Homeசெய்திகள்ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட்-சொன்னதை செய்தார் கலெக்டர்

ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட்-சொன்னதை செய்தார் கலெக்டர்

வரி வசூலில் முன்னேற்றம் காட்டாத 2 ஊராட்சி செயலாளர்களை கலெக்டர் தர்ப்பகராஜ் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் க.தர்ப்பகராஜ் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடுகட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட்-சொன்னதை செய்தார் கலெக்டர்

மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக கேட்டறிந்து வருகிறார்.

பணிகளில் முன்னேற்றம் காட்டாத அலுவலர்களை எச்சரித்தார். பணிகளை முடிக்கும் தேதியை ஒப்பந்ததாரர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 4-ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தச்சம்பட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதை கண்டறிந்தார். உடனடியாக இந்த கட்டிடத்தை கட்ட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ‘நடக்காது, முடியாது, இயலாது’ என்பது எனக்கு கெட்ட வார்த்தை. அடுத்த மீட்டிங் வேற லெவலில் இருக்கும். அடுத்த முறை கம்ப்யூட்டர் அருகில் இருக்கும். ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட் தான் என அவர் அலுவலர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை, செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 2-வது முறையாக கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆய்வு கூட்டத்தில் கண்டியாங்குப்பம் ஊராட்சி செயலாளர் தவமணி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் கண்டியாங்குப்பம் ஊராட்சி கணக்குகளை கலெக்டர் ஆய்வு செய்த போது வரிவசூல் கணக்கில் ஜீரோ என்று இருந்ததை கண்டறிந்தார்.

ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட்-சொன்னதை செய்தார் கலெக்டர்
புதுப்பாளையம் பிடிஓ ஆபீஸ் கட்டுமான பணிகள் ஆய்வு

இதையடுத்து அந்த ஊராட்சி ஊராட்சி செயலர் தவமணி, கிராம வரி இனங்களில் முன்னேற்றம் காண்பிக்காதது மற்றும் வசூல் செய்யப்படாமல் இருந்துள்ளது, மேலும் உரிய முன் அனுமதி எதுவும் பெறாமல் தன்னிச்சையாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது போன்ற காரணத்திற்காக அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவில் கலெக்டர் கையெழுத்திட்டு ஊராட்சி பணியாளரிடம் அந்த கூட்டத்திலேயே வழங்கினார்.

இதே போல் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் சே.நாச்சிப்பட்டு கிராம ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி செயலர் சவுந்தரராஜன், கிராம வரி இனங்களில் முன்னேற்றம் காண்பிக்காதது மற்றும் வசூல் செய்யப்படாமல் இருந்துள்ளது, ஊராட்சி கணக்குகள் மற்றும் பதிவேடுகள் முறையாக பராமரிக்க தவறியுள்ளது ஆகியவற்றை கண்டறிந்து அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவும் அந்த கூட்டத்திலேயே வழங்கப்பட்டது.

சொன்னபடியே கலெக்டர், ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட் செய்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!