திருவண்ணாமலை அருகே லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேரின் உடல்களில் தீப்பற்றியதில் ஒருவர் அதே இடத்தில் கருகி இறந்தார்.
அரியலூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கு சிமெண்ட் கலவை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே போல் தருமபுரியிலிருந்து திருவண்ணாமலைக்கு வைக்கோல் ஏற்றிச் செல்ல வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த 2 வாகனங்களும் இன்று அதிகாலை 4-30 மணி அளவில் திருவண்ணாமலை அருகே உள்ள பாய்ச்சல் பகுதியில் வந்த போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 வாகனங்களிலும் தீப்பிடித்தது. கன நேரத்தில் முன்புறம் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். லாரியின் பின்புறம் வரை தீயில் எரிந்து சேதமாகி இருந்தது. வேன் முன்புறம் முழுவதும் தீயில் கருகி இருந்தது.
இந்த விபத்தில் வைக்கோல் ஏற்ற வந்த வேனின் டிரைவர் பாலக்கோடு கலங்கல்பாடியைச் சேர்ந்த பிரபாகரன்(18) என்பவர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தார். அவருடன் வந்த பெரியசாமி(32) என்பவர் தீக்காயங்களுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.
அதே போல் லாரி டிரைவர் ரகுவின் (45) மீதும் தீப்பிடித்தது. அவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். 2 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தால் திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. மீட்பு பணி முடிந்ததும் வழக்கமான பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.