திருவண்ணாமலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் டீச்சர் வேலைக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற துணை ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை பள்ளி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார். உடற்கல்வி ஆசிரியராக இருந்த இவர் துணை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்.
இந்நிலையில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் ரோடு சாரோனில் ஏ.எல்.சி அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பதவிக்கு கவிதா என்பவர் தேர்வானார். இவரது நியமனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அரசால் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணியிடங்களை அந்த பள்ளி நிர்வாகமே நிரப்பி கொள்ளலாம். இந்த நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் நடந்துள்ளதா? என்பதை பள்ளி கல்வித் துறை ஆய்வு செய்து அனுமதி வழங்கும்.
அதன்படி கவிதாவின் நியமனத்திற்கு அனுமதி வழங்க பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமார், கவிதாவின் கணவர் ஆனந்தசீரிடம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இவர் இளங்கலை உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்ச பணமாக கொடுக்க முடிவானது.
இந்த லஞ்ச பணம், செந்தில்குமாரின் மனைவி புஷ்பவள்ளி என்பவரின் வங்கி கணக்குக்கு கூகுள் பே மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இது பற்றி கவிதாவின் கணவர், முதன்மை கல்வி அதிகாரிக்கு புகார் அனுப்பினார். இதன் பேரில் முதன்மை கல்வி அதிகாரி சுவாமி முத்தழகன் விசாரணை நடத்தி பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
அதே சமயம் ஆசிரியர் நியமனத்திற்கான அனுமதி கல்வித்துறை உயரதிகாரிகள் தர வேண்டும் என்ற நிலையில் மாவட்ட கல்வி அதிகாரியின் கீழ் பணிபுரியும் செந்தில்குமார், யாருக்காக லஞ்சம் பெற்றார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆசிரியை நியமனத்திற்கு பள்ளி துணை ஆய்வாளர் லஞ்சம் பெற்ற சம்பவம் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.