திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்தகை தீபத்திருவிழா கொடியேற்றம் மற்றும் 10 நாள் திருவிழாக்களும் உட்பொருளை கொண்டதாக அமைந்திருக்கிறது.
திருவிழா என்பது எல்லா மக்களுக்கும் இறைவன் அருட்பார்வையால் தீட்சை அளிக்கும் காலம் எனப்படுவதால் அனைவரும் திருவிழாக்களுக்குத் தவறாமல் சென்று இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபாடு செய்தல் இன்றியமையாததாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இதில் சிறப்பு பெறுகிறது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 12 மாதங்களும் பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. அதில் ஐம்பூதங்களுள் ஒன்றாக இருந்து ஒளிவடிவாய் எழுந்தருளி உலகோரைக் காக்கும் தத்துவத்தை விளக்கும் கார்த்திகை தீபத்திருவிழா புகழ் வாய்ந்ததாகும்.
இத்திருவிழாவில் 2668 அடி உயர மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு விழாவிலும் மக்கள் ஒவ்வொரு குறிக்கோளை மேற்கொள்வதற்காகவே விழாக்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் 10 நாள் தீபத்திருவிழாக்கள் நடைபெறுவதற்கு உட்பொருட்கள் உள்ளது.
கொடியேற்றம்
ஒரு பெருவிழாவினைத் தொடங்குகின்றபோது திருக்கோவிலில் கொடி ஏற்றுவது ஆகமத்தில் விதிக்கப்பட்டதாகும்.
மும்மலத்திலே அமிழ்ந்து கிடக்கின்ற ஆன்மா, தீட்சை முறையினால், பாசபந்தமற்றுச் சிவஞானத்தைப் பெற்றுப் பதியின் திருவடியை அடையும் முறைமையைக் கொடியேற்றம் காட்டுகிறது. கொடிக்கம்பம் விளக்கமாகத் தோன்ற சீலை அதிலே ஒடுங்கிக் காணப்படுதல், சிவத்தில் ஆன்மா ஒடுங்கி நிற்பதை குறிக்கின்றது.
கொடிமரம் பதி எழுத்தாகிய ‘சி’ எனும் எழுத்தையும் கொடியேற்று கயிறு சத்தி எழுத்தாகிய ‘வ’ எனும் எழுத்தையும் கொடிச் சீலையில் எழுதப்பட்ட இடபதேவர் உயிரினைக் குறிக்கும் ‘ய’ எனும் எழுத்தையும் கொடிச் சீலை ந’ எனும் திரோத எழுத்தையும் தருப்பைக் கயிறு ‘ம’ எனும் மலஎழுத்தையும் குறிக்கும்.
முதல்நாள் விழா
கண்ணுக்குப் புலனாகின்ற அன்னமயத்தால் ஆன இந்த உடல் அறிவில்லாதது, அழியக்கூடியது, சடத்தன்மையுடையது. ஆகவே, அறிவுள்ளதும் அழியாததும் ஆகிய ஆன்மா இந்த உடலுக்கு வேறானது என்று கண்டு, கண்டவுண்மையைக் கடைப்பிடித்தற்காகச் செயல்படுவது முதல் நாள் விழாவாகும்.
இரண்டாம் நாள் விழா
மனித உடல் மூவுடல் தத்துவத்தை கொண்டது. சூக்கும் உடம்பு தூல உடம்பிற்குக் காரணமாக இருக்கிறது. இரண்டு உடல்களும் ஆன்மா அல்ல என்று உணர்தலே இரண்டாம் திருவிழாவின் உட்பொருள்
மூன்றாம் நாள் விழா
கழிபிறப்பு, இப்பிறப்பு, வருபிறப்பு எனும் மூவகைப் பிறப்புகளையும், உலகப்பற்று, பொருட்பற்று, பெண்பாற் பற்று எனும் மூவகைப் பற்றுக்களையும் நீக்க வேண்டி நிகழ்வது மூன்றாம் நாள் விழாவாகும்.
நான்காம் நாள் விழா
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களும், முட்டையில் தோன்றுதல், வியர்வையில் தோன்றுதல், வித்து, கிழங்குளில் தோன்றுதல், கருப்பையில் தோன்றுதல் ஆகிய நான்குவகைத் தோற்றங்களையும் நீக்க வேண்டிச் செய்யப்படுவதாகும்.
ஐந்தாம் நாள் விழா
ஆணவம், கன்மம, மாயை, வயிந்தவம், திரோதாயி எனும் ஐந்து மலங்களும் அகற்றப்படுதல் காரணமாக ஐந்தாம் நாள் விழா நடைபெறுகிறது.
ஆறாம் நாள் விழா
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் உட்பகையாறும், கலாத்துவா, தத்துவாத்துவா, புவனாத்துவா, வன்னாத்துவா, பதாத்துவா, மந்திராத்துவா என்னும் ஆறு அத்துவாக்களும், இருத்தல், கிடத்தல், இருவினை இயற்றல், விடுத்தல், பரநிந்தை, மேவல் எனும் கன் ம மலகுணம் ஆறும், பிரமசாலோகம், பிரம சாமீபம், பிரமசாரூபம், விஷ்ணுசாலோகம், விஷ்ணு சாமீபம், விஷ்ணு சாரூபம் என்னும் பதமுத்தி ஆறும் நிலையற்றவை என்று அறிந்து நீக்குதற் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.
ஏழாம் நாள் திருவிழா
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்னும் ஏழுவகைப் பிறப்பும், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்னும் வித்தியா தத்துவங்கள் ஏழும், அஞ்ஞானம், பொய், அயர்வு, மோகம், சூனியம், மாச்சரியம், பயம் என்னும் மாயேயமல குணம் ஏழும் நீக்கப் பெறுவதன் பொருட்டு ஏழாம் நாள் விழா நிகழ்வதாயிற்று.
எட்டாம் நாள் திருவிழா
முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், தன் வயத்தனாதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, இயற்கை உணர்வுடைமை, தூய உடம்புடையனாதல் ஆகிய எட்டுக் குணங்களும் இறைவனுக்குரிய குணங்களாகும். இவ்வெட்டுக் குணங்களையும் இறைவன் ஆன்மாக்களுக்கும் அருள வேண்டிய எட்டாம் நாள் விழா நடத்தப்படுகிறது.
ஒன்பதாம் நாள் திருவிழா
மூவடிவம், முத்தொழில், மூவிடம் ஆகிய ஒன்பது நிலைகளையும் கடந்து அவற்றிற்கு அப்பாற்பட்ட நிலையை ஆன்மா அடைதல் வேண்டும் என்பதற்காக ஒன்பதாம் நாள் விழா நடைபெற்று வருகிறது.
பத்தாம் நாள் திருவிழா
இறைவன், முழுமையாக மலசத்தியை நீக்கி முழுமையாக சிவசக்தியைப் பதியச் செய்து பேரின்பப் பெருங்கடலில் அமிழ்ந்தச் செய்வான் என்ற உண்மையை பத்தாம் நாள் திருவிழா உணர்த்துகிறது.
திருவண்ணாமலையில் பத்தாம் திருநாளில் தீபப் பெருவிழா நடைபெறுகிறது. அந்நாளில் லட்சக்கணக்கான மக்கள் அவரவர் விரும்பும் தீர்த்தங்களில் மூழ்கி ஞானப் பெருமலையாய் நிற்கும் அண்ணாமலைப்பிரானை வலம் செய்து மாலையில் மலைச்சிகரத்தில் தோன்றும் பேரானந்தப் பெருஞ்சோதியைத் தரிசித்து பேரின்பப் பெருங்கடலில் மூழ்குகின்றனர்.
அண்ணாமலைத் தீபத்தைக் கண்டு வழிபட்டவர்கள் பிறவிப் பயனைப் பெற்றவர் ஆவர். ஆகவேதான் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பெருமக்கள் அண்ணாமலையை நாடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இந்த வருட கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
காலை சரியாக 6.25 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி முழுக்கமிட 63 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
10 ஆம் தேதி தேரோட்டமும், 13 ஆம் தேதி மகாதீப விழாவும் நடைபெறுகிறது.
விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
கார்த்திகை மாதம் தொடங்கியதும் ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் இருப்போர்தான் அதிகம். இதையடுத்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு மகாதீபம் ஏற்றும் வரை பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் மேற்கொள்வர்.
கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கிய இன்று, அதிக அளவிலான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கொடியேற்றமான இன்று சிறுவர்-சிறுமியர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மாலை அணிந்தனர்.
10-ஆம் நாள் விழாவில் இவர்கள் மகாதீபத்தை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள்.
படங்கள்-பார்த்திபன்