திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 1 ம் தேதி கனமழை பெய்தது. இதில் மலை மீது திடீரென மண் சரிவு ஏற்பட்டு, 40 டன் கொண்ட பெரிய பாறை உருண்டு கீழே வந்தது. இந்த பாறையை நவீன தொழில் நுட்பமுறையில், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடைத்து அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று பார்வையிட்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சுமார் 225 துளைகள் 5 அடி ஆழத்திற்கு இடப்பட்டு புதிய தொழில்நுட்பம் மூலம் சிறு, சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்னும் மூன்று, நான்கு தினங்களுக்குள் அந்தப் பணி முடிவடையும். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் உடைக்கப்பட்ட பாறை துண்டுகளை, தண்ணீர் இறங்கும் பகுதிகளில் செக்டேம் (தடுப்பணை) கட்டுவதற்கு பயன்படுத்தலாம் என குழு சொல்லி உள்ளது. கோபுர பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கே உள்ள இரண்டு சிறிய பாறைகளையும் புதிய நுட்பத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
பொதுவாக இந்த மலை இரண்டு பகுதியாக இருக்கிறது ஒரு பகுதி வனத்துறையிலும், இன்னொரு பகுதி வருவாய் துறையிலும் உள்ளது. வருவாய் துறை பகுதியில் தான் 1965-ஆம் ஆண்டு வாக்கில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. தரிசு என்ற அடிப்படையில் தான் அது இருக்கிறது. தரிசு என்று பட்டா கொடுப்பதற்கு வருவாய் துறைக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அடிப்படையில் தான் வருவாய்த் துறைக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பெரும்பான்மையான பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
சில பேர் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தேவை கருதி வீடுகளை கட்டியிருக்கிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. யானை ராஜேந்திரன் சிறந்த, மூத்த வழக்கறிஞர். அவர் ஐகோர்ட்டில் நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும், மலைகளில் உள்ள வீடுகளை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருக்கிறார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் குழவை நியமித்திருக்கிறது. அவர்கள் ஆலோசனைகளை வழங்கும் போது மாவட்ட நிர்வாகம் அந்த குழு சொல்வதை கேட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மலை பகுதியில் இருப்பவர்களை அப்புறப்படுத்த எந்தவித ஆணையும் அரசு பிறப்பிக்கவில்லை. வருவாய் துறை மூலம் சட்டப்படி பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்படாமல் பட்டா பெறவில்லை. அரசுக்கு பட்டா கொடுக்க அதிகாரம் இருக்கிறது. அந்தப் பட்டாவை தான் நாங்கள் வாங்கி இருக்கிறோம், அந்த பட்டாவை வைத்து தான் வீடு கட்டி இருக்கிறோம். அதனால் தான் எங்களுக்கு மின்சார இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் அதுதான் முகவரியாக உள்ளது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டையும் உள்ளது. குடிநீர் இணைப்பும் அதில் தான் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ள குழு எங்களை அப்புறப்படுத்தி விடுமோ?என்ற பயம் இருக்கிறது என இப்பகுதியில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலம் சென்னையில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரை அணுகி நியாயத்தை உயர்நீதிமன்றத்தில் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன் மற்றம் பலர் உடனிருந்தனர்.