Homeசெய்திகள்வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?

வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?

திருவண்ணாமலை மலையிலிருந்து பாறைகள் உருண்டு வந்து வீடுகள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெஞ்சல் புயல் காரணமாக பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 30-11-2024 காலை 8 மணிக்கு தொடங்கிய மழை சிறிது நேரம் கூட நிற்காமல் 1-12-2024 இரவு 8 மணி வரை பெய்தது.

வரலாறு காணாத இந்த மழையால் திருவண்ணாமலையில் வெள்ளக்காடானது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதி மட்டுமன்றி மேடான பகுதியில் வசித்தவர்களின வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 2 நாட்கள் பெய்த மழையில் மலை மீதிருந்து வெள்ளம் பாய்ந்தோடி ஊருக்குள் நுழைந்தது. வஉசி நகர் 11-வது தெருவில் நேற்று மாலை 6 மணி அளவில மலையிலிருந்து பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்தது.

வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?

இதில் 5 வீடுகள் இடிந்ததாக சொல்லப்படுகிறது. பெரிய பாறை ஒன்று ஓட்டு வீடு மீது விழுந்தது. மேலும் 10அடி அளவிற்கு மண் குவியலுக்குள் அந்த வீடு புதைந்தது.

இதையடுத்து பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். வீடு மீதிருந்த பாறையை நகர்த்தினர். மண் குவியலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 35 வீரர்களும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவைச் சேர்ந்த 50 வீரர்களும், மாநில மீட்பு படையைச் சேர்ந்த 20 வீரர்களும், திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் 40 நபர்களும் மற்றும் 60 போலீசாரும் மொத்தம் 170 நபர்கள் மீட்டு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நாராயணன் மகன் ராஜ்குமார் (வயது 32), பாலகிருஷ்ணன் மகள் மீனா (20), ராஜ்குமார் மகன் கௌதம் (9), ராஜ்குமார் மகள் இனியா (7), சுரேஷ் மகள் மகா (12), மஞ்சுநாதன் மகள் வினோதினி (14), சரவணன் மகள் ரம்யா (12) ஆகியோர் இடுபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது உறவினர்கள் அப்பகுதியில் கூடி அழுது புரண்டு வருகின்றனர். அவர்களையும், பொதுமக்களையும் சம்பவ இடத்திற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?

இன்று காலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பிறகு அக்ரி.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புயலின் காரணமாக திருவண்ணாமலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது, கடந்த நான்கு நாட்களாக இந்த புயலின் மூலமாக திருவண்ணாமலை மாவட்டமும் பாதிக்கும் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி வருகிறது.

இந்த நிலையில் இந்த மாவட்ட நிர்வாகமும், அரசும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக இன்றைக்கு அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்திருக்கிற மலை மலையின் மீது வசித்த 7 பேர் மரணம் அடைந்தார்கள் என செய்தி வந்திருக்கிறது. அவர்களை மீட்பதற்கு கூட இந்த மாவட்ட நிர்வாகமும் அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விவரங்களை எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவிப்போம். உரிய நிவாரண வழங்க அரசை வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின் அமைச்சர் எ.வ.வேலு, சம்பவ இடத்திற்கு வருகை தந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

இந்த புயல் காரணமாக திருவண்ணாமலையில் இதுவரை இல்லாத அளவு மழை பெய்துள்ளது. எனக்கு நினைவுக்குத் தெரிந்து 1965-ல் திருவண்ணாமலையில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் 36 முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மலையின் அடிவாரத்தில் சிக்கியவர்களை மீட்க இரண்டு நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மலை மண்ணும், கல்லும் கலந்த மலை. மழை தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் மண் சரிவு ஏற்பட்டு சிறு சிறு பாறைகள் உருள ஆரம்பித்திருக்கிறது. மலை ஓரமாக கட்டப்பட்டிருக்கிற இரண்டு வீடுகள் மீது பாறாங்கல் விழுந்துள்ளது.

ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டார்கள். இன்னொரு வீட்டில் நான்கு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெரியவர், ஒரு தாய் ஆகியோர் இடர்பாடில் சிக்கியிருப்பதாக அவர்களது உறவினர்கள் சொல்லியிருக்கின்றனர். சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில நேரங்களில் இடர்பாடுகளில் சிக்கியவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?
செங்கம் ரோடு கிரிவல பாதை
வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?
ராஜராஜன் தெரு
வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?
மத்திய பஸ் நிலைம் அருகில்
வீடுகள் மீது விழுந்த பாறைகள்-சிக்கிய 7 பேர் யார்?
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம்

நேற்று மாலை திருவண்ணாமலை மலையிலிருந்து மண் சரிவு ஏற்பட்டதால் செம்மண் கலந்த மழை நீர் வெள்ளம் போல் ஓடி நகருக்குள் புகுந்தது. ரமணாசிரமம் வழியாகவும் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் ரமணாசிரமத்தின் முன்பக்க சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

திருவண்ணாமலை மலை மீது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே போல் கவுத்திமலையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையார் மலை மீது அமைந்திருக்கும் புகழ் பெற்ற குகை நமசிவாயர் ஆசிரமத்தில் உள்ள சுவர்கள் மழையால் இடிந்து விழுந்தன. அப்போது இடிந்து விழுந்த ஒரு சுவரின் அருகே உட்கார்ந்திருந்த பக்தர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.

வீடியோ…

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!