திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் புதியதாக கடைகள் கட்டும் பணியை துவக்கி உள்ளது.
ஆன்மீகத் தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி, தீபத் திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இவர்களால் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திற்கு மாதந்தோறும் ரூ.3 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வருகிறது.
ஆனால் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை. முக்கியமாக கார் பார்க்கிங் இல்லை. பக்தர்கள் பொருள் வைப்பறை இல்லை. சாலையோரம் தங்களது கார்களை நிறுத்தும் பக்தர்கள், போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் கட்டி செல்லும் நிலை உள்ளது. அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வரும் நிலையில் கிரிவலப் பாதையில் தனியார் நிதியில் கழிவறைகள் கட்டப்பட்டு வருவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் அறங்காவலர் குழு பதவியேற்றதும் முதன் முதலாக கோயில் நிதியிலிருந்து ராஜகோபுரம் முன்பு ரூ. 6 கோடியே 40 லட்சம் செலவில் கடைகள் கட்ட முயற்சித்தது. கோர்ட்டில் இதற்கு தடை விதிக்கப்பட்டது.
பக்தர்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தாமல் வருமானத்தை குறிக்கோளாக கொண்டு கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் குபேரலிங்க வளாகம் மற்றும் சைவ வேளாளர் மரபினருக்கு சொந்தமான காந்திநகர் சக்தி விநாயகர் கோயில் அருகிலும் கடைகளை கட்டி வருகிறது.
சின்னகடைத் தெருவில் வீற்றிருக்கும் அண்ணாமலையார் கோயிலின் உபகோயிலான துர்க்கையம்மன் கோயில் எல்லை காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருவார்கள். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அந்த கோயில் வளாகத்தில் இல்லை. கோயிலுக்கு முன் இட வசதி இல்லாததால் பக்தர்கள் வரும் வாகனங்களை சாலையில்தான் நிறுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையில் துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் 6 கடைகளை கட்ட அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு இடையூராக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன. கடைகள் கட்டப்படும் இடத்தில் பாழடைந்த பழங்கால மண்டபம் ஒன்று உள்ளது. கடைகள் கட்டுவதற்கான அரசு அனுமதி விவரம், நிதி ஒதுக்கீடு போன்ற எந்தவிதமான அறிவிப்பு பலகையும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தால் அங்கு வைக்கப்படவில்லை. இதே போன்று குபேரலிங்கம் வளாகத்தில் கடைகள் கட்டப்படும் பகுதியிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட ஐகோர்ட்டு சமீபத்தில் தடை வைத்துள்ளது. கோயில் நிதியை வணிக கட்டிடங்களுக்கு பயன்படுத்த முடியாது என தலைமை நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அண்ணாமலையார் கோயிலில் நிர்வாகம் கடைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மீது வழக்கு தொடர ஆன்மீக அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.