திருவண்ணாமலை மாடவீதிகளில் போக்குவரத்தை தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாமன்ற மேயர் நிர்மலா வேல்மாறன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், தூய்மை அருணை, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், தனியார் பேருந்து இயக்குபவர்கள் சங்கம், தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் அரசுதுறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
தேரோடும் வீதிகளான தேரடி தெரு, திருவூடல் தெரு, பேகோபுர தெரு, பெரிய தெரு என நான்கு தெருக்களில் தான் மொத்த கடையும் அமைந்திருக்கிறது. பெரிய தெரு என பெயர் வந்ததற்கு அந்த தெரு அகலமாக இருந்தது தான் காரணம். கடையே இல்லாமல் இருந்த பெரிய தெரு இப்போது முழுவதும் கடைகளாகி விட்டது.
சமூகவலைத் தளங்களில் வருகிற விமர்சனங்கள் மிகவும் மோசமாக இருக்கிறது நேரடியாக என்னை தாக்கியே வருகிறது. நான் பொது நலத்துக்காக உழைக்கிறேன். இந்த ஊர்ல இருக்கிற சட்டமன்ற உறுப்பினருக்கு கண் இருக்கிறதா? என பதிவு வருகிறது. காரணம் போக்குவரத்து நெரிசல். போக போக இன்னும் எப்படி ஆகும் என சொல்ல முடியாது.
மாடவீதிகளில் எந்த காரணத்தைக் கொண்டும் போக்குவரத்து இருக்கக் கூடாது. எனக்கு ஆன்மீகம் என்பது இல்லை. ஆனால் நான்தான் இந்த ஊருக்கு நிறைய செய்து கொண்டிருக்கிறேன். நேர்த்தி கடனை செலுத்துபவர்கள் திருமலையில் ஏழு மலையைத் தாண்டி செல்வதில்லையா? ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்கள் எப்படி செல்கிறார்கள்?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், கார் பார்க்கிக்கும் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதை நேரடியாக பார்த்து விட்டு வந்தேன். 4 வீதிகளிலும் போக்குவரத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். ஆரம்பத்தில் கசப்பு இருக்கத்தான் செய்யும். அரசு மீது விமர்சனங்கள் இருக்கும். ஒரு மாதம் ஆகிவிட்டால் அதே பழக்கம் ஆகிவிடும். முதல் கட்டமாக தேரோடும் விதியை கண்ட்ரோல் செய்யுங்கள்.
100 சதவீதம் யாரையும் திருப்தி படுத்த முடியாது. நடந்துதான் போக வேண்டும், நடந்து வந்து தான் வியாபாரம் செய்ய வேண்டும். நடந்து வந்து தான் சாமி பார்க்க வேண்டும். அந்த நிலையை உருவாக வேண்டும்.
உள்ளூரில் சொந்த கார், இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் மூலம் பாஸ் வழங்க வேண்டும். இந்த பாஸ்சில் ஆன்மீகத்தை குறிக்கும் வண்ணம் கோயில், மலை இடம் பெற வேண்டும். அறிவிப்புகளை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம், கர்நாடகம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பலகைகளை வைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் பெரியார் சிலை, காந்திநகர், திருக்கோயிலூர் ரோடு வழியாக எடப்பாளையம் ரிங் ரோடு சென்று மணலூர்பேட்டை ரோடு சண்முகா கலைக்கல்லூரி வழியாக வந்து அங்காளம்மன் கோயிலில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். தண்டராம்பட்டு மார்கமாக செல்லும் பஸ்களுக்கும் இதுதான் வழி. செங்கம் மார்கமாக செல்லும் பஸ்கள் காமராஜர் சிலை அருகில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். கல்நகர், ஆடுதொட்டி தெரு, திருவள்ளுவர் சிலை, விஜய மஹால் சந்திப்பு, காந்திநகர், மத்தலாங்குளத் தெரு வழியாக பஸ்கள் மத்திய பஸ் நிலையத்திற்கு வர வேண்டும்.
மூணு மாதம் வரைக்கும் தான் இந்த ஏற்பாடு. புது பஸ் ஸ்டாண்ட் ஆரம்பித்து விட்டால் இது வழக்கமாகி விடும். பிப்ரவரி 1-ந் தேதி முதல் இது அமல்படுத்தப்படும். ஆட்டோக்களுக்கு பர்மிட் கொடுத்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால் வண்டிகளை எங்கே நிறுத்துவது? இதற்கு மேல் பர்மிட் கொடுக்காதீர்கள். ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. கிலோ மீட்டருக்கு இவ்வளவுதான் என கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். வெளியூர் ஆட்டோக்கள் வந்தால் போலீஸார்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.
இந்த கட்டணம் குறித்து ஓட்டல் கடை, டீ கடை, பஸ் ஸ்டாண்ட் என பொதுவான இடங்களில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும். தீபத்துக்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தினம் செய்கிற நிலை வந்து விட்டது. இந்த திட்டங்கள் தீபத்துக்கும் பொருந்தும், கிரிவலத்துக்கும் பொருந்தும், மற்ற நாட்களில் பொருந்தும்.
பகலில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் இரவு நேரங்களில் இருப்பதில்லை. எவ்வளவு போலீஸ் தேவை என்பதை சொன்னால் முதல்வரிடம் பேசி வாங்கி இந்த பற்றாக்குறையை போக்கித் தருகிறேன். இரவு பணி இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. வெளியூரிலிருந்து வருபவர்கள் இரவு 10 மணிக்கு மேல் தான் வந்து தெருக்களில் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள்.
இதனால் வீட்டு முன் கோலம் போடுவதற்கும், குழந்தைகளை பள்ளிக்குச் அழைத்துச் செல்லவற்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இனிமேல் இரவு நேரத்திலும் போலீசார் பணியில் இருக்க வேண்டும். பகல் நேரத்தைப் போல் இரவு நேரங்களிலும் வாகனங்கள் வரக்கூடாது. வாகனங்களை நிறுத்த தனியார் கார் பார்க்கிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கேட்ட கேள்விகளுக்கு எ.வ.வேலு பதிலளித்தார்.
அந்த விவாதம் வருமாறு,
பிச்சாண்டி
ஆளுக்கு 200 ரூபாய், 300 ரூபாய் வாங்கிக் கொண்டு ஆட்டோக்காரர்கள் கிரிவலம் செல்கிறார்கள். ஆட்டோக்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
வேலு
கிரிவலப் பாதைக்கு இப்போது போக வேண்டாம். மாட வீதியை பற்றி பேசுவோம்.
பிச்சாண்டி
மாடவீதிகளில் திருமண மண்டபங்கள் உள்ளது. எப்படி கல்யாணம் செய்வார்கள்? டாக்டர்கள் மருத்துவமனையை கட்டி இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது என்று கேட்பார்கள்.
வேலு
டாக்டர்கள் மருத்துவமனை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக ஒன்றும் செய்ய முடியாது.
பிச்சாண்டி
கால் உடைந்தவர்கள் எலும்பு டாக்டரிடம் வரவேண்டும் என்றால் ஆட்டோவில் தான் வர வேண்டும்.
வேலு
அரசாங்கத்தை பொருத்தவரைக்கும் சுயநலத்திற்காக எதையும் செய்ய முடியாது, பொதுநோக்கம் பார்த்து தான் செய்ய வேண்டும். டாக்டர்கள் வீடுகளை கிளினிக்காக மாற்றி விட்டார்கள் என்பதாலும். கல்யாண மண்டபம் இருக்கிறது என்பதாலும் சட்டத்திட்டங்களை மாற்ற முடியாது. கூட்டத்தை கட்டுப்படுத்த என்ன வழி என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர பதினைந்து டாக்டர் இருக்கிறார்கள், 10 பேர் கல்யாண மண்டபம் வைத்திருக்கிறார்கள் என்பதாலும் ஒன்றும் செய்ய முடியாது.
பிச்சாண்டி
ஒரு மாதம் அமல்படுத்தி பாருங்கள், அதில் உள்ள சாதகம், பாதகங்களை தெரிந்து செய்யுங்கள். இங்கு சம்மதம் தெரிவித்து விட்டு வெளியில் சென்று ஆட்சியை பற்றி பேசுவார்கள்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சந்திர பிரகாஷ் பேசுகையில், நகரில் ஆயிரம் தங்கும் விடுதிகள் உள்ளது. அனுமதியின்றி இல்லாமல் இந்த விடுதிகளை நடத்துகிறார்கள். இவர்களால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வீடுகளை லாட்ஜ்களாக ஆக்கி விட்டார்கள். இவர்களால் திருவண்ணாமலை நகராட்சிக்கு அதிகமான தண்ணீர் செலவு ஆகிறது. இவர்கள் யாருமே கார் பார்க்கிங் வைத்திருக்கவில்லை. சட்டவிரோத செயல்களும் நடக்கிறது. இதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,
• திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டும், இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
• கோயிலை சுற்றியுள்ள மாடவீதி தெருக்களையொட்டி வசிக்கும் உள்ளுர் வாசிகள் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக, தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
• திருவண்ணாமலை மாநகரில் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடங்கள் (வேலூர் –அவலூர்பேட்டை சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானத்திலும், திண்டிவனம் – வேட்டவலம் சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன், காந்தி நகர் மைதானம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் நிறுத்தவும், திருக்கோவிலூர் சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் நிறுத்தவும், மணலூர்பேட்டை, தண்டராம்பட்டு சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் SR ஸ்டீல் கம்பெனி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தவும், செங்கம் சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் சந்தைமேடு மைதானம், அத்தியேந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
• திருவண்ணாமலை மாநகரில் ஆட்டோக்கள் சென்றுவர அனுமதிக்கப்படும் வழித்தடங்கள் : – காந்திநகரிலிருந்து அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு செல்லும் ஆட்டோக்கள் பாலாஜி நர்சிங் ஹோம் – சன்னதி தெரு – ராஜம் மருத்துவமனை வழியாக இடது புறம் திரும்பி அய்யங்குளம் அக்ரஹார தெருவில் பயணிகளை இறக்கிவிட்டு – ரங்கா லாட்ஜ் தெருவழியாக திரும்பி செல்ல வேண்டும் (One Way) அல்லது ராஜம் மருத்துவமணை அடைந்து வலதுபுறம் திரும்பி கோபல் பிள்ளையார் தெருவில் பயணிகளை இறக்கிவிட்டு அண்ணா சிலை வழியாக செல்ல வேண்டும். (One Way)
• ரங்கா லாட்ஜ் சந்திப்பிலிருந்து ராஜம் மருத்துவமனைக்கு செல்ல அனுமதியில்லை.
• சன்னதி தெருவிலிருந்து (சக்கர குளம்) – ராஜம் மருத்துவமனை – கட்டபொம்மன் தெரு வரை (அண்ணாமலையார் ஹோட்டல்) ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• எஸ்.பி.ஐ வங்கி (கொசமடத்தெரு) சந்திப்பிலிருந்து ராஜம் மருத்துவமனைக்கு வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• அய்யங்குளத்தெரு சந்திப்பிலிருந்து ராஜம் மருத்துவமனை வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• காந்தி சிலையிலிருந்து தேரடி வீதி, கடலைகடை சந்திப்பு, கற்பக விநாயகர் கோவில் வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• பழைய மீனாட்சி தியேட்டர் சந்திப்பிலிருந்து ஆட்டோக்கள் அய்யங்குளம் தெரு வழியாக சுப்பிரமணி சுவாமி கோவில் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு (சர்கார் சிக்கன் சென்டர்) கரிகாலன் தெருவழியாக திரும்பி செல்ல வேண்டும். (One Way)
• பெரிய மசூதி மற்றும் கரிகாலன் சந்திப்பிலிருந்து அய்யங்குளம் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• அசோக்பில்லர், ரவுண்டானாவிலிருந்து சின்னகடை தெருவழியாக பூதநாராயணன் கோயில் சந்திப்பு வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• காமராஜர் சிலையிலிருந்து திருமஞ்சன கோபுரத்தெரு – கற்பகவிநாயகர் கோயில் வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• வடஒத்தவாடைத்தெரு, தென்ஒத்தவாடைத்தெரு, அம்மனியம்மன் கோபுரத்தெரு, ஆவாரங்காட்டுத்தெரு, ஆணைக்கட்டித்தெரு ஆகிய தெருக்களில் ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
• திருவண்ணாமலை நகரில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் பவுர்ணமி நாட்களில் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக வேறொரு நாட்களில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
• திருவண்ணாமலை நகருக்குள் செயல்படும் வங்கிகள் தங்களுக்கென சொந்தமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
• திருவண்ணாமலை நகருக்குள் அதிவேகமாக மற்றும் அதிக லோடுடன் செல்லும் வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டு பறிமுதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
• அண்ணா ஆர்ச் மற்றும் ஆதில் பிரியாணி கடை கார்னர் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றிட வருவாய்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
கேள்வி கணை தொடுத்த பிச்சாண்டி-கட் அண்ட் ரைட்டாக பதில் சொன்ன எ.வ.வேலு
வீடியோ…