கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் எனவும், அன்னதானம் வழங்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
அன்னதானம் வழங்க விரும்புவோர் திருவண்ணாமலை செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் வரும் 25ந்தேதி முதல் டிசம்பர் 4ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து அனுமதி பெற வேண்டும்.
மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் மட்டுமே அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது.
கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்ககூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அன்னதானம் வழங்ககூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும்.
போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.