மின்சாரம் தாக்கி இறந்த விவசாயியின் உடலை சாலையில் கிடத்தி போராட்டம் செய்த பாமக கவுன்சிலர் உள்பட 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து ரிமாண்ட்டுக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 44). விவசாயி. திருமணம் ஆகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
பாமக கவுன்சிலர்
சில தினங்களுக்கு முன் விநாயகமூர்த்தியின் நிலத்துக்கு அருகில் மின்கம்பி தாழ்வாக சென்ற மின் கம்பியை மின்சார வாரியத்தினர் துண்டித்து விட்டு சென்றார்களாம். இந்நிலையில் விநாயகமூர்த்தி இன்று காலை பூ பறிப்பதற்காக தனது நிலத்துக்கு சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததாக சொல்லப்படுகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
அறுந்து போன மின் ஒயரை சரி செய்யாததையும், மின் விநியோகத்தை துண்டிக்காததையும் கண்டித்து திருவண்ணாமலை-வேலூர் ரோடு மல்லவாடியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் முன் விநாயகமூர்த்தியின் உடலை நெடுஞ்சாலையில் வைத்து அவரது உறவினர்களும், கிராம மக்களும் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பாமக தெற்கு மாவட்ட தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான ஏழுமலை தலைமை தாங்கினார்.
1 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கயிறு கட்டி தடுப்பு
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து சாலைமறியல் செய்தவர்களை அப்புறப்படுத்திய போலீசார் பெண்களை சாலை ஓரம் நிற்க வைத்து அவர்கள் சாலைக்கு வராமல் இருக்க கயிறு கட்டி தடுத்தனர். பிறகு முக்கியமானவர்ளை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாமக கவுன்சிலர் ஏழுமலை உள்பட 19 பேரை கைது செய்தனர். பிறகு அவர்களை ரிமாண்டுக்கு அனுப்பி வைத்தனர். கோர்ட்டு உத்தரவு படி அவர்கள் ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு(ஜெயில்) அனுப்பப்பட்டனர். கோர்ட்டில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த பிறகே ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் 19 பேர் ரிமாண்டு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.