திருவண்ணாமலை வஉசி நகரில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் நிதி உதவி வழங்கினார். அப்போது அப்பகுதி மக்கள் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்து போன அவர் இதுபற்றி சட்டமன்றத்தில் பேச போவதாக கூறினார்.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையினால் திருவண்ணாமலை வஉசி நகரில் மலை மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் 7 பேர் இறந்தனர். 2 நாட்கள் நடந்த மீட்பு பணியின் மூலம் மண்ணில் புதையுண்ட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நேரில் வந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். நேற்று அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்து இறந்தவர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருவண்ணாமலையில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கடுமையான கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழ விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோயிருக்கிறது. அவர்களுடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவாக செயல்படுகிற நாங்கள் அவர்களுடைய துக்கத்திலும், துயரத்திலும் பங்கு கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
பல்லாவரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததனால் இரண்டு பேர் இறந்துள்ளனர். இது பல்லாவரம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது. பல்லாவரம் மாநகராட்சி கடமையை செய்ய தவறியதால் ஏற்பட்ட விளைவு தான் இது. தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணம் கேட்டிருக்கிறது மத்திய அரசு தரும் என நம்புகிறோம். புயலால் ஏற்படும் பாதிப்புகளை வானிலை நிலையம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தது. அதற்கேற்றார் போல் முன்னேற்பாடுகள் நடைபெறவில்லை.
சாத்தனூர் அணையில் நீர் திறந்து விடும் போது படிப்படியாகத்தான் திறந்து விட வேண்டும். கடைசி நீர் வழிந்தோடும் வரை பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் எடுத்து இருக்க வேண்டும். அதை எடுக்கத் தவறியதால்தான் இன்றைக்கு திமுக அரசு மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதி உதவி கொடுத்து விட்டு வந்த ஓபிஎஸ்சை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு மண் சரிவில் ஏற்பட்ட மண் குவியல் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. மலை மீதிருந்து உருண்டு வந்த பெரிய பாறை அகற்றப்படாமல் இருப்பதால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. உடல் பாகங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ந்து போன ஓ.பன்னீர்செல்வம், இதுபற்றி சட்டமன்றத்தில் பேச போவதாக தெரிவித்தார்.
ஓபிஎஸ்சுடன் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம் எம்எல்ஏ, துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன் நகர செயலாளர் ஜி.சங்கரன், ஒன்றிய செயலாளர் கோசாலை ஜெ.வேலு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.பெருமாள் உள்பட பலர் சென்றிருந்தனர்.