திருவண்ணாமலை அருகே 2 பேர் மீது மோதி விட்டு பாலத்திலிருந்து கார் பாய்ந்து கீழே விழுந்ததில் ஐடி கம்பெனி ஊழியர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
திருக்கோயிலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று திருவண்ணாமலை அடுத்த வெறையூர் அருகே டி.கல்லேரி என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த வாலிபர் மீதும் மோதியது.
பிறகு 15 அடி உயர டி.கல்லேரி பாலத்தின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மணிகூண்டு தெருவைச் சேர்ந்த பரந்தாமனின் மகன் ஸ்ரீதர்(வயது 29) என்பவர் தூக்கி வீசப்பட்டு பாலத்தின் அடியில் விழுந்து பலியானார். இறந்த ஸ்ரீதர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகாதவர்.
பாலத்தின் அடியில் கிடந்த அவரது உடலையும், காரில் பயணித்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
கார் மோதியதில் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த திருவண்ணாமலை சாரோனைச் சேர்ந்த விசுவாச ராஜ்குமார்(64), காரை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தை சேர்ந்த முத்துக்குமரன்(41), அவரது சகோதரர் முருகவேல்(33) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பாலத்திற்கு அடியில் விழுந்த காரை போலீசார் டிரேன் மூலம் தூக்கி ரோட்டின் ஓரம் நிறுத்தினர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து வெறையூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.