சாலை மறியலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் சிலரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும், மேலும் பல்வேறு தீர்த்த குளங்கள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது என்று யானை ராஜேந்திரன் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன்தான், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்குளும் கட்ட அனுமதிக்கலாம் என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஜகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்த குழு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 3 முறை கூடி ஆலோசித்தது. மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடத்தை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன், நீதிமன்றத்திற்கு உயிர்கள் முக்கியம், வீடுகளுக்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது என கருத்து தெரிவித்திருந்தார்.
மலை மீது எத்தனை கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது வீடுகளை காலி செய்ய விருப்பம் என்ற மனுவை அங்கிருப்பவர்களிடம் கொடுத்து கையெழுத்தை பெற்றனர். அதிகாரிகள் வலுகட்டாயமாக கையெழுத்தை பெறுவதாக கூறி கடந்த மாதம் 26-ந் தேதி பேகோபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் கணக்கெடுப்பை நிறுத்தினர்.
மலையில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலை மீது 6 ஆயிரம் வீடுகள் உள்ளது. 1535 வீடுகள் அபாயகரமான இடத்தில் உள்ளது. வீடுகளை அகற்ற வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் உத்தரவு. அதை அனுசரித்து அரசு கொடுக்க கூடிய சலுகைளை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. அங்கேதான் இருப்பேன் என்று சொன்னால் இருக்க முடியாது என வழக்கு தொடர்ந்திருந்த யானை ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாரிகள் மீண்டும் விருப்ப மனுக்களை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இதைக் கண்டித்து பேகோபுர தெரு மக்கள், பேகோபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து இருபுறங்களிலும் தடைபட்டது. இந்த தகவல் மற்ற பகுதிகளிலும் பரவியது. சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பிலும். போளூர் ரோடு ஆகிய இடங்களிலும் சாலை மறியல் நடைபெற்றது. இந்த 3 இடங்களிலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், 50 ஆண்டு காலமாக இங்கு வசித்து வருகிறோம். கல்லையும், மண்ணையும் சுமந்து கஷ்டப்பட்டு வீடு கட்டியிருக்கிறோம். எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது போ என்று சொன்னால் பிள்ளை குட்டிகளோடு எங்கே போவது? இங்கேதான் இருப்போம், இங்கேத்தான் உயிரை விடுவோம், எங்களிடம் ஓட்டு கேட்டு வராதீர்கள் என ஆவேசமாக தெரிவித்தனர்.
அவர்களிடம் வருவாய்த்துறையினரும், போலீசாரும் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பேகோபுரத் தெருவில் சாலைமறியலை தொடர்ந்த சிலரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 45 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 3 இடங்களிலும் போராட்டதில் ஈடுபட்ட 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி சரவணன் (அதிமுக) உள்பட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.