குழந்தை பாக்கியம் தந்த அண்ணாமலையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் கரும்பு தொட்டிலில் குழந்தையை உட்கார வைத்து தம்பதியினர் கிரிவலம் வந்தனர்.
தினமும் மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கும் தீப மாதமான தீபச் சுடர் உருவம் லிங்கப் பரம்பொருள் மாதமான கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் கரும்புத் தூளியுடன் வீதி வருபவர்கள் பலர்.
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே (அப்பர்)
என கரும்பு என்றால் மற்றவர்களுக்குத் தை மாதம் பொங்கல் பண்டிகை .
இனிக்கும் உணவுப் பொருள்.
ஆனால் திருவண்ணாமலையில் பரஞ்சோதி லிங்கத் தீபத் திருவிழா நடக்கும் மாதமான கார்த்திகை மாதமே கரும்புகள் காணக் கிடைக்கும்.
கரும்புத் தூளியில் குழந்தையை இட்டுச் சுமந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலின் நான்கு வீதிகளையும் பெற்றோரும், உறவினரும் கார்த்திகை மாதம் வலம் வருவதைக் காணலாம்.
பெண் ஆகிய பெருமான் — அண்ணா மலை
பெண் ஆண் என நின்ற பெம்மான்
பிறைச் சென்னி “அண்ணா மலை நாடன்”
(சம்பந்தர்)
அண்ணா மலையான் —- பெண்ணாகி ஆணாய் அலியாய் (திருவாசகம்)
என குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் எல்லோருக்கும் தந்தையாகவும், தாயாகவும் இருபால் அம்மை யப்பனாகவும் உள்ள அண்ணா மலையாரை வழிபட்டுக் குழந்தை பாக்கியம் பெற்ற போது நேர்த்திக் கடனாக அந்தக் குழந்தையைக் கரும்புத் தூளியில் இட்டுத் தோளில் சுமந்து திருக் கோயிலை வலம் வருகின்றனர்.
கரும்பின் ஒவ்வொரு கணுவில் இருந்தும் புது கரும்பு கிடைக்கும். கரும்புக்கு விருத்தி அடையும் பண்பு உள்ளது. இது போல் வம்சம் விருத்தி அடைய கரும்பு தொட்டில் கட்டப்படுகிறது.
மிகப்பெரிய துயரம் குழந்தை பாக்கியம் இல்லாததுதான். அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டால் ஓரிரு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது. 10 வருடமாக குழந்தை இல்லாதவர்ககளும் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டதால் ஒன்றல்ல, இரண்டு குழந்தை பிறந்தாக தெரிவிக்கின்றனர்.
வம்சம் வளரச் செய்து குலம் ஒளி வீசி வாழ அருளிய தீப நாயகனை மறக்காமல் மூன்று நான்கு ஆண்டுக்குள் வருபவர்கள் நடப்பது சுலபம். காலம் தாழ்த்திக் குழந்தைக்கு 8, 9 வயது ஆன பின் வருபவர்கள் சற்று திண்டாடுகின்றனர்.
சில குழந்தைகள் தூளியுடன் தாமே நடப்பதை பார்க்கலாம். (இரண்டு கால்களுக்கு நடுவே தூளி). கார்த்திகை மாதம் முடிந்தும், மார்கழி மாதமும் கரும்பு தொட்டில் வலம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
வழக்கமாக குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்பு தொட்டில் ஏந்தி மாடவீதியை சுற்றி வருவதுதான் வழக்கம். ஆனால் கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் அமர வைத்து கிரிவலம் வந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் இது பற்றி கூறுகையில் குழந்தை வரம் கிடைக்க அண்ணாமலையாரை வேண்டி கிரிவலம் வந்தோம். ஈசன் குழந்தை வரம் அருளினார். இதனால் கரும்பு தொட்டிலில் குழந்தையை ஏந்தி கிரிவலம் வருகிறோம் என்றனர்.
விளம்பர மோகத்திற்காக பரதநாட்டியம், கோலோட்டம் ஆடிக் கொண்டு கிரிவலம் வருபவர்கள் மத்தியில் கரும்பு தொட்டிலை சுமந்து 14 கிலோ மீட்டர் மலையை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றியது மற்ற தலங்களில் காணக் கிடைக்காத காட்சியாகும்.
-செந்தில் பகவதி