அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற பூமி பூஜை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. பிறகு வேதபண்டிதரை வைத்து அதே இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலை, அத்தியந்தலில் இலங்கை தமிழர்கள் முகாம்கள் உள்ளன. இவர்களுக்கு திருவண்ணாமலை செங்கம் ரோடு காஞ்சி மடம் பக்கத்தில் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக வீடுகள் ரூ.11 கோடியே 2 லட்சத்து 13 ஆயிரம் செலவில் கட்டித்தரப்பட உள்ளது. மேலும் ரூ.2 கோடியே 55 லட்சம் செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட உள்ளது.
இந்த இடத்தில் மொத்தம் 136 வீடுகள், ஒரு வீடு ரூ.8லட்சத்து 10 ஆயிரத்து 390 என்ற மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. ஒரு அடுக்கில் தரை தளத்தில் 4 வீடுகளும், முதல் தளத்தில் 4 வீடுகளும் அமைய உள்ளன. இப்படி அடுத்தடுத்து 17 கட்டிடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இக்குடியிருப்பு பகுதிக்கு ரூ.2கோடியே 55 லட்சம் செலவில் 30ஆயிரம் லிட்டர் கொண்ட மேநீர் தேக்கத்தொட்டி, குடிநீர் விநியோக பைப் லைன், சிமெண்ட் சாலை, சுற்றுச்சுவர் அமைத்தல், பக்க கால்வாய் அமைத்தல், ஆழ்துளை கிணறு, மின் மோட்டார், பம்பு ரூம், நுழைவு வாயில், மின்விளக்கு உள்பட பல அடிப்படை வசதிகள் செய்து தரப்பட உள்ளது.
ஆனால் தங்களுக்கு தனித்தனி வீடுகள் தான் வேண்டும் என கேட்டு இலங்கை தமிழர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு 2 நாட்களாக சென்று மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வீடுகளை கட்டுவதற்கான பூமி பூஜை, இன்று காலை அமைச்சர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த அமைச்சர் எ.வ.வேலுவிடம், இலங்கை தமிழர்கள் தனித்தனி வீடுகள் கட்டித் தரவேண்டும் என முறையிட்டனர்.
அவர்களிடம் அமைச்சர் பேசியதாவது,
இங்கு தனித்தனி வீடுகள் கட்டித் தர இடம் இல்லை. கீழ்தளம், மேல்தளம் இப்படித்தான் கட்ட முடியும். உங்களுக்கு தனித்தனி வீடுகள் வேண்டும் என்றால் சொரகொளத்தூர் அல்லது கனந்தம்பூண்டியில் கட்ட வேண்டும். எங்கு கொடுத்தாலும் இது அரசாங்க சொத்து. இது நகர பகுதியில் உள்ளது. 25-வது வார்டில் அமைந்துள்ளது. இதே போன்று மாடிவீடு கன்னியாகுமரியில் கட்டித் தந்துள்ளோம்.
உங்களையெல்லாம் வஞ்சிக்க கூடாது என்பதற்காக உணவுத்துறை மந்திரியாக நான் இருந்த போது கருணாநிதியிடம் பேசி உங்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு கொடுத்தேன். உணர்வுபூர்வமாக உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பதால், உங்களை யாரும் தூரமாக வைத்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் இங்கு வீடுகளை கட்டித் தருகிறோம். எனவே உங்களுக்குள் பேசி விட்டு சொல்லுங்கள்
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதைத் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் கலந்து பேசி, கனந்தம்பூண்டியில் தனித்தனி வீடுகளை கட்டித் தரும்படி கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பூமி பூஜை ரத்து செய்யப்பட்டது. மாலையில் கனந்தம்பூண்டியில் பூமி பூஜை நடைபெறுவதாக இருந்தது.
இதற்கிடையில் அடிஅண்ணாமலையில் இருக்கும் இலங்கை தமிழர்கள், 25-வது வார்டிலேயே மாடி வீடு கொண்ட குடியிருப்புகளிலேயே வசிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஏற்கனவே அறிவித்திருந்த இடத்தில் வேதபண்டிதரை வைத்து வீடுகள் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது. அதிகாரபூர்வமாக வருகிற 14-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இது பற்றி அத்தியந்தல் இலங்கை தமிழர் குடியிருப்பு முகாம் தலைவர் ஜெனேஷிடம் கேட்டதற்கு பூமி பூஜை நடந்தது பற்றி தெரியாது. 2 நாட்கள் கழித்து முடிவை தெரிவிக்கிறோம் என கலெக்டரிடம் கூறியிருக்கிறோம். அரசு என்ன முடிவை எடுக்கிறேதோ அதை நீங்கள் ஏற்க வேண்டும் என கலெக்டர் சொல்லியிருக்கிறார் என்றார்.