திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தது. லிங்ககோத்பவர் மீது சிவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ வைத்து பூஜை செய்யப்பட்டது.
சிவராத்திரி நாயகன்
லிங்கோற்பவர். அண்ணாமலையார் சிவராத்திரி நாயகன். தாமே பரம்பொருள் என்று வாதிட்டு வான் பாதாளம் ஆகிய அனைத்து உலகங்களையும் கடந்து பரவி நின்ற நெருப்புத் தூண் சோதி லிங்கத்தின் அடி முடி காண முடியாமல் தோற்ற அரியும் அயனும் நமச்சிவாய நாமம் ஓதி பக்தியுடன் தொழுத போது சோதி லிங்கத்திலிந்து அடிமுடி மறைந்திருக்குமாறு மான் மழு தாங்கி அபய வரத கரங்களுடன் வெளிப்பட்டுத் திருக் காட்சி அருளிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் லிங்கோற்பவர் .
பிரம்மன் விஷ்ணுக்களுக்கு லிங்கோற்பவர் திருக் காட்சி அருளிய கிழமை புதன். நட்சத்திரம்- திரு ஓணம். தலம்- திருவண்ணா மலை. நேரம்- பின் இரவு. அந்தத் திரு நாளே மகா சிவராத்திரிப் புனிதப் புண்ணியப் பெரு நாள். ஜோதி லிங்கம் அணைந்து மலை யானது. அதுவே திரு அண்ணா மலை.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறம் சுவற்றில் லிங்கோத்பவர் அமைய பெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இவரை வழிபடுவர்களின் ஆணவத்தை அவர் அகற்றி விடுவார் என்பது ஐதீகம்.
நேற்று சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது.
லிங்கோத்பவருக்கு மஞ்சள்¸ பால்¸ சந்தனம்¸ தயிர்¸ பஞ்சாமிரதம்¸ ருத்ராட்சம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சிவராத்திரி அன்று மட்டுமே பயன்படுத்தப்படும் தாழம்பூ லிங்கோத்பவர் மீது வைக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
தன்னுடைய அடிமுடியை பிரம்மா கண்டதாக பொய் சாட்சி கூறிய தாழம்பூவை இறைவன் இனி எந்த பூஜைக்கும் நீ ஏற்றதல்ல என சபித்தார். தாழம்பூ மனம் வருந்தவே சிவராத்திரி அன்று மட்டும் பூஜையில் பங்கேற்கும் வரம் அதற்கு கிடைத்ததாக வரலாறு.
நள்ளிரவு நடைபெற்ற லிங்கோத்பவர் பூஜையை காண கோயிலுக்குள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர்.
பெருஞ்சலங்கை ஆட்டம்
திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் அண்ணாமலையார் கோயில் சார்பில் சிவராத்திரியை யொட்டி விடிய, விடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நள்ளிரவு நடைபெற்ற வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் நடந்தன. பெருஞ்சலங்கையாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் 2 கால்களிலும் சலங்கைகளை கட்டிக் கொண்டு அதில் உள்ள மணிகள் அனைத்தும் ஒலிக்க ஆடிய ஆட்டம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
படங்கள்-பார்த்திபன்