திருவண்ணாமலை புத்தக திருவிழாவில் தான் எழுதிய ‘கடவுளே கடவுளே’ பாடலை அமைச்சர் எ.வ.வேலு பாடி காட்டினார்.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நுலக இயக்ககம் இணைந்து நடத்திய புத்தக திருவிழாவில் ஆயிரம் வாசிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமாரோடு அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வாசிப்பாளர்களுக்கு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் 1100 ரூபாய் கொடுத்து இங்கிருந்து தொடங்கலாம் என்ற வாசிப்பிற்கான இந்த செயல் திட்டத்தில் இணைந்து கொண்டால் 1500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்குகின்ற நிகழ்ச்சியை தென்பெண்ணை இலக்கிய சமவெளி சிறப்பாக நடத்தியுள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு இனங்கள் மற்றும் பண்பாடுகளின் வெளிப்பாடுகள் ஆற்றங்கறையில் தான் தொடங்குகிறது. அவ்வாறு நம் பகுதியில் அடையாளமாக உள்ளது தென்பெண்ணையாறு ஆகும். பாராதியார் தனது பாடல்களில் தென்பெண்ணையாறை குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர்கள் என்பவர்கள் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். சமுதாயம் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு எழுத்தாளர்கள் அவசியம்.
திரைக்கலைஞர் சிவக்குமார் கலைமாமணி விருது பெற்றவர். நண்பர் சிவகுமார் நடிகராக ஆவதற்கு முன் ஆன்மீக மண்ணாக இருக்கிற திருவண்ணாமலைக்கு வந்து போனவர்களில் அவர் ஒருத்தர். பார்க் ஓட்டலில் தங்கி இந்த மலையை ஓவியமாக வரைந்தவர் அவர்.
1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம்தான் அவர் முதல் முதலாக அறிமுகமானார். சினிமாத்துறையில் ஐந்து படம் நடித்தாலே காலரை தூக்கி விட்டுக் கொள்வார்கள். நானும் திரைப்படம் எடுத்தவன். 10 படம் எடுத்தாலே நாற்காலியை போட்டுக் கொண்டு நான்தான் முதலமைச்சர் என்று சொல்லும் காலம் இந்த காலம்.
எனது குடும்பத்தில் அறக்கட்டளை ஆரம்பித்து கல்வி நிலையங்களை துவக்கினார்கள். அதில் எனக்கு சட்டரீதியாக சம்பந்தமே இல்லை. கல்லூரி மாணவர்களோடு கலந்து கொள்கிற வாய்ப்பு உண்டு. நான்கு நிகழ்ச்சியாவது ஒரு ஆண்டுக்கு நடக்கும். கலை விழா, ஹாஸ்டல் டே, ஆண்டு விழா, ஒர்க்ஷாப், செமினார் என நடக்கும். அப்படி நடக்கும் போது பழைய பல்லவியையே பாட முடியாது. மாணவர்கள் விசில் அடித்து உட்கார வைத்து விடுவார்கள்.
கல்லூரியில் பேசுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசி கைதட்டல் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. நான் ஒருமுறை கலை விழாவிற்காக ஒரு பிரபல நடிகரை அழைத்து வந்தேன். அந்த நடிகர் பேசுவதற்கு முன்பே பேசி கைத்தட்டல் வாங்கினால் தான் நமது பிழைப்பு நடக்கும் என்று மாணவர்கள் மத்தியில் பாட்டு பாடி விடலாம் என நினைத்து அடித்து விட்டேன் ஒரு பாட்டு. நாடகத்தில் நான் நடித்த பாட்டை எடுத்து விட்டேன். மாணவர்கள் கைதட்டி விசில் அடித்தனர். அதன் பிறகு நடிகரின் பேச்சு எடுபடாமலேயே போய் விட்டது. ஏனென்றால் அவருக்கு பாட தெரியாது.
இவ்வாறு பேசிக் கொண்டிருந்த எ.வ.வேலு, அந்த பாடலை பாடிக் காட்டினார். அவர் பாடிய பாடல்.
‘மொச்ச கொட்ட கடலை சுண்டல் வச்சிக்கிட்டு தின்னதால பிச்சிக்கிட்டு போகுதய்யா கடவுளே சிரங்கு பிச்சுகிட்டு போகுதய்யா கடவுளே, காயாத பால கொஞ்சம் காப்பி போட்டு குடிச்சதால கையெல்லாம் பிக்குதய்யா கடவுளே, சிரங்கு கையெல்லாம் பிக்குதய்யா கடவுளே’
இந்த பாடலை அந்த காலத்தில் தானே எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.
விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாவட்ட நூலக அலுவலர் (பொ) வள்ளி, பொது செயலாளர் முருகன், எழுத்தாளர் பவாசெல்லதுரை மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.