்கு எதுவும் இல்லாதது இவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

பக்தர்கள் இங்கு வருவதால் வருமானம் வருகிறதே என கேள்வி கேட்பவர்களின் வாயை அடைக்கப்பார்க்கிறார்கள். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களால் அண்ணாமலையார் கோவில், குறைந்தளவு மக்கள் பொருளாதர வளர்ச்சி பெறுகிறார்கள் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிட அதிகமாக இங்கு வாழும் உள்ளுர் மக்களுக்கு பெரும் சிரமம் உள்ளது என நீளுகிறது அவரின் ஆதங்கம்.

அண்ணாமலையார் கோயில் வருமானம் உயர்வு ஏன்?

விளம்பர மோகத்திற்காக கிரிவலம்

இது இப்படி இருக்க 100 பேர், 200 பேர் என விளம்பர மோகத்திற்காக பரதநாட்டியம் ஆடிக் கொண்டும், கோலாட்டம் ஆடிக் கொண்டும் கிரிவலம் வருவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு செய்தால் புண்ணியம் கிடைக்காது என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அருணாசல மாஹாத்மியம் எனும் நூல் எவ்வாறு வலம் வரவேண்டும் என்று உள்ளது. இதை தான் ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் போன்ற மகான்கள் வழி காட்டியுள்ளனர். எனவே விளம்பரத்திற்காக இப்படி செல்பவர்களை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!