திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் மகாதீபம் 11 ருத்ரர்களை குறிக்கும் வகையில் தொடர்ந்து 11 நாட்கள் ஏற்றப்படுகிறது.
உருவம் இல்லாமல் எல்லா இடத்திலும் மறைந்து நிறைந்துள்ள முழுமுதற்கடவுள் பரம சிவம், ஆரம்பமும், முடிவும் இல்லாத நெருப்புத் தூணாய் சோதி லிங்கமாய் அண்ட சராசரங்களைக் கடந்து பரவி நின்று பாதாளம் மண்ணுலகம் வானலோகம் ஆகிய அனைத்து உலகங்களையும் ஒளி மயமாக்கிய கார்த்திகை தீபத் திருவிழா நேற்று சிறப்புடன் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலையில் நேற்று 26ந் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் டிசம்பர் 6ந் தேதி வரை எரியும். இந்த 11 நாட்கள் தீபம் எரிவதற்கு வரலாறு உள்ளது. 11 நாள் தீபமும் 11 ருத்ரர்களை குறிப்பதாகும்.
ருத்ரர் என்றால் பிரச்சனைகளை வேரிலிருந்து அழிப்பவன் என்று பொருள். சிவபெருமான் அனைத்து பிரச்சனைகளையும் அழிப்பவர். அதனால் அவர் மகா ருத்ரர் என்று அழைக்கப்படுகிறார். ருத்ரர் சிவனின் வடிவங்களில் ஒன்றாகும். ருத்ரர் என்ற சொல் சிவனின் அக்னி அம்சத்தை மையப்படுத்துகிறது.
11 நாட்கள் தீபம் ஏற்றப்படுவது குறித்து அண்ணாமலையார் கோயில் பெரிய பட்டம் அருணாச்சல கார்த்திகேய சிவாச்சாரியார் கூறியதாவது,
ஏகாதசா ருத்ரர்கள் என்பது சிவனுடைய அம்சங்கள் ஆகும். சதாசிவனுக்கு 5 முகங்கள். மகா சதாசிவனுக்கு நிறைய முகங்கள். சதாசிவத்திலிருந்து பிரிவதுதான் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்.பரணி தீபத்தில் 5 விளக்கேற்றப்படுவது இதற்குத்தான். பராசக்திக்கு 5 சக்தி. ஈசானத்திற்கு உமா சக்தி, தத்புருடத்திற்கு கவுரி சக்தி, அகோரத்திற்கு கங்கா சக்தி, வாமதேவத்திற்கு ஞானம்பிகா சக்தி, சத்யோஜாதம் என்கிற மேற்கு நோக்கிய முகத்திற்கு அம்பிகா சக்தி. 5 சக்திகளும் சிவனுக்குள் ஐக்கியம். இந்த 5 சக்தியிலிருந்து பிரிவதுதான் ஏகாதசா ருத்ரர்கள்.
அதன்படி மகாதேவ ருத்ரர், சிவருத்ரர், ருத்ரருத்ரர், சங்கரருத்ரர், நீலலோஹித ருத்ரர், ஈசானருத்ரர், விஜய ருத்ரர், பீமருத்ரர், தேவருத்ரர், பவோத் பவருத்ரர், கபாலீசருத்ரர் என 11 ருத்ரர்கள். இந்த 11 ருத்ரர்களையும் ஒவ்வொரு தினமாக நாம் வழிபடுவதற்காக 11 நாட்கள் மகாதீபம் மலை மீது ஏற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை மலை உச்சியில் ஆரம்பம் முதல் மகா தீபம் ஏற்றப்பட்டது வரையிலான காட்சிகள்…