Homeசெய்திகள்மேல்செங்கத்தில் விமான நிலையம்-எ.வ.வேலு பேசியது என்ன?

மேல்செங்கத்தில் விமான நிலையம்-எ.வ.வேலு பேசியது என்ன?

மேல்செங்கத்தில் விமான நிலையம் அமைக்க அல்லும், பகலும் அயராது பாடுபடுவேன் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். இதே போல் திண்டிவனம் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை வேகப்படுத்த அமைச்சர் முயற்சிக்க வேண்டும் என ஆன்மீகவாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்செங்கம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது,

நகரங்கள் வளர்ச்சி பெறுவதற்கு புறவழிச் சாலை அவசியம் என்ற அடிப்படையில் செங்கத்தில் புறவழிச்சாலை அமைக்க ரூ. 5 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் நில கையப்படுத்த உத்தரவிடப்பட்டு, வருவாய்த்துறை சார்பாக விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும். செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டத்தை இணைப்பதற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. செங்கம் சட்டமன்ற தொகுதியில், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரணம் மற்றும் சாத்தனூர் இடையில் ஐடிஐ அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு ரூ. 13 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநில-மத்திய அரசாங்கம் இணைந்து நடத்திய விதைப்பண்ணை இன்றைக்கு இல்லை. இதற்கான 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் கையகப்படுத்தி கொடுத்து விட்டார் என்றால் தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

மேல்செங்கத்தில் விமான நிலையம்-எ.வ.வேலு பேசியது என்ன?

இடத்தை கையகப்படுத்தி விட்டால் ஒரு சிப்காட் என்னால் கொண்டு வர முடியும். இதனால் ஏறத்தாழ 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதை விட என்னுடைய கற்பனை, கட்டாயம், அவசியம் என எதை எடுத்துக் கொண்டாலும் சரி, என்னுடைய பகுதியின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டாலும் சரி, ஆன்மீகப் பெருமக்கள் திருவண்ணாமலைக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருகிறார்கள்.

See also  டி.டி.சி.பி அலுவலகத்தில் புரோக்கர்கள் மூலம் வசூல் வேட்டை

ஹைதராபாத்தில் இருந்து, திருப்பதியில் இருந்து வருகிறார்கள். டெல்லியில் இருந்து வருகிறார்கள். சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வருகிறார்கள். மதுரை, கோயமுத்தூரிலிருந்து பெரும் கூட்டம் வருகிறது சாலை வழியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இடத்தை மட்டும் கையகப்படுத்தி விட்டோம் என்று சொன்னால் நான் முதலமைச்சரை கட்டாயப்படுத்தி என்னுடைய கோரிக்கையாக விமான நிலையம் ஒன்று வர வேண்டும் என்ற கோரிக்கை வைப்பேன். இந்த பகுதியில் மட்டும் விமான நிலையத்தை நான் உருவாக்கி விட்டேன் என்று சொன்னால் திருவண்ணாமலை மட்டுமன்றி பக்கத்தில் உள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் எல்லாம் பயனடையும், வளர்ச்சி பெறும்.

திருவண்ணாமலை திருநகருக்கு ஆன்மீக கடமையாற்றுவதற்காக பல நாடுகளிலிருந்து பல மாநிலங்களில் இருந்து வர வேண்டும் என்று சொன்னால் இங்கு ஒரு விமான நிலையத்தை உருவாக்க வேண்டும். இந்த பண்ணை செயல்பட்ட இடம் வனத்துறைக்கு சொந்தமானது அல்ல. வருவாய்த் துறையின் கீழ் தான் இடம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்த காரணத்தினால் தான் விவசாய பண்ணையை நாம் அமைக்க முடிந்தது.

எந்த வகையிலோ அந்த இடத்தை மட்டும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்களும், மாவட்ட ஆட்சித் தலைவரும் அரசுக்கு கொண்டு சேர்க்கும் முனைப்போடு ஈடுபட வேணடும் என கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் தனிப்பட்ட வேண்டுகோளாக வைத்து விமான நிலையம் உருவாக்குவதற்கு அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் விஜயராணி குமார், துணைத் தலைவர் சுமதி பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேல்செங்கம் பண்ணை 2011 நிலவரம்

மேல்செங்கம் பகுதி, 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனத்துறையால் மத்திய மாநில பண்ணை கழகத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு, வனத்துறையால் மீண்டும் கையகப்படுத்தப்பட்டது. 17-05-2006 அன்று GO Ms. எண் 147, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின்படி குத்தகைக்கு TAFCORN (தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

See also  வேங்கிக்கால் ஏரி கரை உடைப்பு- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மேல்செங்கம் பண்ணையில் கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் போன்றவற்றை மதிப்பீடு செய்ய தமிழ்நாடு வனத்துறை மூலம் மத்திய மாநில பண்ணை கழகத்திற்கு டிமாண்ட் டிராப்ட் மூலம் ரூ.81.08 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் சேர்க்கப்படாத சில கடைப் பொருட்கள் மற்றும் மின்சாரம்/தொலைபேசி வைப்புத்தொகை போன்றவற்றிற்காக மத்திய மாநில பண்ணை கழகத்திற்கு டிமாண்ட் டிராப்ட் மூலம் ரூ.3.62 லட்சம் கூடுதல் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

பண்ணையின் பரப்பளவு 3924.82 ஹெக்டேர். மத்திய மாநில பண்ணை கழகம் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, ஜிசிபஸ், சிட்ரஸ், முந்திரி, தென்னை போன்ற பல்வேறு மற்றும் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சுமார் 838 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளது.

இத்தகவலை டாப்கார்ன்(தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்) 2011-ல் வெளியிட்டது.

பற்ற வைத்த பாஜக

2002-ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த பண்ணையை மீண்டும் செயல்பாட்டுக் கொண்டு வருவோம் என ஒவ்வொரு தடவையும் நாடாளுமன்ற-சட்டமன்ற தேர்தலின் போது திமுக, அதிமுக வேட்பாளர்கள் சொல்வது வழக்கம். இரண்டு கட்சிகளும் மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் இது நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்த பண்ணை மூடப்பட்டதால் 10 ஆயிரம் பேர் வேலை இழுந்திருப்பதாகவும், இந்த பண்ணையை மத்திய அரசு முழுவதுமாக எடுத்துக் கொண்டு 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், வேளாண் கல்லூரி அமைக்க மானியமாக இடத்தை வழங்க வேண்டும் எனவும் அதிமுக தரப்பில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேல்செங்கம் பண்ணையை சுற்றுலா வசதிகளுடன் கூடிய பல்லுயிர் பூங்காவாக இப்பகுதியை மேம்படுத்த ரூ.200 கோடியில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இப்பகுதியின் பகுதிகள் வன நிலமாகவும், வனத் தோட்டக் கழகத்தின் கீழும் இருக்கும் போது, மீதமுள்ள பகுதி பல்லுயிர் பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படும் என மாவட்ட வன அதிகாரியாக இருந்த கிருபா சங்கர் பேட்டி அளித்திருந்தார்.

See also  ஸ்ரீமதி மரணம்-சிபிஐ விசாரிக்க அகமுடையார் சங்கங்கள் கோரிக்கை

2014-ஆம் ஆண்டு மத்திய வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, சி.என்.அண்ணாதுரை எம்.பி, சந்தித்து மேல்செங்கம் பண்ணையை சுற்றுச்சூழல் சுற்றுலா, இயற்கை வேளாண்மை, வனம் தொடர்பான கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய பண்ணைகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பண்ணையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

திருவண்ணாமலை பகுதியில் விமான நிலையம் அமைப்பேன் என திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் போட்டியிட்ட போது வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் திருவண்ணாமலை-திண்டிவனம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் விரைவு படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மேல்செங்கம் பண்ணை செயல்பட்டு வந்த இடத்தில் விமான நிலையம் கொண்டு வரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

திண்டிவனம் ரயில் பாதை

அடுத்த ஆண்டு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரக் கூடிய நிலையில் அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதலே எ.வ.வேலு, இந்த விமான நிலையம் அமைத்திட தேவையான நடவடிக்கை எடுத்திருக்கலாமே? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே போல் திருவண்ணாமலை-திண்டிவனம் ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை விரைவு படுத்திட மத்திய அமைச்சர்களை, எ.வ.வேலு சந்தித்து மனு அளித்திட வேண்டும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரக் கூடிய போராட்டங்களை முன் எடுக்க வேண்டும் திருவண்ணாமலை மக்களும், ஆன்மீகவாதிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

அமைச்சர் சொன்ன தகவல்…

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!