கோரிக்கை வைத்த எம்.பி, எம்.எல்.ஏ-விடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று ஜமுனாமரத்தூருக்கு வருகை தந்தார். இன்று காலை நம்மியம்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரும், அமைச்சர் எ.வ.வேலுவும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தனர். அதில் ஒன்று பைக் ஆம்புலன்ஸ் சேவை ஆகும். மலை பகுதியில் மருத்துவ சேவைக்காக 25 பைக் ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட உள்ளது. இதில் ஜமுனாமரத்தூருக்கு 2 பைக் ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி அத்திப்பட்டு மற்றும் போளூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய தொகுதிகளில் ரூ.4 கோடியே 65 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 10 கட்டிடங்களும் திறக்கப்பட்டன.
இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,
ஜமுனாமரத்தூர் பகுதிக்கு பைக் ஆம்புலன்ஸ் பெரிய அளவில் பலன் தரும். ஏற்கனவே 108 ஆம்புலன்ஸ் மூன்று இருக்கிறது. இப்போது இரண்டு பைக் ஆம்புலன்ஸ் தரப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவ வாகனங்களில் பகுப்பாய்வு கருவி பொருத்தப்பட்டுள்ளதால் இந்த வாகனங்களில் யாருக்காவது ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை செய்யும் போது அதற்கான ரிப்போர்ட்டை அப்போதே கொடுத்து விடலாம்.
இன்றைக்கு பயன்படுத்த முடியாத கட்டிடங்கள் எல்லாம் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருகின்ற பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 1365 கட்டிடங்கள் புதிதாக கட்டித் தரப்பட்டுள்ளது. இன்றைக்கு மட்டும் 29 கட்டிடங்கள் திறந்து வைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கு பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திருக்கின்றனர். எல்லாருமே சுற்றுச்சுவர் வேண்டும், புறநோயாளிகள் பிரிவுக்கு கட்டிடம் வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். நிதி ஆதாரத்தில் எந்த அளவுக்கு கஷ்டத்தில் தமிழ்நாடு அரசு உள்ள போதிலும் மக்கள் நலத்திட்டங்களை வேறு எந்த முதல்வராக இருந்தாலும் நிதி இல்லை என கையை விரித்திப்பார்கள். ஆனால் இன்றைக்கு நமது முதல்வர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்தில் முன்மாதிரியான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். உங்களுக்கான நிதியிலிருந்து உங்கள் தொகுதியில் கட்டிடங்களை சீரமைப்பதற்கு வருஷத்துக்கு ஒரு கோடியாவது இந்த துறைக்கு தாருங்கள். இது உயிர் காக்கும் துறை. மற்ற துறைக்கு கொடுக்கிறீர்கள். நன்றாக செய்கிறீர்கள். ஆளுக்கு ஒரு கோடி கொடுங்கள் எந்தெந்த கட்டிடங்களை சீரமைத்து தர சொல்கிறீர்களோ, அதற்கு கலெக்டர் இரண்டே ரெண்டே நாளில் திட்டங்களை தயாரித்து ஒரே வாரத்தில் டெண்டர் விட்டு இரண்டு மாதத்தில் நிறைவேற்றி திறந்து விடலாம்.
இந்த 25 இருசக்கர ஆம்புலன்ஸ் எனப்படும் பைக் ஆம்புலன்ஸ்கள் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாகனங்கள் பொறுத்தவரை எல்லா மருந்துகளும் வைப்பதற்கு வசதிகள் உள்ளது. மலையிலிருந்து கீழே இறங்கும் வரை அல்லது வேறு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வரை பிராண வாயு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இருக்கையை பொருத்தவரைக்கும் உட்காருவதற்கு மட்டுமின்றி சாய்ந்து படுத்துக்கொண்டு போகிற மாதிரி இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியான வாகனங்கள், இந்தியாவில் 36 மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் இல்லை.
ஜமுனாமரத்தூரை பொருத்தவரை 262 கிராமங்கள் உள்ளது. இருக்கிற மலை கிராமங்களில் அதிக அதிகமான மலை கிராமங்களை கொண்ட மாவட்டம் திருவண்ணாமலையும், சேலமும்தான். அதிகமான மலைவாழ் மக்கள் வசிக்கிற மாவட்டங்களில் முதல் இடத்தில் சேலம் இருந்தாலும் இரண்டாம் இடத்தில் திருவண்ணாமலை இருந்தாலும் ஒரே இடத்தில் அதிகமான மலைவாழ் மக்கள் வசிப்பது என்பது இந்த ஜமுனாமரத்தூரில் தான்.
இந்த மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 146 மருத்துவருக்கான காலியிடங்கள் இருந்தது. தமிழக முதல்வர் அறிவுரையின் பேரில் 1021 மருத்துவர்களை புதியதாக தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு ஆணை தருகிற போது எந்த மாவட்டத்தில் அதிகமாக காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அங்கு தான் நீங்கள் பணிக்கு செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
அந்த வகையில் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள 146 காலி பணியிடங்களில் 95 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. ஜமுனாமரத்தூரில் மட்டும் 15 மருத்துவர் காலி பணியிடங்கள் இருந்தது. இதில் 14 மருத்துவர்கள் பணியில் சேர்ந்து விட்டனர். ஒரு இடம் காலியாக உள்ளது.
இன்று காலையில் நம்மியம்பட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தேன். அங்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு உரிய வீடுகளும் உள்ளது. ஆபரேஷன் தியேட்டர் பயனில்லாமல் இருக்கிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதத்தில் 27 பிரசவங்கள் நடந்திருக்கிறது. எனவே ஏறத்தாழ 84 லட்சம் ரூபாய் செலவில் 2 மாத காலத்துக்குள் அந்த ஆபரேஷன் தியேட்டரை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் பேசினார்.