திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அமைச்சர் எ.வ.வேலுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு சாலை திட்டப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலைக்கு புதிய கலெக்டராக திருப்பத்தூர் கலெக்டர் கே.தர்பகராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலையில் சில கலெக்டர்கள் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ள நிலையில் பதவி ஏற்ற ஒரு வருடத்தில் பாஸ்கர பாண்டியன் மாற்றப்பட்டிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் அவர் திருவண்ணாமலை கலெக்டராக பதவியேற்றார். தனக்கு விரைவில் டிரான்ஸ்பர் வந்து விடும் என்பதை கடந்த மாதம் நடைபெற்ற அரசியல் கட்சியினர் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பாஸ்கர பாண்டியன் அறிவித்திருந்தார். மேலும் தனது மாற்றத்தை எதிர்பார்த்து குடியிருப்பையும் திருவண்ணாமலையிலிருந்து மாற்றிக் கொண்டாராம்.
எ.வ.வேலுவின் குட்புக்கில் இருந்ததால் அவரது துறையிலேயே பாஸ்கர பாண்டியனுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற கார்த்திகை தீப திருவிழாவில் கோயிலுக்குள் போலீசாரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற அமைச்சரின் அறிவுரையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளில் அவர் இறங்கினார். காவல் துறையினருடன் இணைந்து வருவாய் துறையினரும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்தார்.
இந்நிலையில் தீபத் திருவிழா அன்று கோயிலுக்கு சென்ற கலெக்டரை போலீசார் தடுத்ததும் அதன் பிறகு ஏற்பட்ட வாக்குவாதமும் சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசுக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. அதே போல் போலீசுக்கு ஆதரவாக பதிவுகளும் வெளியிடப்பட்டன. காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
காவல்துறை பொறுப்பை முதலமைச்சர் வகித்து வரும் நிலையில் கலெக்டருக்கும், போலீசுக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு தலைமை உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இது பற்றி முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
அது முதற்கொண்டே கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. இதுமட்டுமன்றி ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை என 3 மாவட்டங்களிலும் அவர் கலெக்டராக பொறுப்பு வகித்து 40 மாதங்கள் ஆகிவிட்டதால் அவரது மாற்றம் உறுதி என்று அரசுத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அதன்படி அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர் தர்பகராஜ், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 1973 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி பிறந்த இவர் 2006 அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்து பிறகு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்றார்.
திருப்பத்தூர் கலெக்டராக நியமிக்கப்படுவதற்கு முன் இவர் மாநில இணை முறை அதிகாரியாகவும்(புரோட்டாகால்), ஆவடி மாநகராட்சி கமிஷனராகவும், அதன் பின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 24-வது கலெக்டராக அவர் நாளை மறுநாள் (3-2-2025) பதவியேற்கிறார்.