அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டுக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்தார். கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் என்ற அடிப்படையில் கட்டப்பட்டதால்தான் பாலம் உடைந்து மக்கள் வரிப்பணம் ரூ.16 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அடுத்த அகரம் பள்ளிப்பட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் புதியதாக மேம்பாலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்த பாலத்தை ஈரோடு ஏ.எஸ்.ஆர் கன்ஸ்டரக்ஷன்ஸ் நிறுவனம் கட்டித் தந்தது.
தேர்தல் வந்தால் இந்த பாலத்தை கட்டியது யார்? திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தான் கட்டினார் என்று அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்க வேண்டாமா? என்றெல்லாம் பில்டப் கொடுத்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் சாத்தனூர் அணையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அகரம் பள்ளிப்பட்டு-தொண்டமானூர் மேம்பாலம் இடிந்து விழுந்தது. ஆற்றின் குறுக்கே 70 அடி வரை பாலம் இடிந்து விழுந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு இன்று பகல் சென்று இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது,
இந்தப் பாலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்த போது முன்மொழியப்பட்ட பாலம். 2021 22-ல் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சியாளர்கள் நபார்டு திட்டத்தின் மூலமாக 16 கோடி ரூபாய் கட்டப்பட்ட இந்த பாலம் சரியான முறையில் திட்டமிட்டு கட்டப்படாத காரணத்தினால் இடிந்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட புயலால் தென்பெண்ணை ஆற்றில் சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்ற காரணத்தினால் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. ஒரு பாலம் கட்ட வேண்டும் என்று சொன்னால் ஏற்கனவே அதிக நீர் எந்த ஆண்டு சென்றது என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பாலத்துக்கு வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டு பாலத்தை கட்டி இருந்தால் பாலம் சேதம் அடைந்து இருக்காது.
எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் இந்த பாலத்தை கட்டியதன் காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் திறக்கப்பட்டு 90 நாட்கள் தான் ஆகிறது. 90 நாட்கள் தாக்கு முடிக்க முடியாத பாலம் என்று சொன்னால் திமுக ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.
பாலம் கட்டுகின்ற போதே நீர்வளத் துறை அதிகாரிகள், பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும், பாலத்தின் தூண்களை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்தவர்கள் சரியான முறையில் கவனிக்காமல் அலட்சியத்தோடு பாலப் பணியை மேற்கொண்ட காரணத்தினால் மக்களுடைய வரி பணம் 16 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டிருக்கிறது இந்த ஆட்சியில். இதற்கு முழு பொறுப்பை ஸ்டாலினுடைய அரசாங்கம் தான் ஏற்க வேண்டும்.
1972 ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சத்து 40 ஆயிரம் அடி தண்ணீர் சென்றது. அவ்வளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த போது அதற்கேற்றவாறு பாலத்தை வடிவமைத்து கட்டி இருந்தால் பாலம் சேதம் அடைந்திருக்காது. ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்ட விளைவு பாலம் அடித்து வெள்ளத்தால் செல்லப்பட்டு இருக்கிறது.
இது முழுக்க முழுக்க இந்த அரசாங்கத்தின் கவனக்குறைவால் ஏற்பட்டது. அரசாங்கத்தின் அலட்சித்தால் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களுக்கு கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் இதுதான் முக்கியம். ஒரு பாலம் கட்டுப்படும் போது ஆய்வு செய்ய வேண்டும்.
நானும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவன். பாலம் கட்டும் போது கடுமையாக ஆய்வு செய்து, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாலத்தின் தரம், ஏற்கனவே ஆற்றில் எவ்வளவு தண்ணீர் சென்றது, எப்படி வடிவமைத்து பாலம் கட்ட வேண்டும் என்பதெல்லாம் முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் பாலத்தை கட்டிருந்தால் சேதம் ஏற்பட்டிருக்காது.
எதிர்க்கட்சி என்பதற்காக சொல்லவில்லை, பாலம் உடைந்து போய்விட்டால் இந்த பகுதியில் இருந்து அந்த பகுதிக்கு செல்ல முடியாது கடினம். நானும் காவிரி ஆற்றின் ஓரமாக வாழ்ந்து கொண்டிருப்பவன். 30, 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எங்கள் பகுதியில் பாலம் கிடையாது. காவிரி ஆற்றில் படகு வழியாகத்தான் அக்கரைக்கு சென்று தார் ரோட்டில் போக வேண்டும்.
அப்படிப்பட்ட பகுதியில் நான் வசித்தவன். தென்பெண்ணையாற்றில் ஏதோ ஒரு நேரத்தில் தான் தண்ணீர் வருகிறது. காவிரி ஆற்றில் வருடம் முழுவதும் தண்ணீர் வரும். ஒரு லட்சம், இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் போது படகுகளில் மறு ஆற்றங்கரைக்குச் சென்றுதான் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும். மக்களுடைய கஷ்டத்தை அனுபவரீதியாக உணர்ந்தவன்.
இந்த பாலத்தை மீண்டும் கட்ட வேண்டும் என்றால் ஒன்றை ஆண்டு காலம் ஆகும். அதுவரை மக்கள் சுற்றிக்கொண்டு தான் சொல்ல வேண்டும். 2026-இல் உங்களால் அதிமுக ஆட்சி அமையும். அப்போது இந்த பாலம் வலுவாக, உறுதியாக நிலைத்திருக்கின்ற வகையில் கட்டப்படும்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதிமுக ஆட்சியில் ஏழு பாலங்கள் உடைந்ததாக தவறான, பொய்யான, செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அது உண்மை அல்ல.
ஏழு பாலம் அண்ணா திமுக ஆட்சியில் உடைந்திருக்கிறது என்ற செய்தியை சொல்லிவிட்டு நான்கு பாலத்தின் விவரத்தை தான் சொல்லியிருக்கிறார். நாலு பாலமும் உண்மை அல்ல. அவர் வெளியிட்ட செய்தி தவறான செய்தி.
விழுப்புரம் தளவானூரில் கட்டப்பட்டது பாலம் அல்ல தடுப்பணை. அந்த தடுப்பணை அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தடுப்பணையின் இரண்டு பக்கங்களிலும் மண் தரை இருந்தது. அந்த மண் தரை அடித்து செல்லப்பட்டதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இன்னும் தடுப்பணை இருந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த பாதிப்பும் இல்லை.
திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையம் நாகநதியின் குறுக்கே 2001-இல் எட்டு லட்சத்தில் கல்வெட்டு தான் கட்டப்பட்டது. இந்த கல்வெட்டு கனமழையால் அடித்துச் செல்லப்பட்டது. அதற்கு பதிலாக ஜெயலலிதா நாக நதியின் குறுக்கே கிட்டத்தட்ட பிரமாண்டமான பாலத்தை கட்டி 9-10-2012-இல் அவர் கையாலே திறக்கப்பட்டது. எனவே இதையும் தவறாக கூறியிருக்கிறார்.
படவேடு ராமர் கோயில் சாலையில் கமண்டல நதி குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்ததாக கூறப்பட்டது தவறு. 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்கு இந்த பாலம் கட்டும் பணியை ஒப்படைத்தார்கள். 2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பெய்த பெருமழையில் இரண்டு பக்கமும் சுவர்கள் அரிக்கப்பட்டது. ஜெயலலிதா இரு பக்கங்களிலும் சுவர்களை சுவர்களை எழுப்பி அதை அவரே திறந்தார். இது திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலம். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது அல்ல.
கடலூர் மாவட்டத்தில் சிங்கார தோப்பு பாலம் இடிந்து போய்விட்டதாக கூறுவது தவறு. பாலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கான்கிரீட் போடும் போது அப்போது ஒரு பகுதி சரிந்ததால் அதை சரி செய்து கான்கிரீட் போட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் தவறான தகவலை தந்திருக்கிறார். இந்த தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் உடைந்து விட்டது. அதை மறைப்பதற்காக, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக தெரிவித்திருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் அனைத்தும் உறுதியாக மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற பாலங்களாக உள்ளன.
செம்பரம்பாக்கம் என்பது ஏரி. சாத்தனூர் என்பது அணை. செம்பரம்பாக்கம் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குகிற ஏரி. சாத்தனூர் அணை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்துகிற அணை. இதுதான் வேறுபாடு.
செம்பரம்பாக்கத்தில் இருந்து வெறும் 30 ஆயிரம் அடி திறக்க முடியும். ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசியல் ஆதாயம் பெறுவதற்காக லட்சக்கணக்கான கன அடியை திறந்து விட்டு சென்னை நகர் பாதிக்கப்பட்டதாக தவறான செய்தியை பதிவு செய்திருக்கிறார்கள். செம்பரம்பாக்கத்தில் இருந்து அடையாறு வரை நூற்றுக்கணக்கான ஏரிகளில் ஒவ்வொரு நீர் வெளியே போய் அடையாற்றில் கலந்த காரணத்தில்தான் வெள்ளம் ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய திட்டங்கள் எல்லாம் மிகப் பெரிய நிறுவனத்திற்குத்தான் கொடுத்தோம். முக்கொம்பு, அத்திக்கடவு-அவினாசி திட்டம் எல் அண்ட் டி-க்கு கொடுத்தோம். நூறு ஏரி திட்டம் பெரிய நிறுவனத்திற்குத்தான் கொடுத்தோம். எல்லாமே பெரிய நிறுவனத்திற்கு கொடுக்கின்ற போது அவர்கள் அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பணிகளை செய்வார்கள். அப்படி பணி செய்கிறபோது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படாது.
ஆனால் திமுக ஆட்சியில் அப்படி அல்ல. அவர்களுக்கு யார் வேண்டுமோ, நன்றாக கட்டுவார்களா? கட்ட மாட்டார்களா? என்று கூட தெரியாமல் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்னு போய் விட்டார்கள். அதனால்தான் பாலம் உடைந்திருக்கிறது.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளனர். அப்படி வருகின்ற போது அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.