திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த கடிதத்தையும், வீடியோ பதிவையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும், பவுர்ணமி, தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும் வருகை தருகின்றனர்.
சில வருடங்களாக ஆந்திர, தெலுங்கானா மாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தங்கும் விடுதிகளும் அதிகரித்து விட்டன. வீடுகளும் தங்கும் விடுதிகளாக மாறி விட்டது. ஆன்லைனில் பதிவு செய்து விட்டு இந்த விடுதிகளில் பக்தர்கள் தங்கி கோயிலுக்கும், கிரிவலத்திற்கும் செல்கின்றனர்.
அந்த வகையில் ஸ்ரீமகாகாலா வியாசகர் (வயது 41) என்பவர் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா பீர்க்கலைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த தீபத்திருவிழாவின் போதும் இவர் திருவண்ணாமலைக்கு வந்து தங்கி தீபத்தை தரிசித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறை வரும்போது ஆன்லைனில் விடுதியை தேர்வு செய்து தங்கி விட்டு செல்வாராம்.
நேற்று குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலப்பாதை சூரியலிங்கம் அருகில் உள்ள டிவைன் பார்ம் ஹவுஸ் ஸ்டே என்ற விடுதியில் அறை எடுத்து தங்கினார். இன்று காலை கதவு திறக்கப்படாததால் விடுதி ஊழியர் ஜன்னல் வழியாக பார்த்ததில் 4 பேரும் பிணமாக கிடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர்களின் அறையில் இருந்து 20 பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றினர். முக்தி அடைய அண்ணாமலையாரும், மகாலட்சுமியும் அழைத்தனர். அதனால் வந்தோம். தற்கொலை செய்ய முடிவு செய்தேன். மனைவியும், பிள்ளைகளும் தாங்களும் இதே முடிவை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால் இறைவனை தேடி பயணிக்கிறோம் என அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.
ஸ்ரீமகாகாலா வியாசகர், சென்னை, வியாசர்பாடி எம்பிகே நகரைச் சேர்ந்த ருக்மணி பிரியா என்பருடன் வசித்து வருகிறார். ருக்மணி பிரியா(46) கணவரை விவாகாரத்து செய்தவர் என சொல்லப்படுகிறது. முதல் கணவருக்கு பிறந்த ஜலந்தரீ(18), முகுந்த் ஆகாஷ் கே.குமார்(13) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில்தான் இவர்கள் விஷம்(சயனைடு) அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன் 4 பேரும் பேசிய வீடியோ ஒன்று அவர்களது செல்போனில் பதிவாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்றும், ஸ்ரீமகாகாலா வியாசகர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
வளர்ந்து வாழ வேண்டிய பிள்ளைகளுக்கும் விஷத்தை தந்து ஸ்ரீமகாகாலா வியாசகரும், ருக்மணி பிரியாவும் தற்கொலை செய்து கொண்டதும், முக்திக்காக இதை செய்தோம் என அவர்கள் கூறியிருப்பதும் ஆன்மீகவாதிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலமாக சொல்லப்பட்டாலும் இந்த பிறவியில் ஒருவர் 1008 முறை அண்ணாமலையை சுற்றி வந்தால்தான் மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்று அகத்தியர் கூறியிருக்கிறார்.
இது பற்றி “நம்மால் முடியும் அறக்கட்டளை” நிறுவனர் மோகன் சாதுவிடம் கேட்ட போது ஒழுக்கம்,செயல், தவம், மெய்யுணர்தல் போன்ற வழிகளில் ஒருவர் முக்தி பெறலாம். ஆனால் முக்தி பெறுவதற்காக தற்கொலை என்ற வழியை தேர்ந்தெடுப்பதை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என கருத்து தெரிவித்தார்.