சாத்தனூர் அணை பிக்கப் அணைக்கட்டில் இடது மற்றும் வலது புறகால்வாய்களில் தண்ணீரை எ.வ.வேலு இன்று திறந்து வைத்தார். மந்திரங்கள் ஓத, கற்பூர ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாயில் ஆர்ப்பரித்து ஓடியது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119 அடியாகும். நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாகும். இன்று காலை 8.00 மணி அளவில் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 118.75 அடியாகவும், கொள்ளளவு 7264 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
இதையடுத்து பாசனத்திற்காக உலகலப்பாடி பிக்கப் டேமில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி தண்ணீர் திறக்கும் இடத்தில் வேதபண்டிதர் மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகளை செய்தார். பிறகு கற்பூர ஆரத்தி காட்டினார். அப்போது அந்த இடத்திற்கு வந்த அமைச்சர் எ.வ.வேலு, தண்ணீரை திறந்து வைத்தார். பிறகு ஆர்ப்பரித்து ஓடிய தண்ணீரில் பூக்களை தூவினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
முதலமைச்சர் ஆணைக்கிணங்க விவசாய பயன்பாட்டிற்காக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இடதுபுற கால்வாயிலிருந்து வினாடிக்கு 320 கன அடியும், வலதுபுற கால்வாயிலிருந்து வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று முதல் 17.05.2025 வரையிலான 110 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்படும். 25 நாட்களுக்கு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 58 கிராமங்களும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 119 கிராமங்கள் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும். ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களின் உற்பத்திக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் ராஜாராமன், உதவிப்பொறியாளர்கள் சந்தோஷ், ராஜேஷ், செல்வபிரியன், சுகந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வீடியோ…