இந்த வருடம் மகா சிவராத்திரி திருவோண நட்சத்திரத்தில் வரும் மகாப் புண்ணியத் திருநாள்.
பரஞ்சோதியின் அடி முடி காண முடியாமல் தோற்று வெட்கம் அடைந்து மீண்ட பிரம்மனும், விஷ்ணுவும் தங்களுக்கு மேலே எல்லாம் வல்ல ஒரு பரம்பொருள் பரபிரும்மம் உள்ளது என்று உணர்ந்து பக்தியுடன் கை கூப்பித் துதித்து வணங்கிப் போற்றித் தொழுத போது பரமேசுவரன் தழல் தூண் நடுவிலிருந்து, சோதி லிங்கத்திலிருந்து திருமுடியும் திருவடியும் மறைந்திருக்குமாறு மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி புதன்கிழமை திருவோண நட்சத்திர நாளில் அரி அயனுக்குத் திருக் காட்சி தந்தார்.
பிரம்ம விஷ்ணுக்களுக்கு அடி முடி மறைந்துள்ள லிங்கோற்பவர் காட்சி தந்த நாளே மகா சிவராத்திரித் திருநாள்.
மகா சிவராத்திரிப் புண்ணியத் திரு நாளில் உண்ணக் கூடாது உறங்கக் கூடாது என்பவை கட்டாயம் அல்ல. எல்லோராலும் முடியாது. ஒரு வேளை இருவேளை உணவு, வெறும் பழம் மட்டுமே உணவு என்று இருப்பவரும் உண்டு.
சிவத் தொண்டு
கோயிலுக்கு விபூதி இல்லாமல் வருபவர்க்கு விபூதி இட்டாலும் கொடுத்தாலும் அது மெய்யான பெரிய தொண்டே. நமசிவாய மகா மந்திரம் நான்கு வேத மந்திரங்களையும் ஓதும் பலனை விட அதிகமான பலன் தருவது. மகா சிவராத்திரி சிவத் தொண்டு மகிமை. சீரிய சிவனடியார்க்கு யாராலும் மரணம் இல்லை என்று. ஈசனது எல்லையில்லாத கருணையையும், தொண்டின் சிறப்பையும் அடியார் பெருமையையும் காட்டுவது மகா பலி வரலாறு.
சப்த விடங்கத் தலங்களில் ஏழு தியாகராஜர் சோமாஸ்கந்தர் தலங்களில் ஒன்றான திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் இரவு முழுவதும் எரிய வேண்டும் என்று ஏற்றப்பட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரி உள்ளே சென்று அணையும் நிலையில் இருந்த போது அதை உண்பதற்கு வந்த எலியின் மூக்கு பட்டதால் திரி தூண்டப்பட்டுப் பிரகாசமாக விளக்கு எரியலாயிற்று.
சிவ பரம்பொருள் கோயிலில் விளக்கேற்றிய புண்ணியப் பலனாக அந்த எலியைப் பரமேஸ்வரன் மண்ணுலகம் மட்டுமன்றி விண்ணும் வான உலகம் அனைத்தும் ஆளும் மாபெரும் சக்தி மிக்க சக்கரவர்த்தியாக மகா பலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் .
ஈசன் அருள் பெற்ற மகா பலிச் சக்கரவர்த்தி மகா விஷ்ணுவாலும் கொல்ல முடியாத வாழ்வு பெற்றார். விளக்கின் காரணமாக உண்டான பெரு வாழ்வால் வேதாரண்யம் விளக்கு அழகு என்ற பழமொழி உண்டானது.
சிலந்தியாக இருந்து செய்த திருப் பணியால் ஜம்புத் தீவு முழுவதும் ஆளும் சோழச் சக்கரவர்த்தி ஆனவர் கோச்செங்கணார்.
மகா சிவராத்திரி அன்று கண் விழிப்பது முக்கியம் அல்ல. எப்படிக் கண் விழிப்பது என்பதே மிக முக்கியம். சிவ நினைவோடு சிவ நாமம் ஓதி ஈசன் மகிமை பேசி தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைத் தோத்திரம் சொல்லிக் கண் விழிக்க வேண்டும்.
சிவ சகஸ்ர நாமம், ஆயிரம் சிவ நாமம் ஓத வேண்டும். தெய்வ பாலகர் தேவாரத்தில் எல்லாப் பதிகங்களிலும் ஒன்பதாம் பாடல்கள் லிங்கம் லிங்கோற்பவர் துதி. இவற்றை ஓதினால் அளவு கடந்த புண்ணியம். எந்தத் துதியும் சொல்ல முடியவில்லை என்றால், ஆயிரம் நாமம் ஓத முடியவில்லை என்றால் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் என்ற மகா மந்திரமே போதும். இதை மவுனமாகவோ வாய்விட்டோ ஓதலாம். ஓதி ஓதி ஏட்டிலும் எழுதலாம்.
லிங்கோற்பவரைப் பூசிக்காமல் சிவராத்திரி பூசை முழுமை பெறாது. திருவாசகத்தில் பல பாடல்கள் லிங்கோற்பவர் துதியாக உள்ளன. திருஞான சம்பந்தர் தேவாரத் திருப் பதிகங்களில் ஒன்பதாம் பாடல்கள் லிங்கம் மற்றும் லிங்கோற்பவர் துதி.
முழுத் திருமேனியும் காண முடியாதவாறு திருமுடியும் திருவடியும் மறைந்து இருக்கும் லிங்கோற்பவரின் திருக் காட்சி கண்ட அயன் திருமால் மும்மலம் நீங்கி முழுத் தூய்மை அடைந்த பின் நெருப்புத் தூண் அணைந்து மலையாகித் திரு அண்ணா மலை என்று பெயர் பெற்றது.
பிரம்மன் விஷ்ணு பிரதிஷ்டை செய்து பூசித்த கல் தூண், கல் லிங்கம் காட்சி தரும் இடமே அடி யண்ணா மலை என்று வழங்கப்படும் ஆதி அண்ணா மலையார் கோயில்.
சிவராத்திரி அன்று கோயிலில் வீட்டில் இரவு முழுவதும் எரியுமாறு சுத்தப் பசு நெய்யால் விளக்கேற்றுவது அளவு இல்லாத மகா புண்ணியம். மறு நாள் காலையில் குளித்து நித்ய பூஜை செய்யும் வரை விளக்கு எரிய வேண்டும். சிவராத்திரி அன்று மற்ற இடங்களில் அன்னதானம் செய்யலாம். ஆனால் அன்று கோயிலில் அன்ன தானம் செய்யக் கூடாது. அது உண்ணா விரதம் பூஜை பக்தி என்று இருக்கும் பக்தர்களை ஏளனப் படுத்தும் பாவமே ஆகும். அன்ன தானப் புண்ணியம் உண்டாகாது.
சிவ பூஜை செய்யும் முறை
வீட்டில் நந்தியுடன் லிங்கம், நடராஜர், நந்தி வாகனர், தட்சிணா மூர்த்தி, மூன்று கரத்து இருபால் ஈசர் அர்த நாரீசர் எனப்படும் அலிப் பெருமான் தந்தை தாயன் தாயுமானவர், லிங்கோற்பவர் ஆகிய படங்களையும் விக்கிரங்களையும் பூஜிக்கலாம். லிங்கத்தில் ஸ்படிக லிங்கம் விசேஷம். முழு ஸ்படிகமாக இருக்கலாம் அல்லது ஆவுடையாரும் பீடமும் உலோகத்தில் அமைய பாணம் மட்டும் ஸ்படிகமாக இருக்கலாம். பாணம் மட்டும் ஸ்படிகம் என்றால் அது சுயம்பு லிங்கம் ஆதலால் மிகவும் சிறப்பு.
கிடைக்கும் நல்ல பூ, இலை, அறுகம் புல் சார்த்தி பழம் அல்லது உலர்ந்த திராட்சை, நாட்டுக் கற்கண்டு நைவேத்யம் செய்து தூபம் பசுநெய் தீபம் காட்டி கற்பூரம் ஏற்றி மணியடித்து நித்ய பூஜை செய்ய வேண்டும். முழம் போட்ட பூ மாலை கூடாது. நூலில் தொடுத்த மாலை கூடாது.
சிவப் படங்களை விக்கிரகங்களை வேறு எதற்கும் பயன்படுத்தாத சுத்தமான ஈரத் துணியால் துடைக்க வேண்டும். விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்த பின் விபூதி, விபூதி நடுவே சந்தனம், சந்தனம் நடுவே குங்குமம் இட வேண்டும். சந்தனம் இளநீர் பன்னீர் என வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் சுத்தமான நீரே அபிஷேகத்திற்குப் போதுமானது.
பசும்பால், பசுந்தயிர், பசு, வெண்ணெய், பசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற பால், பிற பால் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
-சிவப்பிரியா
அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 26-ஆம் தேதி நள்ளிரவு லிங்கோத்பவருக்கு தாழம்பூ வைத்து பூஜை செய்யப்படும். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
26-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி முதல் 27-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதன் விவரம் வருமாறு
26-ஆம் தேதி மாலை 5 மணி-மங்கல இசை, 5-30 மணி-திருமுறை விண்ணப்பம், 6 மணி-கயிலாய வாத்தியம், 6-30 மணி- கர்நாடக இசை, 7-30 மணி-இந்து சமய வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது பக்தியா? தொண்டா? என்ற தலைப்பில் சுகிசிவம் நடுவராக இருக்கும் பட்டிமன்றம்.
இரவு 9 மணி – வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், 10 மணி-கிராமிய நிகழ்வுகள். 11 மணி-இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பக்தி இசை. நள்ளிரவு 1 மணி-நாட்டிய நாடகம். 2 மணி- நாத சங்கமம். 3 மணி-கலை நிகழ்ச்சிகள். விடியற்காலை 4 மணியிலிருந்து 6 மணி வரை இசை சங்கமம்.