திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசன விழாவில் காலடியில் அரக்கனை மிதித்தும், குஞ்சிதபாதத்தோடும் நடராஜர் ஆனந்த நடனமாடினார்.
கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் லிங்கப் பரம்பொருள் திருவிழா. மார்கழித் திருவாதிரை எல்லோருக்கும் ஆனந்தம் அருளும் ஆனந்தக் கூத்தன் திருநாள். சிதம்பரத்தில் பூஜையும் வேள்வியும் செய்து நடராஜரின் திருச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து பொன்னம்பலம் ஆக்கி வழிபட்டுத் தொழுதுத் துதித்துப் போற்றிய அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் அனைவருக்கும் சிவலோக ஆனந்தக் கூத்தன் திருநடனக் காட்சி அருளிய திருநாளே ஆருத்ரா தரிசனம் எனப்படும் மார்கழித் திருவாதிரைத் திருநாள்.
ஈசனுக்கு ஆதிரையான் என்று அருள் நாமம். திருவாதிரை நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று பெயர். ஐந்து தொழில் ஓசையொலி இயக்க நாதர் நடராஜர் இல்லாத கோயில் இல்லை. திருச்சேறை சார பரமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிறு கோயில்களிலும் கருவறைச் சுவற்றில் கல் மேனி நாடராஜர் அருள் புரிவார்.
ஆதிஅண்ணாமலையார் கோயில் போன்ற பழைய கோயில்களில் நடராஜர் சந்நிதி தனி நுழை வாசலுடன் இருக்கும். கார்த்திகை தீபம் போல் பழங் காலத்திலிருந்து இலக்கியங்களில் போற்றப்படும் தூய தமிழர்த் திருவிழாவாகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை யொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலை நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
மகா தீபாராதனைக்கு பிறகு திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட மையால் நடராஜரின் நெற்றியில் திலகமிடப்பட்டது.
ஆருத்ரா தரிசனத்தன்று சக்தி, சிவனோடு ஐக்கியமாவதை குறிக்கும் வண்ணம் நடராஜரின் நெற்றியில் தீப மை திலகமிடப்படுகிறது. இதன் மூலம் உலகம் இன்று முதல் பிரபஞ்சமாகிறது என்று அர்த்தமாகும். இதைத் தொடர்ந்துதான் தை மாதம் முதல் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
பிறகு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து வெளியே வந்த நடராஜர் கோயிலுக்குள் கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சியளித்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தார்.
நடராஜ பெருமான் ஆடக்கூடிய நடனத்திற்கு ஆனந்த தாண்டவம் என்று பெயர். சிவபெருமான் ஏன் ஆடினார்? தன் பக்தர்களை மகிழ்விக்க வேண்டும் என்று சில நேரங்களில் ஆடினார். சில நேரம் பக்தர்களை இடையூறு செய்யக்கூடிய அசுரர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவும் ஆடி இருக்கின்றார். உலக மக்கள் நலன் பெற வேண்டும் என்பதற்காக மன்னுயிரில் பிறந்த உயிர்களெல்லாம் வாழ வேண்டும் என்பதற்காக இறைவன் ஆடிய தாண்டவத்தில் மிக முக்கியமான தாண்டவம் ஆனந்த தாண்டவம்.
ரிஷிகளின் செருக்கை அடக்க சிவபெருமான், பிச்சாடனார் வேடம் எடுத்து முயலகன்( அபஸ்மாரன்) என்ற அரக்கனை போரில் வென்று தன் காலடியில் மிதித்து நடனமாடினார் என்பது புராணத்தில் சொல்லப்பட்டதாகும். இதைக் குறிக்கும் வண்ணம் காலடியில் அரக்கனை மிதித்தும், இடது காலில் குஞ்சிதபாதத்தோடும் நடராஜர் ஆனந்த நடனமாடினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு நடராஜரை தரிசித்தனர்.
திருவாதிரை நாளில் நடராஜருக்குப் படைக்கப்படும் எளிய உணவு களியாகும். திருவாதிரை நாளில் படைக்கப்படுவதால் திருவாதிரைக் களி என சொல்லப்படுகிறது. திருவூடல் தெரு சந்திப்பில் நடராஜ பெருமான் வந்த போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூரிய நாராயணா தேவராப்பாடசாலை சார்பில் நடராஜர் முன்பு திருவாதிரைக் களி படைக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. வரிசையில் நின்று களி அமுதை பக்தர்கள் பெற்றுச் சென்றனர். மாடவீதியை வலம் வந்து நடராஜர், மீண்டும் கோயிலை சென்று அடைந்தார்.