நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில் நிதியை பயன்படுத்தி வணிக கட்டிடங்கள் கட்ட முடியாது என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பு, திருவண்ணாமலை கோயிலுக்கும் பொருந்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் நந்திவரம் நந்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில் ரூ.1 கோடியே 12 லட்சம் செலவில் 15 கடைகள் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. இதை எதிர்த்து பாஸ்கர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.
கடைகள் மூலம் கோயிலுக்கு வருமானம் கிடைக்கும், இந்த கடைகள் இந்து சமயத்தினருக்கு ஒதுக்கப்பட்டு, பூஜை பொருட்கள், பாத்திரங்கள், சைவ உணவகங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறையின் வாதமாக இருந்தது.

பாஸ்கரனின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகநாத், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் 36, 36-A மற்றும் 36-B பிரிவுகளின் கீழ் இந்துக் கோயிலின் ‘உபரி நிதி’ இந்து திருமணங்கள் அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க பயன்படுத்தப்படலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது.
1959 ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளை (HR&CE) சட்டத்தின் பிரிவு 66-ல் கோயிலால் பெறப்படும் நன்கொடைகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் எதுவும் வணிக ஷாப்பிங் கட்ட அனுமதிக்கவில்லை என வாதிட்டார்.
இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட 2 நீதிபதிகள் அமர்வு கடைகள் கட்டும் டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்து, கோயிலின் நிதியை வணிக கட்டிடங்களுக்கு பயன்படுத்த முடியாது என தீர்ப்பு வழங்கினர். மேலும் பூர்வீக மரங்களை நடுதல், ஏழை இந்துக்களுக்கு திருமணங்கள் நடத்துதல், இருக்கும் கட்டிடத்தை ஏழைகளுக்கு உணவளிக்கக் கொட்டகையாகப் பயன்படுத்துதல் ஆகிய மூன்று பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.
இந்த தீர்ப்புபை வரவேற்றுள்ள ஆயல வழிபடுவோர் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.ரமேஷ், இது மிகவும் நல்ல செய்தி, தமிழகத்தில் கோயில் நிதி, சொத்துக்கள் மூலம் சட்டவிரோத கட்டுமானங்களில் ஈடுபடுவதிலிருந்து பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து, 1000 கோடி கோயில் நிதியை வீணடித்தது என கருத்து தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிதியிலிருந்து ராஜகோபுரம் முன்பு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் அமைக்கும் பணிக்கு ரூ.6 கோடியே 40 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிற நிலையில் அவர்களுக்கு கடைகள் கட்டும் இடத்தில் வசதிகளுடன் கூடிய தங்கும் குடிலை அமைக்க வேண்டும் என்பது பெரும்பாலோனரின் கருத்தாக இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் ராஜகோபுரம் முன்பு கடைகள் கட்ட கோர்ட்டு தடை விதித்தது. லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் வரும் நிலையில் கிரிவலப்பாதையில் பல இடங்களில் கழிவறைகளையும், தங்கும் அறைகளையும் கட்டித் தரவேண்டும், நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகளுக்கு கோயில் இடத்தில் தற்காலிக கடைகளை ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை கோயில் நிர்வாகம் நிறைவேற்றித் தரவில்லை.
ஆனால் வருமானத்தை பெருக்கும் நோக்கில் அஷ்டலிங்கங்களில் புதிது புதிதாக உண்டியல்களை வைக்க ஆரம்பித்தது.
குபேர லிங்கத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் நடந்தும், கார்களிலும், வேன்களிலும், ஆட்டோக்களிலும் வந்து செல்கின்றனர். அண்ணாமலையார் கோயிலை போன்றே குபேர லிங்கத்திற்கு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. இதனால் வானங்கள் சாலையிலே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குபேர லிங்கம் பகுதியில் கோயிலுக்கு சொந்தமாக பெரிய இடம் இருந்த போதிலும் அங்கு பக்தர்கள் இளைபாற எந்த வசதியும் இல்லை.
இந்நிலையில் அந்த இடத்தில் கோயில் நிதி மூலம் புதியதாக 10 கடைகளை கட்டும் பணியில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதே போல் காந்திநகர் சக்தி விநாயகர் கோயில் அருகிலும் இந்து சமய அறநிலையத்துறை ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் 10 கடைகளை கட்டி வருகிறது. பூந்தோட்டமாக இருந்த இந்த இடம் சைவ வேளாளர் மரபினருக்கு சொந்தமானதாகும்.
அண்ணாமலையார் கோயிலுக்கும், அங்குள்ள சம்பந்த விநாயகருக்கும், சன்னதி தெருவில் உள்ள வல்லப கணேசருக்கும் செல்லனேரி தெரு விநாயகருக்கும் ஒவ்வொரு நாளும் மாலையில் நடைபெறும் வழிபாட்டின் போது மாலை தொடுத்து தரும் நோக்கில் இந்த பூந்தோட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவர்களின் நோக்கம் நிறைவேறாமல் போய் விட்டது.
தற்போது இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறை வசம் உள்ளது. புதர்கள் சூழ்ந்து கிடக்கும் இந்த பூந்தோட்டத்தில் இருக்கும் மண்டபம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த இடத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் கட்ட ஏற்கனவே இருந்த அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ரூ.3 கோடிக்கு மேல் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம், திருவண்ணாமலைக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்ய தர வேண்டும்?, மாடவீதி இல்லாமல் மற்ற இடங்களில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை பயன்படுத்தி வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளை எப்படி செய்து தருவது என திட்டமிடாமல் வருமான நோக்கில் கடைகள் கட்ட மட்டும் முன்னுரிமை தருவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ஆன்மீகவாதிகள், இந்து சமய அறநிலையத்துறையின் சட்டதிட்டங்களை மேற்கோள் காட்டி நந்தீஸ்வரர் கோயில் வணிக கட்டுமானங்களுக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
– படங்கள்-பார்த்திபன்