தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா கண்ட மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்தது.
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக ஆண்டு தோறும் 90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். அப்போது அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அகரம்பள்ளிப்பட்டு தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் மாத கணக்கில் இந்த பகுதியை கடந்து செல்ல முடியாது. மாற்று வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி கொண்டுதான் மற்ற ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.
எனவே தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை கருத்தில் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கட்டும் பணி ஈரோடு ஏ.எஸ்.ஆர் கன்ஸ்டரக்ஷன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய பாலத்தை கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
அப்போது பேசிய எ.வ.வேலு ’84-ஆம் ஆண்டு அகரம் பள்ளிப்பட்டில் இருந்து தொண்டமானூருக்கு வாக்கு சேகரிக்க நான் தென்பெண்ணை ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் தான் சென்றேன். ஒரு நாள் ஓட்டு கேட்பதற்கு நான் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றேன். நான் ஒருவன் கஷ்டப்பட்டேன் என்றால் இந்தப் பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்? தேர்தல் வந்தால் இந்த பாலத்தை கட்டியது யார்? திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தான் கட்டினார் என்று அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்க வேண்டாமா?’ என்று கூறியிருந்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாத்தனூர் அணையிலிருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையொட்டி கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளப் பெருக்கின் காரணமாக அகரம் பள்ளிப்பட்டு-தொண்டமானூர் மேம்பாலம் இடிந்து விழுந்தது. ஆற்றின் குறுக்கே 70 அடி வரை பாலம் இடிந்து விழுந்தது.
இது குறித்து அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. பாலம் ஆற்றில் விழுந்ததால் தண்ணீர் பீறிட்டு கரையோரம் உள்ள வீடுகளை மூழ்கடித்து சென்றது. இதனால் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி விட்டோம்.
இப்பகுதியில் உள்ள வீடுகளும், கோயில் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை அடிக்கடி பார்ப்போம். எந்த அடி உயரத்தில் தண்ணீர் செல்லும் என்பது இப்பகுதியினருக்கு நன்றாக தெரியும். இந்த மேம்பாலம் கட்டும் போதே உயரம் போதாது என சொன்னோம். மேலும் ஸ்ட்ராங்காக கட்டவும் கேட்டுக் கொண்டோம். நாங்கள் சொன்னதை அதிகாரிகள் கேட்கவில்லை. இப்போது பாலம் இடிந்து விட்டது. எனவே பாலத்தை உயரமாகவும், தரமானதாகவும் கட்டித் தர வேண்டும் என்றனர்.
இது சம்மந்தமாக சென்னை நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராம சாலைகளின் தலைமை பொறியாளர் செ.தேவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டது. தற்போது பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் பெய்த அதீத கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு, நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், மற்றும் குளங்கள் நிரம்பி வெளியேறிய உபரிநீரும் சேர்ந்து இப்பாலத்தில் அதிகப்படியான வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து, போக்குவரத்து முழுவதும் தடைப்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ…