திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வீடு-கடைகளை அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளது.
திருவண்ணாமலை உலக புகழ்மிக்க ஆன்மிக நகரமாக விளங்கி வருகிறது. இங்கு தென்னகத்தின் கயிலாயம் என போற்றப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலை தரிசிக்கவும், கிரிவலம் சென்று வழிபடவும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை நகரில் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கார், வேன், ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விடும் போது குறுகலான சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக பெரியார் சிலையிலிருந்து வாகனங்கள் கட்டபொம்மன் தெரு வழியாக போக்குவரத்து போலீசாரால் திருப்பி விடப்படுகிறது. கட்டபொம்மன் தெரு, திருக்கோயிலூர் சாலையை இணைக்கும் பிரதான சாலையாகும்.
நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இந்த சாலை இருந்து வருகிறது. 25 வருடங்களுக்கு முன்பு பஸ் போக்குவரத்து நடைபெற்ற இச்சாலை காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் குறுகி விட்டது.
இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து இச்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி மேற்பார்வையில் கட்டபொம்மன் தெருவில் ஆக்கிரமிப்புகளை அளவீடு பணியை நில அளவை துறையினர் நேற்று துவக்கினர்.
ஒவ்வொரு வீடு, கடைகள், பட்டா இடத்தையும் மீறி எவ்வளவு தூரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பதை டேப் பிடித்து நில அளவை அலுவலர்கள் அளந்து குறிப்பெடுத்துக் கொண்டனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ப.ஞானவேல், உதவி கோட்ட பொறியாளர் கே.அன்பரசு, தாசில்தார் கே.துரைராஜ், நகர சார்ஆய்வாளர் சென்னையன், வருவாய் ஆய்வாளர் கோபால், சாலை ஆய்வாளர் எம்.ரமேஷ் உடனிருந்தனர்.
திருவள்ளூர் சிலை வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அளவீடு செய்யும் பணி 1 வார காலம் நடைபெறும் என்றும், இப்பணி முடிந்த பிறகு வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், அதன்பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளாத வீடு, கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள அளவு வரை இடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் நாச்சிப்பட்டில் அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது கட்டபொம்மன் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.